(தமிழ்நாடும் மொழியும் 20 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 21

பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி

ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும்.

முதல் இராசராசன் (985-1014)

சோழப் பேரரசுக்கு அடிப்படைக்கல் நாட்டியவன் விசயாலயன். கட்டடத்தை எழுப்பியவன் பராந்தகன். அந்தக் கட்டடத்தின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தவர்களுள் தலை சிறந்தவன் இராசராசன். இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு பேரும் சீரும் பெற்றது. சோழ நாட்டுக் கொடி யாங்கணும் பறந்தது. அவன் படை என்றாலே அகில உலகும் கிடுகிடுத்தது. எனவே எத்திசை சென்றாலும் அவன் வாள் வெற்றி மழையே பொழிந்தது. இராசராச சோழனைப் பெற்ற பெருவயிற்றை உடையவள் வானவன் மாதேவி. அவனைப் பெரு வீரனாக்கியவன் சுந்தர சோழன். இவனே இராசராசனின் தந்தை. தந்தைக்குப் பின்னர் ராசராசன் அரியணை ஏறினான். அரண்மனைக்குள் நடந்து கொண்டிருந்த கசப்பான நடவடிக்கைகளை அடக்கினான்; படையைத் திருத்தினான். “வேளைக்காரர்” என்ற ஒருவகைப் படையை உண்டாக்கினான். கப்பற் படையைச் செப்பனிட்டான்; சேரரோடு போரிட்டான்; சேரர் தம் மரக்கலங்களைக் காந்தளூர்ச் சாலையில் வைத்துச் சிதைத்தான்; சேர மன்னனாகிய பாசுகர இரவிவர்மனின் வலிமையைக் குறைத்தான்.

இராசராசன் இதனோடு நிற்கவில்லை. மறுபடியும் அவனுடைய இருபெருந் தோள்களும் தினவெடுத்தன. தினவெடுக்கும் தோள்களுக்குத் தினையாகப் பாண்டியனை வென்றான். பாண்டியனுக்கு நண்பனாக இருந்த ஈழ மன்னன் சோழனைக் கண்டு தோற்றுக் காற்றெனப் புறமுதுகிட்டுப் பறந்தான். தென்புல முழுவதையும் வென்ற சோழன் வட புலம் நோக்கினான்.

“பிரித்தலும் பேணிக் கொளலும்” என்ற தேவர் வாக்குப்படி மேலைச் சாளுக்கியரினின்று கீழைச் சாளுக்கியரைப் பிரித்தான்; தன்னோடு சேர்த்துக்கொண்டான்;அடுத்து கீழைச் சாளுக்கிய நாட்டிலே அரசுரிமை பற்றி நடந்த குழப்பங்களைத் தீர்த்தான். விமலாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான். அது மட்டுமா? இராசராசன் தன் மகளான குந்தவையை விமலாதித்தனுக்குத் திருமணம் முடித்து வைத்தான். சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. பின்பு இராசராசன் தக்கணத்தை ஆண்ட சத்தியாசிரயன் என்னும் சாளுக்கியன் மீது போர் தொடுக்கையில் விமலாதித்தன் பேருதவி செய்தான்.

மணமேடையில் உலவிய சோழன் இராசராசன் அதன் பின்பு பிண மேடையில் உலாவி வரலானான். கங்கபாடியும் மலை நாடும் அவன் காலடியில் விழுந்தன. துங்கபத்திரைப் பேராறு சோழ நாட்டின் வட எல்லையாயிற்று. மாலத் தீவுகள் சோழனைச் சரணடைந்தன. இவ்வாறு நனவெல்லாம் உணர்வாகவும், நரம்பெல்லாம் இரும்பாகவும் வாழ்ந்து வாகை பல சூடிய இராசராசனுக்கு, மும்முடிச் சோழன், சயங்கொண்டான், சிவபாத சேகரன் முதலிய விருதுப் பெயர்கள் ஏற்பட்டன.

இராசராசன் சைவப் பற்று மிக்கவன். இவன் சிவ பக்தனேயாயினும் பிறசமயக் காழ்ப்புச் சிறிதும் இல்லாதவன்; எம்மதமும் சம்மதமே என்னும் சமயப் பொறையும் உடையவன். நாகபட்டினம் என்னும் நகரிலே சுமத்திராவின் அரசனான சைலேந்திரன் புத்தப்பள்ளி ஒன்று கட்டிக்கொள்ள இராசராசன் ஒப்புதல் அளித்தான். அதுமட்டுமல்ல; பள்ளிச் சந்தமாகப் பல நிலங்களையும் சோழன் அக்கோவிலுக்கு அளித்தான்.

