சான்றோர் தமிழ்

1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் உத்தமதானபுரம் என்னும் சிற்றுாரில் சாமிநாத(ஐய)ர் பிறந்தார். உத்தமதான புரத்தைப் பற்றிச் சாமிநாத ஐயர் கூறும் சொற்கள் வருமாறு:

‘என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்-கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல செளகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; வீதிகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது; அமைதி இருந்தது. சனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் இலட்சுமி கரம் விளங்கியது.’ (என் சரித்திரம். பக்கம் : 4)
என்று கூறியுள்ளார்.

இளமையும் கல்வியும்

உத்தமதானபுரம் இரண்டே தெருக்களைக் கொண்ட சிற்றூராகும். அவ்வூரில் 19-2-1855ஆம் ஆண்டு சாமிநாத(ஐய)ர் அவர்கள் சங்கீத வித்துவானான வேங்கடசுப்ப (ஐய)ருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் முதல் மகனாகத் தோன்றினார். இளமையில் அவர் பெற்றோர் வறுமையில் பெரிதும் துன்புற்றிருந்தனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 50 உரூபாய் தான் அவர்களுக்கு வருமானமாக வந்தது. உடையார் பாளையம் அரண்மனையின் சமீன்தார் ஆதரவு ஓரளவு இக்குடும்ப வாழ்க்கையை நடத்திவரத் துணை செய்தது. சாமிநாதன் என்று குழந்தைக்குப் பெயரிட்டுச் செல்லமாக ‘சாமா’ என்று அழைத்து வந்தனர். வேங்கடராமன் என்ற பெயர் சாமிநாத ஐயருக்கு வழங்கி வந்தது காரணம் திருப்பதி வேங்கடாசலபதி அவர்களுடைய குலதெய்வம். தந்தையார் வேங்கடசுப்ப(ஐய)ர் சங்கீத வித்துவானான காரணத்தினால் ஆங்காங்கு சங்கீதத்தோடு கூடிய கதா காலட்சேபம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதன் காரணமாக ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்கும் வாழ்வே அவருக்கு அமைந்தது. வருங்காலத்தில் தம்முடைய மகனும் ஒரு சங்கீத வித்துவானாக வரவேண்டுமென்றே எண்ணினார். ஆனால் சாமிநாத(ஐய)ருக்குச் சங்கீதமும் சமசுகிருதமும் அவ்வளவாக வரவில்லை. தமிழே அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவர் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டிருந்தது. சாமிநாத(ஐய)ர் முதன் முதலாக அரியலூர் சடகோப( ஐயங்கா)ர் என்பவரிடத்தில் தமிழ் பயின்றார். சாமிநாத ஐயரே,

‘தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே.’
(என் சரித்திரம்; பக்கம் : 103)

என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செங்கணம் விருத்தாசல(ரெட்டியா)ர் என்பவரிடத்தில் தமிழ்க் கல்வி கற்றார். சாமிநாதருக்குத் தமிழில் இருந்த பேரார்வத்தை அறிந்து தமிழ்ப் புலவர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று தங்கி இவர் கல்வி கற்கும் வசதிகளை இவர் தந்தையார் விரும்பிச் செய்தார். இவ்வாறு கல்வி கற்றுவருங்கால், ஆசிரியருக்குச் சன்மானமாகத் தருவதற்குச் சாமிநாத( ஐயரி)டம் பணம் இல்லை என்பதோடு, ஆசிரியரோடு தங்கிப் படிக்கும்போது சாப்பிடுவதற்கு வசதியும் இல்லை. ஆதலால் தாம் எந்த ஆசிரியரிடத்தில் தங்கிக் கற்றாரோ அங்கேயே இலவசமாக உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார். இவர் தமிழில் காட்டிய ஆர்வத்தையும் அறிவையும் பாராட்டி ஆசிரியர்கள் இவருக்குத் தாமாகவே விரும்பிக் கல்வி கற்பித்ததோடு, உணவுக்கு வேண்டிய வசதிக்கும் ஏற்பாடு தந்து செய்தார்கள். காலை 5 மணிக்கே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கற்கின்ற மரபு இவரிடம் வளர்ந்திருந்தது. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மட்டும் ஆசிரியருக்கு மாதம் நான்கு அணா சம்பளம் கொடுத்துப் படிக்கத் தொடங்கிய சாமிநாத( ஐய)ர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்தப் படிப்பையே தொழிலாக நெஞ்சில் நிலையாக நிறுத்தியிருந்தார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு நூலையும் எளிய விலைகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் சாமிநாத (ஐய)ர் இருந்தார். புலவர்களை அண்டி அவர்களிடமிருந்து ஒரு சிறிய நூலையும் அன்பளிப்பாகப் பெற்றாலும் அதற்காக அருநிதி-புதையல் கிடைத்தவர்போல் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இவரே பிற்காலத்தில் எண்ணற்ற நூல்களைச் சுவடியிலிருந்து எடுத்து அருமையாகப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்குத் தந்து உதவியவர் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்( பிள்ளை)யவர்களிடம் பயின்றது

1880ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் மாயூரம் சென்றார். அங்கே அப்போது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்த தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் பாடம் சொல்லிக் கொள்ளவந்த மாணாக்கர் பலருக்கும், சில பல ஆதினங்களைச் சார்ந்த குட்டித் தம்பிரான்களுக்கும் பாடம் சொல்லித் தந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை) அவர்கள் இருந்தார்கள். அவர்களை அண்டிச் சாமிநாத( ஐய)ர் பல நூல்களைக் கற்றார். இதற்கு இடையே 1869ஆம் ஆண்டு சாமிநாத( ஐய)ர் அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததனையும் குறிப்பிடவேண்டும். திருமணம் ஆனாலும் உடனடியாக இல்லற வாழ்க்கையில் சாமிநாத( ஐய)ர் பற்றுக் கொள்ளாமல் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலால் உந்தப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்