தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்
5
சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார்.
“தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி!
தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி!
இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி!
தமிழ்நலம் நாடுவார் இதயத்தாமரையில் வீற்றிருப்பாய் போற்றி! போற்றி!
துள்ளிவரும் பகையைப் பொடியாக்கச் செய்யும் புயலே போற்றி!
வெறுக்கத்தக்க அடிமை வாழ்வை எரித்துச சாம்பராக்கும் நெருப்பே போற்றி!
புதிதாகப்புறப்பட்டுவரும் வெள்ள நீர்ப் பெருக்கைப் போல
வெற்றியை உண்டாக்கும் சொல்வன்மை படைத்த மேகமே போற்றி!
வள்ளுவர் ஆண்டு தோற்றுவித்த வள்ளலே போற்றி! போற்றி!”
இதே போல் திருநாவுக்கரசரின்,
“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து” எனத் தொடங்கி
“கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம வணங்கும் கடவுளாரே”
என முடியும் பாடலால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் அவர்கள் தமிழ்அன்பரே தாம் வணங்கும் கடவுள் என அனைவரும் எண்ணவேண்டும் என்பதற்காகத் தம் விருப்பத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லேம்
மா தமிழுக்கே அன்பர் அல்லராகில்.
எங்குமுள இடமெலாம் சுற்றி ஓடி
இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடையரேனும்
தங்குபுகழ் செந்தமிழ்க்கோர் அன்பராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே”
இவ்விருபாடல்களுமே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் தூய தமிழ்ப் பற்றையும் தமிழன்பர்களைப் போற்றும் அவர் உளப்பாங்கையும் நன்கு விளக்குகின்றன அல்லவா?
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், உரைநடையாயினும் பாநடையாயினும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் உயர்தமிழ்ச் சிறப்பைப் பதிவு செய்யத் தவறினாரல்லர். “அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து” என்னும் அவரது வாழ்த்துப் பாடலில்,
“உலக முதன்மொழி உயர்தனிச் செம்மொழி
இலக்கணச் செப்பமும் இலக்கிய வளமும்
இயல்பாய்க் கொண்டே இலங்கிடும் தொன்மொழி”
எனக் கூறுவதைச் சான்றாகக் கூறலாம்.
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் கவிதைப் படைப்புகளை, 1.நெடுங்கவிதைகள், 2. திருமண வாழ்த்துக் கவிதைகள், 3. புலவர் வாழ்த்துக் கவதைகள், 4. பெண்கள் வாழ்த்துக் பாக்கள், 5.தலைவர் வாழ்த்துப் பாடல்கள், 6. அன்பர் வாழ்த்துப் பாடல்கள். 7. பொங்கல் வாழ்த்துப் பாடல்கள், 8. கையறுநிலைக் கவிதைகள் அல்லது இரங்கற் பாக்கள், 9. அங்கதக் கவிதைகள், 10. இசைப் பாடல்கள், 11. கதைப் பாடல்கள், 12. சிறப்பு மலர்ப் பாடல்கள், 13. படையல் பாடல்கள், 14. நிகழ்ச்சிப் பாடல்கள் என வகைப்படுத்தி ஆராய்ந்துள்ளார் பேராசிரியர் ம.இராமச்சந்திரன்.
பாடல் சிறப்பும் புலமைச் சிறப்பும் பாடல்களின் எண்ணிக்கையில் அல்லது அளவில் கணிக்கப்படுவன அல்ல. எனவேதான், பல பாடல்கள் எழுதிய சங்கப் புலவர்களுக்கு இணையாக ஒரே ஒரு பாடல் பாடியுள்ள புலவர்களும் ஒருசேர மதிக்கப்படுகின்றனர். செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றுக்கணக்கில் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் மிகச் சிலவே இங்கு நோக்கப்பட்டன. அவரது எந்த ஒரு பாடலை நோக்கினாலும் அவரின் புலமைச் சிறப்பு நன்கு புலனாகின்றது. செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தன்மான உணர்வும் தமிழ் நோக்கு உணர்வும் கொண்டு, தமிழ்நாட்டுச் சூழலையும் படம்பிடித்து, உலகப் புலவர்களுக்கு இணையாகப் பாடல்களை அளித்துச் செந்தமிழ் வளத்திற்குத் தம் பங்களிப்பைப் பாடல்கள் மூலமும் அளித்துள்ளார் எனலாம். தம்முடைய ஓயாத தமிழ்க்காப்புப் போராட்டங்களுக்கு இடையேயும் அவர் தமிழன்னைக்குப் பாமாலை படைத்து, உலகத் தமிழ்க் கவிஞராக உயரிய இடம் பெற்றுத் திகழ்கிறார்.
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் இலக்குவனார் வழிநின்று
செந்தமிழ்க் காப்பில் நம்மையும் இணைப்போம்!
செந்தமிழை – செழுந்தமிழைப் பேணிடுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply