(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 3/4 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4/4

பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி எழுதினார். தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவுப் பணி

1927 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில், சங்கக்காலம் பற்றிப் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு சங்கக் காலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற பெயரோடு புத்தக வடிவில் வந்திருக்கிறது. இவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இவர் குறுந்தொகைப் பதிப்பினை வெளியிட்டார். பதிப்பு நூல்களில் குறுந்தொகை நூலை முடிமணியாகக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அந்நூலில் உழைப்பின் உண்மையும், ஆராய்ச்சியின் உயர்வும் ஒருங்கே விளங்கக் காணலாம்.

பட்டமும் பாராட்டும்

அரசாங்கத்தார் இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1906ஆம் ஆண்டில் ‘மகாமகோபத்தியாய’ என்ற பட்டத்தை வழங்கினர். 1917ஆம் ஆண்டு ‘பாரத தர்ம மண்டலத்தார்’ ‘திராவிட வித்யா பூசணம்’ என்ற பட்டத்தையும், 1925ஆம் ஆண்டில் சரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஆகிய சிரீசங்கராச்சாரியார், தகதினாத்திய கலாநிதி என்ற பட்டத்தையும் வழங்கினர். சென்னைப் பல்கலைக் கழகம் ‘டாக்டர்’(டி.லிட்.) என்ற கெளரவப்பட்டத்தை 1932ஆம் ஆண்டில் வழங்கியது. பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூற் குழுவிலும் தேர்வுக் குழுவிலும் இவர் பணியாற்றினார்.

இறுதிக் காலம்

1936 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இவருக்கு 80 ஆண்டுகள் நிறைவு அடைந்ததும், தமிழுலகம் இவருடைய ‘சதாபிடேக’ விழாவைக் கொண்டாடியது. அவருடைய 80ஆம் வயதில் குறுந்தொகைப் பதிப்பும் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், குமரகுருபரர் திரட்டு ஆகிய நூல்களும் வெளிவந்தன. ஐயரவர்கள் தம் வரலாற்றை இரசிகமணி டி.கே சி., கல்கி கிருட்டிணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன் முதலியோர் வேண்டுகோளின்படி ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஜனவரி முதல் எழுதத் தொடங்கித் தொடர்ந்து 122 அத்தியாயங்கள் எழுதி முடித்தார். 1942ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்பிரல் மாதம் 28ஆம் தேதி (1942) உலக வாழ்வை நீத்தார். இவர் இறக்கும்போது இவருக்கு வயது 86. 1948ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

பண்பு நலன்

ஐயரவர்கள் சிறந்த பண்புள்ளவர். தம்மிடம் பேசுபவர்களுடைய இயல்பு அறிந்து பேசும் இயல்பும், தம்மிடம் தமிழ் படிக்க வரும் மாணாக்கரிடம் நிறைந்த பேரார்வமும் கொண்டவர், மாணவர்களின் தகுதியறிந்து பாடம் சொல்லும் திறமை பெற்றவர். பல அவைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார்; சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரோடு உரையாடும்போது பழஞ்செய்திகளையும் இலக்கியச் சுவை மலிந்த நூற்பகுதிகளையும் கேட்டு மகிழலாம். இவர் பேச்சில் நகைச்சுவை மிகுதியாக இருக்கும். தெளிவான நடை இவருக்குக் கைவந்த கலை. இவர் கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். தேசியகவி சுப்பிர மணிய பாரதியார் இவரிடம் பெருமதிப்புக் கொண்டு மூன்று பாடல்களை இவர் குறித்துப் பாடியுள்ளார். அவற்றில் நம் நெஞ்சை மகிழ வைக்கும் பாடற்பகுதி வருமாறு :

‘நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தங் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க;

குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
’ .இவருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் கலியாணசுந்தர(ஐய)ர். ஐயர் அவர்கள் சேமித்து வைத்திருந்த சுவடிகளையெல்லாம் அவர் அடையாறு கலாச்சேத்திராவிற்கு வழங்கினார். அடையாறு கலாச்சேத்திராவில் டாக்டர் சாமிநாத ஐயர் நூல் நிலையம் ஒன்று இப்பொழுது நடை பெற்று வருகிறது.

1955 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் இவருடைய நூற்றாண்டு விழா தமிழ்நாடு எங்கும் கொண்டாடப் பெற்றது.

இவர்தம் சிறப்பாகக் குறிக்கத்தக்க – நாம் விரும்பிப் போற்றத்தக்க பண்பு – இவருடைய நன்றிமறவா நல்லுள்ளம் ஆகும். தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராசச் செட்டியார் நினைவாக இவருடைய வீட்டின் பெயர் இன்றும் ‘தியாகராச விலாசம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு, 53ஆம் எண் வீடாக உள்ளது.

முடிவுரை

தமிழ்த் தாத்தா என்று சாமிநாத ஐயரவர்களைத் தமிழ் உலகம் கொண்டாடுகிறது. இவருடைய முயற்சியும், உழைப்பும் தமிழுக்கு அழியாத செல்வங்களைத் தந்தன. செல்லரித்துச் சிதைந்துபோன – கரையான் அரித்துத் திருத்தம் இழந்த நம் பழம்பெரும் இலக்கியங்களையெல்லாம் பேருழைப்பு மேற்கொண்டு திருத்தமாகப் பதிப்பித்து. தமிழர் கைகளில் தவழவைத்த தனிப்பெருமை இவர்களையே சாரும். இவர் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். இவர்தம் ஊக்கமும், முயற்சியும், தொண்டும் வாழ்வும், நன்றிமறவா நல்லுள்ளமும் என்றும் போற்றற் பாலனவாகும்.

முதல் அத்தியாயம் நிறைவு,

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்