உலகோரின் பாங்கமை பகரல்

நாடலல் நாடல் நலத்தது கெடுவல்

தேடலல் தேடல் தீயனப் பதியல்

பேணலல் பேணல் பேய்மை  தழாஅல்

மாணல் மதித்தல் மாய்தல் விழைதல்

அறமார் மனத்தது விழைஇ மண்மிசை

திறமார் வினைபுரி திறலர் ஆஅதல்

ஓங்குபுகழ் நிறுத்த உலகோர்

பாங்கமைந் தாங்கு  பகரு மாறே!

சொற்பொருள் விளக்கம் :

நாடலல் நாடல்  = நாடல் அல் > நாடுதற்குரிய நல்லனவற்றை நாடாமல் அதற்குப் புறப்பானவற்றை நாடுதலால் 

நலத்தது = நலமான அனைத்தும்

கெடுவல் = கெட்டுப் போகும்

தேடலல்  தேடல் > தேடல் அல் > தேடக் கூடாதன . தேடிப் பெற வேண்டிய அறிவுச் செல்வங்களைத் தேடிப் பெறாமல்

தேடல் = அல்லனவற்றைத் தேடிப் பெறுதல்

தீயனப் பதியல் = தீமை தரும் கேடுகளை மனத்தில் பதியச் செய்துவிடும்.

பேணலல் பேணல் = பேணிப் புரக்கவேண்டியனவற்றைப் புரக்காமல் தகாதனவற்றைப் பேணினால்,  தீயனவற்றைத் தக்கவைத்தால்

பேய்மை தழாஅல் = ஒட்டுமொத்தமாய்ச் சீரழிக்கும் கொடியனவற்றைத் தழுவிக் கொண்டு அதனோடு வாழ்வதாகி விடும்.

( பேய்மை = கொடிய தன்மை )

பே = அச்சக் குறிப்பொலி

காட்டு : பே பே என விழிக்கின்றான்.

பே > பேக்கு = அச்சத்தால் உருவாகும் அறியாமை; மூடம்.

பேக்கான் = மூடன்

பே > பேய் = அச்சத்தால் உருவாக்கிக் கொள்ளும் கற்பனை உரு.

பேய் > பேய்மை = அச்சுறுத்தும் கொடிய தன்மை, பண்பு.

மாணல் மதித்தல் = நல் வாழ்வுக்குப் புறம்பான நெறியற்ற  மாண்பு அல்லாதவற்றை மதிப்பது

மாய்தல் விழைதல் = அழிவை விரும்புவது போலாகும்.

அறமார் மனத்தது விழைஇ  = அறம் ஆர்க்கும் , தூயதான செயற்பாடுகளையும் வாழ்வினையும் விரும்புதல் என்பது

மண்மிசை = இந்தப் பூவுலகின் மீது

திறமார் வினைபுரி = தீரமிக்க அறிவார்த்த ஆக்கத்தைத் தரும் திறமிக்க செயலைப் புரிதல்

ஆஅதல் = ஆதலாகும்

ஓங்குபுகழ் = உயர்ந்த  புகழுக்குரிய

நிறுத்த = என்றும் நிலைநிற்கும் நிறைநிலை மிக்க

உலகோர் = அறிவார்ந்த சான்றோர் 

பாங்கமை =   மேன்மை மிகுந்த வகையில் அமைப்பாக  

வகுத்த = வகைப்படுத்தியமைத்த

பகரு மாறே = உயர்நெறி சொல்லுதல் அதுவே , அதன் வழி ஒழுகுக…

நாடுதற்குரிய நல்லனவற்றை நாடாமல் அதற்குப் புறப்பானவற்றை நாடுதலால்   நலமான அனைத்தும்

கெட்டுப் போகும்; தேடிப் பெற வேண்டிய அறிவுச் செல்வங்களைத் தேடிப் பெறாமல் அல்லனவற்றைத் தேடிப் பெறுதல் தீமை தரும் கேடுகளை மனத்தில் பதியச் செய்துவிடும்.

பேணிப் புரக்கவேண்டியனவற்றைப் புரக்காமல் தகாதனவற்றைப் பேணி,  தீயனவற்றைத் தக்கவைத்தால் ஒட்டுமொத்தமாய்ச் சீரழிக்கும் கொடியனவற்றைத் தழுவிக் கொண்டு அதனோடு வாழ்வதாகி விடும்.

மாண்பு அல்லாதவற்றை மதிப்பது அழிவை விரும்புவது போலாகும். இவற்றுக்கு மாறாக அறம் ஆர்க்கும் , தூயதான செயற்பாடுகளையும் வாழ்வினையும் விரும்புதல் என்பது  இந்தப் பூவுலகின் மீது தீரமிக்க அறிவார்த்த ஆக்கத்தைத் தரும் திறமிக்க செயலைப் புரிதல் ஆதலாகும்.

 இவ்வாறு வாழ்தலே உயர்ந்த  புகழுக்குரிய வாழ்வு  என என்றும் நிலைநிற்கும் நிறைநிலை மிக்க அறிவார்ந்த சான்றோர்  கூறுவர்.  இத்தகு மேன்மை பொருந்திய சான்றோரால் மிகுந்த நேரியவாறு  வகைப்படுத்தியமைத்த உயர்நெறி சொல்வதற்கொப்ப வாழ்தலே நல் வாழ்வாகும்.. எனவே வாழ்வு சிறக்க அதற்கொப்ப வாழ்க !

 நல்லன நாடுக

நல்லன தேடுக

நல்லன பேணுக

நல்லன தழுவுக

அறத்தை விழைக

திறமிக்க செயல் செய்க

சான்றோர் கூறிய வழி செல்க

தொல்லூர் கிழான்