(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை)

இலக்குவனாரின்பழந்தமிழ்’ – 1

1. மொழியின் சிறப்பு

 மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு.

  மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே  செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும்  சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர் உதவியை நாட வேண்டியிருப்பின், மொழியின் துணையின்றி முடியாது. மொழியின் துணைகொண்டே நம் கருத்தைப் பிறர்க்கு விளக்கிக் கூறி  அவர் உதவியையும் கூட்டுறவையும் பெற  இயலும். ஆதலின் பிறருடன் உறவாடக் கூடிய மொழியின்றேல் நமக்குப் பிறர் துணையும் இன்றாம். பிறர் துணையின்றேல் செயற்கரும் செயல்களைச் செய்து முடிப்பதும் இன்றாம். நமது நாகரிகத்தையும் பண்பாட்டையும்  உருவாக்குவதற்குத் துணைபுரியும் அனைத்தும், பலரின் கூட்டுறவால் உருவாகக் கூடியனவே. உயர்ந்த மாளிகைகளும், பெரிய பாலங்களும், நுட்பம் வாய்ந்த பொறி நிலையங்களும், வினைத்திறன் மிக்க வான ஊர்திகளும், எளிதில் அறிவதற் கியலாத விண்வெளிக் கூண்டுகளும், தனி ஒருவர் அமைத்தன வன்றே? மதி நுட்பமும் நூலறிவும் உடையர் பலர் சேர்ந்தன்றோ அவற்றை அமைத்துள்ளனர். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து, பிறர் கூறுவது என்னவெனத் தாம் விளங்கிக் கொண்டு எப்பொழுது தமது முறையெனத் தேர்ந்து கடனாற்றி யமையால்தான் அவற்றை உருவாக்க முடிந்தது. அவர்களுக் கிடையில் நிலவிய மொழியுணர் ஆற்றலை அகற்றிவிடின் ஒருவர் கருத்தை ஒருவர்  உணர முடியாது தனித்து நிற்பர்;  பழைய விலங்கு நிலைக்கு ஆளாகுவர். ஆதலின் கூடி வாழும் இயல்பு பெற்றுள்ள மக்களுக்குத் தம் கருத்தை வெளிப்படுத்தும் மொழியொன்று வேண்டப்படுகின்றது. கருத்தை வெளிப்படுத்துவதற்குத் துணைபுரியக் கூடியனவும் உள. குறிகள், அடை யாளங்கள், முகக்குறிப்புகள், கைச்சாடைகள், ஓவியங்கள், எழுத்துகள் என அவை பலவாம். ஆயினும் மொழியே இவற்றுள் தலையாயது. மொழியென்பது மொழியப்படுவது. வாயால்  மொழிந்து காதால் கேட்கப்படுவது. மொழி எனத் தமிழர்கள் பெயரிட்டுள்ளமை மிகவும் பொருத்தமுடையதாகும். ‘language’ என்ற சொல்லுக்கு நாவால் உண்டாக்கப்படுவது என்று பொருளாகும். நா மட்டும் இருந்தால் போதுமா? பல், உதடு, இவை பொருந்திய வாய் இன்றேல் மொழி ஒலி உண்டாகாதே. அன்றியும் ஒலிக்கப்பட்ட ஒலி பிறரால் கேட்கப்படவும் வேண்டுமே. ஆதலின் மொழி என்பது பொருள் பொதிந்த ஒலியை வாயினின்றும் எழுப்ப, அதனைக் காது கேட்டற்குரியதாகும். பொருள் பொதிந்த ஒலியைத் தோற்றுவிக்கவும், அப்பொருளை அறிந்து கொள்ளவும் மூளை வேண்டும். மூளை, வாய், காது இம்மூன்றும் மொழியைத் தோற்றுவிக்கும் இன்றியமையா உறுப்புகள் எனலாம்.

