மொழிக்கொலை ஊடகங்கள்:moahikolai_uudagangal

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு

ஊடகத்துறையினரிடமே உள்ளது!

 

  எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும்.

  நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகின்றன.

  தொகுப்பாளர்கள், செவ்விஅளிப்போர், கருத்து வழங்குவோர், கலைநிகழ்ச்சிகள் தருவோர், அழகுக் கலையினர், சமையற்கலையினர், மருத்துவத் துறையினர், விளையாட்டு வீரர்கள், புதிர்அளிப்போர், ஆடல்வல்லார், இசைவாணர், உரையாளர், திரைத்துறையினர், இறைநெறியாளர், ஊர்வலத்தினர், நாடகம்-தொடர்கள் முதலான உருவாக்குநர், பாடம் விளக்குநர், கல்விப்பிரிவினர்,

  செய்தியாளர்கள், கட்டுரைஅளிப்போர், தலைமைஉரை எழுதுநர், முறையீடு தருநர், அஞ்சல்எழுதுநர், திறனாய்வாளர்கள், மதிப்புரைஞர், என ஒவ்வொரு வகையினரும் தமிழ்க்கொலை ஒன்றையே தகுதியாகக் கொண்டு செயல்படுகையில் தமிழ் எங்ஙனம் வாழும்? ஏட்டில் உள்ள நல்ல தமிழ் நாட்டில் நடமாடுவது ஊடகங்களின் கைகளில்தானே உள்ளது. நம் முன்னோரில் ஒரு சாரார் பிற மொழிகளைக் கலந்து பேசியதாலும் எழுதியதாலும்தானே இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஆட்சி செய்த தமிழ், தமிழ்நாட்டில்கூட ஆட்சிசெய்யமுடியாத அளவிற்குச் சுருங்கிப்போய்விட்டது. தமிழ் நிலமில்லாப் பிற பகுதிகளில் தமிழ் புதிய மொழிகளைப் பெற்றெடுப்பின் மகிழ்வதில் பொருள் உள்ளது! மாறாகத் தமிழ் வழங்கும் பகுதிகளில் தமிழ் தன் பரப்பைக் குறைத்துக் கொண்டு சிதைந்து கலந்து புதியமொழிகளாக உருவெடுப்பதைப் பெருமையாகக் கருதி என்ன பயன்? தமிழில் இருந்து உருவான மொழியினராவது மூலத் தாய்மொழியான தமிழைப் போற்றுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. போற்றாததுடன் தூற்றுவதையே வாழ்வுப்பணியாகவும் மூலத் தமிழினத்தவரையே முதல் பகை யினத்தவராகவும் கருதி அழித்து வருபவர்களாகவும் அல்லவா இருக்கின்றனர். இவ்விழிநிலைக்கு முற்றுப்புள்ளி இட முயலாமல் மேலும் தொடரும் அழிவுப் பாதையில் நடை போடலாமா?

  மக்களை மாற்றுவதும் ஆற்றுவதும்(வழிநடத்துவதும்) ஊடகங்கள்தாமே! தமிழ்நிலம் பெரிதாக இருப்பின் ஊடகங்களின் வருவாய்த் தளம்பெரிதாக அமையுமல்லவா? தன்னலம் கருதியாவது தமிழ்நலம் போற்றலாம் அல்லவா? மக்கள் தொலைக்காட்சியினரும் பிற தொலைக் காட்சிகளின் தமிழ்நிகழ்ச்சி தருநரும் அளிக்கும் தமிழ்நல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பும் பாராட்டும் இருக்கத்தான் செய்கின்றனவே! அவ்வாறு இருக்கா எனக் கருதினால் இருக்குமாறு படைப்பது ஊடகத்தினரின் கடமையும் பொறுப்பும் அல்லவா? தமிழே பேசத் தெரியாமல், தெரிந்தாலும் பேசாமல், மொழிக்கலப்பு புரியும் குற்றச் செயல்கள் குறித்து நாணித் தலைகுனிய வேண்டாவா? பிற மொழியைத் தவறாகப் பேசினாலோ எழுதினாலோ பெருங்குற்றமாகக் கருதும் இவர்கள் தாய் மொழியாம் தமிழை- மண்ணின் மொழியாகிய தமிழை – மக்கள் மொழியாகிய தமிழை- நன்றாய்ச் சிதைப்பதையே என்றும் கடமையாகக் கொண்டுபணியாற்றுவது ஏனோ? இவர்களை வழி நடத்த வேண்டிய அறிஞர்களும் கட்டுப்படுத்த வேண்டிய அரசும் பாராமுகமாக இருப்பது ஏனோ?

  தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்கள் பிற மொழியினரின் மேலாண்மையின் கீழ் இருப்பதற்கும் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தமிழ்மக்கள் உரிமையிழந்து அல்லல் உறுவதற்கும் இனப்படுகொலைகளுக்கு ஆளாவதற்கும் தமிழ், தமிழ்நாட்டில் தலைமையிடம்பெற்று உரிமையுடன் ஆட்சிசெய்யாமைதானே காரணம்.

  உலகின் மூத்த மொழியாகவும் பிற மொழிகளின் தாயாகவும் பாரெங்கும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் இருக்கின்றது. ஆனால், தமிழ்அரசு என்று ஒன்று இல்லாமையால் தமிழ்த்தாய் இன்னலுக்கு ஆளாகின்றாள். தம் தேசியமொழி தமிழ் என்பதை உணராமல் தமிழ்மக்கள் வாழ்வதால் தமிழ்த்தாய் அடிமைவாழ்வு வாழ்கிறாள். தமிழ்மக்களே! நம் தலைமுறையினரும் வரும்தலைமுறையினரும் தலைநிமிர்ந்து வாழத் தமிழ் உரிமை பெறவேண்டும்! என்றுமுள செந்தமிழ் என்று எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் அளவில் தமிழ் என்றென்றும் நிலைக்கத் தமிழ் தமிழர் பகுதிகளில் தலைமை பெறவேண்டும். அதற்கு நாம் தமிழுக்கு எதிரான ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்!

  தமிழ்நல ஊடகங்களைப் போற்ற வேண்டும்! தமிழ்ப்பகுதிகளில் தமிழர்களே முதன்மை பெறவேண்டும்! அதற்குத் தமிழர்கள் கல்வியிலும் தொழிலும் தலைசிறக்க வேண்டும்.

தமிழர்கள் வளமாக வாழ்ந்தால் தமிழும் நலமாக வாழும்!

தமிழ்வளமாக நிலைத்தால் தமிழர்களும் நலமாக நிலைப்பர்!

என்பதை உணரவேண்டும்.

  தமிழ்மொழியின் தலைமைக்கும் தமிழர் முதன்மைக்கும் வழிகாட்டும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆற்றல்வாய்ந்த ஊடகத் தைக் கையாளுவோர் தமிழ்நலன் காப்பதைத் தம் கடமையாகக் கொண்டு ஊடகவழித் தமிழ் போற்றட்டும்! உலகில் தமிழும் தமிழரும் உயர்ந்து நிற்கட்டும்!

– இலக்குவனார்திருவள்ளுவன்

ilakkuvanar thiruvalluvan++