(தமிழ்நாடும் மொழியும் 22 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 23

பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி

முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் – இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும்.

முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல திசைகளிலிருந்தும் வருகின்ற படையெடுப்புக்களால் பெரிதும் அல்லலுற்றது. வடக்கே காலச்சூரிகள் கருனன் தலைமையில் வேங்கி மீது படையெடுத்தனர். தெற்கே கி. பி. 1075-இல் ஈழம் தனியரசு முழக்கம் செய்தது. பாண்டியரும் சேரரும் மீண்டும் தலைதூக்கினர். இத்தகைய இக்கட்டான நிலையில் கடல் கடந்த சோழர் குடியேற்ற நாடுகள் சோழமன்னனால் நேரடியாகக் கவனிக்கப் படமுடியவில்லை. குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஓய்சால மன்னனான விட்டுணுவர்த்தனன் கங்க பாடியைக் கவர்ந்து தாலக்காடு கொண்டான் எனப் பெயர் – சூடிக்கொண்டான். சோழப் பேரரசைக் காப்பாற்ற குலோத்துங்கன் இயன்றவரை முயன்றான். இவன் சிங்களவரோடு மண உறவுகொண்டான்; நாகைபட்டினத்திலே புத்தவிகாரம் அமைப்பதற்குக் கடாரத்தரசனோடு ஒத்துழைத்தான். தனது தளபதியாகிய நரலோக வீரன் மூலம் சேர – பாண்டியரின் எழுச்சியை அடக்கினான். நாட்டின் வட எல்லையில் அமைதியை ஏற்படுத்தக் கலிங்க நாட்டின் மீது இரு தடவை படையெடுத்தான். அவற்றிலே முதற்படையெடுப்பில், அஃதாவது கி. பி. 1106-இல் வடகலிங்கம் கைக்கு வந்தது. இரண்டாவது படையெடுப்பில் அஃதாவது கி. பி. 1112-இல் கலிங்கம் முழுவதும் சோழனுக்குச் சொந்தமாயிற்று. இக்கலிங்க வெற்றியையே கலிங்கத்துப்பரணி மூலம் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டதேவர் பாடியுள்ளார். கலிங்க வெற்றிக்கு முக்கிய காரணம் கருணாகரத் தொண்டைமானே. கலிங்க அரசனான அனந்தபத்மன் சோழநாட்டைச் சேர்ந்த இராசசுந்தரியின் மகனாவான். இவன் போரிலே தோற்றோடிவிட்டான்.போரிலே சோழன் வெற்றிபெற்றபோதிலும் கலிங்கநாடு சோழ நாட்டோடு சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. கி. பி. 1118-இல் கலியாணிச் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டைக் கைப்பற்றினான். சோழப் பேரரசின் பரப்பு மிகவும் சுருங்கியது. எனினும் குலோத்துங்கன் இயன்றவரை அச்சுருக்கத்தைத் தடுத்தான். இங்கிலாந்தை ஆண்ட வில்லியம் என்பவனைப் போலக் குலோத்துங்கனும் நாட்டை அளந்து வரி விதித்தான். பின்னர் இவன்காலத்தில் சுங்கவரி நீக்கப்பட்டது. இதனால் இவன் சுங்கந் தவிர்த்த சோழன் என்று புகழப்பட்டான்.

குலோத்துங்கன் காலத்தில் தமிழும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார், அடியார்க்கு நல்லார், பரணி பாடிய சயங்கொண்டார் ஆகியோர் இவன் காலத்தில் வாழ்ந்தவராவர். குலோத்துங்கன் இராமானுசரை நாட்டைவிட்டு விரட்டினான் என்றும், அதனால்தான் அவர் மைசூரை ஆண்ட பித்திதேவனிடம் அடைக்கலம் புகுந்தார் என்றும் சிலர் கூறுவர். இதற்கு ஆதாரமில்லை.

குலோத்துங்கனுக்குப் பின்பு அவன்றன் நான்காவது மகனான் விக்கிரம சோழன் பட்டம் பெற்றான். இவன் சமயப் பொறை மிக்கவன். எனவே இராமானுசர் மைசூரை விடுத்துச் சோழநாடு வருவதை இவன் தடைசெய்யவில்லை. தியாகவிநோதன் எனக் கம்பரால் இராமகதையிற் குறிப்பிடப்பட்டுள்ளவன் இச்சோழனே என்பது சிலர் எண்ணம். தந்தையிழந்த கங்கபாடி, வேங்கி ஆகியவற்றினின்று விக்கிரமன் தன்காலத்தில் சிற்சில பகுதிகளை மீட்டினான். தில்லைக் கூத்தனுக்கு இச்சோழன் பற்பல திருப்பணிகள் செய்தான். இவன் கி. பி. 1118-இலிருந்து 1135 வரை நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்பு ஆண்டவன் இரண்டாம் குலோத்துங்கனாவான். இவன்காலம் 1135-1150. தமிழ் இலக்கியங்களிலே இவன் குமாரகுலோத்துங்கன் என அழைக்கப்படுகிறான். இவன்றன் அவையிலேதான் கம்பரும் ஒட்டக்கூத்தரும் வீற்றிருந்தனர். இம்மன்னனுக்குப் பின்னர் இரண்டாம் இராசராசனும் இரண்டாம் இராசாதிராசனும் கி. பி. 1178 வரை ஆண்டனர்.