இராசராசனுடைய சைவப் பற்றின் திண்மையை இன்று உலகுக்கு அறிவித்துக் கொண்டிருப்பது தஞ்சைப் பிரகதீசுவரர் கோவிலாகும். அதுமட்டுமல்ல; திராவிடச் சிற்பக் கலைக்கு மணி முடியாகவும், உறைவிடமாகவும் விளங்குவதும் அக்கோவிலே. இக்கோவில் கி. பி. 1004-இல் தொடங்கப் பெற்று 1010-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீளம் 793 அடி; இதன் அகலம் 397 அடி. தமிழ் நாட்டுக் கோவில்களில் மிகப் பெரியது இதுவே. இககோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாதது ஒன்றே இக் கோவிலைக் கட்டிய சிற்பிகளின் சீரிய திறமையை உலகுக்கு அறிவிப்பதாகும். எங்கணும் அழகிய சிலைகளையும் வண்ண ஒவியங்களையும் நாம் காணலாம். இக்கோபுரத்திலுள்ள விமானக் கல்லை அமைப்பதற்காக நான்கு மைல் தூரம் சாரம் அமைக்கப்பட்டதாம். அதற்கறி குறியாகச் “சாரப் பள்ளம்” என்ற கிராமம் ஒன்றும் உள்ளது. கோவிலின் உள்ளே திருச்சுற்றில் 63 நாயன் மாரது உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாள் தோறும் தித்திக்கும் தேவாரப் பாடல்கள் அக்கோவிலிற் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

இராசராசன் வெற்றி வீரன் மட்டுமல்ல; நாட்டை நல்ல முறையிலே ஆளும் அறிவும் திறனும் உடையவனுமாவான். இவன் ஆட்சியிலே சோழநாடு மாட்சியோடு விளங்கியது. உலகமே கண்டு மயங்கியது. இராசராசன் முதலில் நிலத்தை அளந்தான்; பின் நிலத் தீர்வையை நி ரு ணயித்தான்; திறமை மிக்க செயலர்களைக் கொண்ட ஒரு நல்ல அரசாட்சியை நிறுவினான்; பின்னர் ஒவ்வொரு கோட்டங்களிலும் சிறந்த அரசாங்க அதிகாரிகளை நியமித்தான்; அன்றாட வேலைகட்குத் தடை ஏற்படாவண்ணம் அடிக்கடி ஊரவைகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க ஏற்பாடு செய்தான். இராசராசன் தன் காலத்தில் சிறந்த தரைப்படையையும் சீரிய கப்பற்படையையும் ஏற்படுத்தினான். இவற்றின் மூலமே இராசராசன் தென்னாட்டு அரசர்களிலே மிகச் சிறந்த பேரரசன் என்பது தெளிவாம். வரலாற்றுக்கு உயிர்போல விளங்கும் மெய்க் கீர்த்தி என்ற ஒரு பகுதியைக் கல்வெட்டுகளில் முதன் முதல் தொடங்கியவன் இராசராசனே. இம்மெய்க்கீர்த்தியின் மூலம் அரசனது புகழையும், வரலாற்றையும், அரசியையும், பின் அவன் இயற்பெயரையும் நாம் அறியலாம். இராசிரயன், நித்யவிநோதன் என்பவையும் இராசராசனின் விருதுப் பெயர்களே.

இராசேந்திரன்

இராசராசனுக்குப் பின்னர் அவன் மகனான இராசேந்திரன் சோழ நாட்டுப் பேரரசனானான். “தந்தையிற் சதமடங்கு தனயன்’ என்னும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக இராசேந்திரன் விளங்கினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் பெருமை கடல்கடந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. தூரகிழக்கு நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல் தென்படுவதற்குக் காரணமாக விளங்கியவன் இராசேந்திரனே.

அரியணை ஏறியதும் இராசேந்திரன் தன் படையெடுப்பைத் தொடங்கலானான். சோழப்படை கடலெனத் திரண்டது. ஈழம் நோக்கி விரைந்தது. ஈழத்தரசன் கைதியாகத் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டான். ஈழ நாட்டுக் களஞ்சியமும் சோழரின் தலைநகர்க்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பரசுராமன் கொடுத்த முடி சேரமன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தெற்கே வெற்றிக்கொடி நாட்டிய இராசேந்திரன் தன் எரி விழிகளை வடக்கு நோக்கித் திருப்பினான். அவ்வளவுதான்; சித்தியாசிரயனுக்குப்பின் வந்த முதலாம் சயசிம்மன் தோற்கடிக்கப்பட்டான். இந்தச் சண்டை கி. பி. 1021 இல் முயங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. பின்னர் கலிங்கமும் மகாகோசலமும் பொன்னித் துறைவனின் கழல் பணிந்தன.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்