(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’
(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)
என்று சாமிநாத( ஐய)ரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மாயூரம் சென்றதும் தம் அனுபவத்தை( ஐய)ரவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு, எவ்வளவுக்-கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்-கவ்வளவு எனக்கு உற்சாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, இலாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.’
(என் சரித்திரம்; பக்கம்; 187)
என்று குறிப்பிட்டுள்ளார்,

மாயூரம் சென்ற சாமிநாத( ஐய)ர் ஆசிரியரால் சாமிநாத( ஐய)ர் என்று அழைக்கப் பெற்றார். வீட்டில் வேங்கடராமனாகவும், சாமாவாகவும் அழைக்கப் பெற்றவர் ஆசிரியர் அழைத்த காரணத்தால் அன்றிலிருந்து சாமிநாத( ஐய)ர் என்றே அழைக்கப் பெற்று வந்தார். பெற்றோர் வழங்கிய பெயர் நிலைக்காமல் ஆசிரியர் இட்ட பெயரே பின்னர் நிலைத்து விட்டது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை) அவர்கள் இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், அவரிடம் நூல்களைப் பாடங்கேற்பதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக அந்நாளில் விளங்கிவந்த சுப்பிரமணிய தேசிகரோடும், அந்த மடத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழ்ப் புலவர்களுடனும், வடமொழி வாணரோடும். சங்கீத வித்துவானோடும் நெருங்கிப் பழகி உரையாடுவதும் சாமிநாத( ஐய)ர் அவர்களுடைய அந்நாளைய செயல்களாக விளங்கின.

ஆசிரியர் மறைவும் மாணவர் பரிவும்

1876ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்( பிள்ளை) அவர்கள் காலமானார்கள். ‘19ஆம் நூற்றாண்டின் கம்பன்’ என்று பாராட்டப் பெற்ற (பிள்ளை) அவர்கள், நாள் ஒன்றுக்கு 300 பாடல்கள் பாடினார் என்பர். இவர் 19 தலபுராணங்களும், 10 பிள்ளைத் தமிழ் நூல்களும், 4 மாலைகளும், 16 அந்தாதிகளும் பாடினார். இவருடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பலராலும் பாராட்டப் பெறுவது. இத்தகு கல்விப் புலமை நிறைந்த ஆசிரியர் காலமானதால் சாமிநாத( ஐய)ர் பெரிதும் வருந்தினார். ஆசிரியருடைய கல்விப் பரப்பு, பாடம் சொல்லும் திறம், பண்பு நலம், செய்யுள் இயற்றும் புலமை முதலியவற்றையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எனவே, ஆசிரியர் மறைவுக்குச் பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் இவர் பாடம் கேட்டுக் கொண்டே ஆதீனத்துக்கு வந்த மாணாக்கர்களுக்குத் தாம் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.

திரு. தியாகராச(ச் செட்டியா)ர் தொடர்பு

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த திரு. தியாகராச(ச் செட்டியா)ர் ஆவார். தியாகராச(ச் செட்டியா)ர் அவர்கள் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர். பரந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியர்கள் போலவே இவர் அந்தக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்தார். அவர் ஒரு நாள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அனுமதி பெற்றுச் சாமிநாத( ஐய)ர் அவர்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய்த் தாம் பார்த்துவந்த பதவியை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். 1880ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் முதல் சாமிநாத (ஐய)ர் குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்ற தமிழ்க் கல்வியும், அறிவாற்றலும், பாடம் சொல்லும் திறமையும், சாமிநாத( ஐய)ர் அவர்களைக் குறுகிய காலத்திலேயே மாணவரிடத்திலும் பேராசிரியப் பெருமக்களிடத்திலும் ஒருங்கே நற்புகழ் பெறத் துணை செய்தன.

பதிப்புப் பணி

இக்காலத்தில் கும்பகோணத்தில் மாவட்ட முனிசீபாக இருந்த சேலம் இராமசாமி (முதலியார்) தொடர்பு சாமிநாத ஐயருக்கு வாய்த்தது. முதலியார் அவர்கள் நிறைந்த தமிழ்ப் பற்றாளர்; புலமை நெஞ்சம் வாய்ந்தவர். எனவே சீவகசிந்தாமணியைச் சாமிநாத(ஐய)ரிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். பின் அந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று வேண்டினார். அதுவரை சிந்தாமணி ஒரு சிலருக்கு மட்டுமே ஓலைச்சுவடி வடிவில் காட்சி வழங்கிக் கொண்டிருந்தது. பழம் பெருமை வாய்ந்த-தொன்மை வாய்ந்த-தமிழ் இலக்கியங்கள் பல கடல்கோளாலும், தமிழர் கவனக் குறைவாலும் அழிந்து ஒழிந்தன. இறையனார் களவியல் உரை குறிப்பிடும் பல இயற்றமிழ் நூல்களும், இசைத்தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் பெயர் அளவில் தெரிய வருகின்றனவே அன்றி, அவை இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,

‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’

என்று தமிழகத்தின் தென்பகுதி வெள்ளத்தால் அழிந்த செய்தியினைப் புலப்படுத்தி-யுள்ளார். சாமிநாத( ஐய)ரும் அவர் வாழ்ந்த காலத்தில் மூடபக்தி நிறைந்த பொதுமக்கள் சிவ ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்ட அவல நிலையினைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்.

ஆடி மாதம் 18ஆம் தேதியில் பழஞ் சுவடிகளை எல்லாம் சேர்த்து ஒரு சப்பரத்தில் வைத்து மேள தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.’
(என் சரித்திரம்; பக்கம்: 85)

என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஓலைச்சுவடி விடுவோரிடமிருந்து பெற்றுப் பழம்பெரும் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்கு உரியவராகச் சாமிநாத ஐயர் விளங்குகிறார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்