கி. பி. 1160-1117 என்ற இடைக்காலத்திலே பாண்டிய நாட்டிலே உள்நாட்டுப் போர் உண்டாயிற்று. பாண்டிய நாட்டு அரசுரிமை பற்றிப் பராக்கிரமன், குலசேகரன் என்ற இரு பாண்டிய மன்னர்கட்குள் தகராறு கிளம்பிற்று. சோழரும், இலங்கை அரசரும் இதில் தலையிட்டனர். ஈழ மன்னனான இலங்காபுரன் குலசேகரனை ஆதரித்தான். சோழன் பராக்கிரமனை ஆதரித்தான். இலங்காபுரன் சோழ நாட்டு மீது படையெடுத்துச் சென்றான். குலசேகரனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். மூன்றாம் குலோத்துங்கன், ஈழ மன்னன், சேரன், பாண்டியன் ஆகிய மூவரோடும் போரிட்டான். சுந்தரபாண்டிய மாறவர்மன் சோழநாட்டு மீது படையெடுத்தான்; வெற்றிபெற்றான். குலோத்துங்கன் இதன்பின்பு விரைவில் இறந்தபோதிலும், அதற்கு முன்பே பற்பல கோவில்களைக் கட்டிச் சென்றான். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலும், திருப்புவனம் கோவிலும் இவனால் கட்டப்பட்டனவே. இவன்காலத்தில் தான் நன்னூல் எழுதிய பவணந்தியும் வாழ்ந்தார். பிற்காலச் சோழ மன்னர்களுள்ளே இறுதியில் ஆண்ட சோழப்பேரரசன் இம்மூன்றாம் குலோத்துங்கனே. இவனுக்குப்பின் வந்த மூன்றாம் இராசராசன் (1216-46) சேந்தமங்கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கப் பல்லவனால் சிறைசெய்யப்பட்டான். ஒய்சால மன்னனான நரசிங்கனால் தான் பின் இச்சோழன் விடுதலை செய்யப்பட்டான். இது நடந்த காலம் கி. பி. 1244. இதற்குப் பின்பு சோழப்பேரரசு வீழ்ச்சியை நோக்கி விரைந்து ஓடலாயிற்று. சீரங்கத்திற்கருகிலுள்ள கண்ணனூரிலே ஒய்சாலர்கள் தனி நாடு அமைத்துக்கொண்டனர். மூன்றாம் இராசராசனுக்கும், மூன்றாம் இராசேந்திரனுக்கும் இடையே சண்டை மூண்டது. பாண்டியன் இதில் தலையிட்டான். காகத்தீயர்கள் கணபதி, உருத்திரதாமன் என்ற இருவர் தலைமையின்கீழ் தெற்கே தங்கள் பேரரசை விரிவாக்கினர். இவ்வாறு கி. பி. 1275-இல் சோழப்பேரரசு-இராசராசனும் இராசேந்திரனும் கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி வளர்த்த பேரரசு அடியோடு அழிந்தது. இவ்வழிவுக்கு மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின்புவந்த சோழ அரசர்தம் வலிமைக்குறைவும், தென்னகத்தில் ஓய்சாலர்கள், காகத்தீயர்கள் ஆகியோரின் எழுச்சியும், குறுநில மன்னர்களின் தனியரசும், பாண்டிய மன்னர்களின் எழுச்சியும் மூல காரணங்களாகும். அரசுரிமை பற்றிச் சோழ மன்னர்களிடையே எழுந்த போரே சோழப்பேரரசைப் பெரிதும் அரிக்கலாயிற்று. மேலும் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிசெய்து, 1231-இல் சோழனைத் தெள்ளாறு என்னும் இடத்தில் வைத்து வென்று அவனைச் சிறையும் செய்தான். இதே கோப்பெருஞ்சிங்கன் திருச்சிக்கு அருகிலுள்ள பெரம்பலூரில் வைத்து ஓய்சாலர்களைக்கூட முறியடித்து ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும் தன் அதிகாரத்தை ஏற்படுத்தினான். ஓய்சாலரும், காகத்தீயரும் தெற்கே சோழநாட்டை நோக்கித் தமது பேரரசுகளை விரிவாக்கியதும் சோழர் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேற்கூறிய அனைத்தையும் முறியடித்து, கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசை நிறுவினான்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்