  ஏனைய உயிர்களும் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. நாய்கள் குரைக்கின்றன; பூனைகள் கத்துகின்றன; அரிமாக்கள் முழங்கு கின்றன; ஆடுகள் அலறுகின்றன; குதிரைகள் கனைக்கின்றன; களிறுகள் பிளிறுகின்றன; மயில்கள் அகவுகின்றன; காகங்கள் கரைகின்றன; குயில்கள் கூவுகின்றன. இவ்வாறு அவை ஒலிகளை எழுப்புதலால் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன என்பது உண்மைதான். என்றாலும் மக்களைப்போல் அவை வரம்பின்றி வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றில. மகிழ்ச்சி, அச்சம், பசி, சீற்றம் முதலிய உணர்ச்சிகளைத்தான் அவை வெளிப்படுத்தக் கூடுமேயன்றி, உள்ளத்தெழும் கருத்துகள் தொடர்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றில. மக்கள் வெளிப்படுத்தும் மொழியாம் ஒலி நூற்றாண்டுகள் தோறும் வேற்றுமையடைந்து வருகின்றது. அவர்தம் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழி ஒலிகளும் மாறுபாடடைகின்றன. ஏனைய உயிர்களோ பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எவ்வாறு ஒலிகளை வெளிப்படுத்தினவோ அவ்வாறே  இன்றும் வெளிப்படுத்தி வருகின்றன. ஒலியை வெளிப்படுத்தும் ஆற்றலில் பிற உயிர்கள் மக்களோடு ஒற்றுமை பெற்றிருக்கலாம். ஆனால் ஒலியை வெளிப்படுத்தும் ஆற்றலால் மக்கள் சிறப்படையவில்லை. குறிப்பிட்ட ஓர் ஒலிக்கு, குறிப்பிட்ட ஒரு கருத்து எனக்கொண்டு தம் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்கும் ஆற்றலிலேயே மக்கள் சிறந்து விளங்குகின்றனர். இவ்வாறு கருத்து அறிவிக்கும் ஒலிமுறையே மொழியெனப்படும்.

  மொழியின் தோற்றத்தை ஆராயப் புகுந்தோர் பலரும் பலவாறு தம் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அஃறிணை உயிர்கள் எழுப்பும் ஒலிகளைப் பின்பற்றி மக்கள் தம் மொழியை அமைத்துக் கொண்டனர் என்பாரும், இன்ப துன்ப நிகழ்ச்சிகளால் உணர்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கி, மொழியை உருவாக்கினர் என்பாரும் உளர். கடவுளே மொழியை மக்களுக்குக் கற்பித்தார் என்று கூறினாரும் உளர். மொழியின் தோற்றத்தை எவராலும் வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஊகித்து உரைக்கலாம்;  ஆனால் உண்மை காண்டல் அரிது. மொழியைப் பற்றி நமக்குள்ள சான்று எழுத்து ஒன்றே. ஆனால் எழுத்துமொழி தோன்றுவதற்கு முன்னர்ப் பேச்சுமொழி தோன்றியிருக்க வேண்டும். மொழி என்ற தமிழ்ப் பெயரே அதற்குத் தக்க சான்றாகும்.

 பேச்சுமொழிதான் மக்களை ஒன்றி வாழச் செய்கின்றது. ஆசிரியரை யணுகும் மாணவரும், மருத்துவரை நாடும் நோயாளியும், காதலியைத் தேடும்  காதலனும், மக்களைக் கொஞ்சும் தாயும், மெய்ப்பொருளை  அறிவிக்க விரும்பும் குருவும், கட்சியை வலுப்படுத்தும் தலைவரும் பேச்சுமொழி யின்றேல் ஒன்றும் செய்தற்கிலர். ஆயினும் ஆசிரியர் கூறும் அறிவுரையும், மருத்துவர் அறிவிக்கும் பிணி தீர்க்கும் முறையும்,  காதலன் உரைக்கும் காதல் மொழிகளும், அன்னை கொஞ்சும் தாலாட்டும், குரு வெளிப்படுத்தும்  மெய்யுணர்வுக் கொள்கைகளும், தலைவர் மொழியும் வீரஉரைகளும் நிலைத்திருக்கவும் நேரில் இல்லாதார்க்குத் தெரிவிக்கவும் உதவியாயிருக்கக் கண்டுபிடித்த முறையே எழுத்துமொழியாகும்.

  மொழி, பேச்சிலும் எழுத்திலும் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் வேறுபட்டுள்ளன. ஓரிடத்தில் தோன்றிய மொழியே காலப்போக்கில் இவ்வாறு வேறுபட்ட மொழிகளாகச் சிதைந்து வளர்ந்துள்ளன என்று கூறுவாருமுளர். இவ்வாறு கூறுவதை மெய்ப்பிப்பான் போல் சில சொற்கள் பல்வேறு மொழிகளில் காணப்படுகின்றன. தாய் தந்தையரைக் குறிக்கும் அம்மா, அப்பா என்ற சொற்களும், கப்பலைக் குறிக்கும் நாவாய் என்ற சொல்லும், பூனையைக் குறிக்கும் பூசை என்ற சொல்லும் பல்வேறு மொழிகளிலும் காணப்படுகின்றன. ஆனால் மொழி எவ்விடத்தில் எப்பொழுது தோன்றிற்று என்று திட்டவட்டமாகக் கூற இயலாது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்