(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3  தொடர்ச்சி)

செஞ்சொல் நடைவேந்தர்

‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்த-வல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய முனைவர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது. பேசும்போது அமைந்த மிடுக்கு எழுதும்போதும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளமை கருதத் தக்கதாகும். பேசுவதைப் போன்று எழுதியும், எழுதுவதைப் போன்று பேசியும் வந்தவர் திரு.வி.க. இரண்டிலும் வேறுபாடுகள் காண முடியாத அளவுக்குச் செஞ்சொற்கள் விரவி விழிப்பூட்டும் வியப்பு நடையைக் கையாண்டார்.


“அருமைத் தமிழ் மாணவர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள். அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ்நாடு சின்னாபின்னமாகச் சிதறுண்டு கிடக்கிறது. காரணம் என்ன? தலையாய காரணம் என்ன? தாய் மொழியைப் பேணிக் காப்பாற்றாமையாகும். அதன் பால் பற்றுளங் கொள்ளாமை, ஒருபோது முடியணிந்து கோலேந்திக் கலையணிந்து அரியாசனம் வீற்றிருந்த நம் பேரன்னை-இப்போது எந்நிலையில் இருக்கிறாள்? அவள் முடியிழந்து கோலிழந்து கலையிழந்து நலமெல்லாம் இழந்து கிடக்கிறாள். அவள் உடற்கூறுகள் எல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறு மறுக்கள் எழுப்பட அவள் எழிலைக் கெடுத்துவருகின்றன. அவளிருக்கத் துச்சிலும் இல்லை. அவளைத் தூறும் புற்றும்மூடிக் கொள்ளுமோ என அஞ்சுகிறேன்.” (இளமை விருந்து)

எளிய சொல்லாட்சிகளில் தெளிவும், தெளிவில் ஓர் அளவையியல் அணுகுமுறையும் அணுகுமுறையில் ஓர் உறுதியும் கொண்ட தன்மை மேற்காணும் நடையிலே காண முடிகிறது. எனவேதான் “இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி உரை நடையின் தந்தை”யென இவர் தனிச் சிறப்புடன் கருதப்படுகின்றார்.

 –
கவிதைப் பணி


தொடக்கக் காலத்திலேயே உரைநடை எழுதியது போன்று செய்யுள் எழுதும் திறமும் அவர்க்கு வாய்த்திருந்தது. ஆனால் ஒய்வு ஒழிவற்ற அவர்தம் சொற்பொழிவுகளும், நாள்தோறும் வாரந்தோறும் தம் ‘தேச பக்தன்’, ‘நவசக்தி’ இதழ்களுக்கு எழுதவேண்டும் என்ற கட்டாயமும், இவர்தம் செய்யுள் தொண்டிற்குத் தடை விதித்து வந்தன.

உரைநடை போலவே அவருடைய கவிதைகளும் மிகத் தெளிவாக இருக்கும். அவருடைய கவிதைகள் உள்ளத்து உணர்ச்சியை எழுப்புவன. ஆராய்ந்து எடுத்த எளிய சொற்களாலே ஆக்கப்பட்டன. கருத்தை வழுவாமலே கூறுவன.

தாம் எடுத்துக்கொண்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்தி உரைப்பது அவருடைய நடையின் சிறப்பு. அவருடைய கருத்துகள் இயற்கைக்கு மாறாகவோ, பகுத்தறிவுக்குப் பகையாகவோ இருக்கமாட்டா.


1931ஆம் ஆண்டில் ‘உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்றொரு சிறு செய்யுள் நூலினை இயற்றினார்.

தமிழினைப்போல் உயர்ந்தமொழி
தரணியில்வே றெங்குமிலை
தமிழனைப்போல் மொழிக்கொலையில்
தலைசிறந்தோர் எவருளரோ.”
உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்.

என்ற பாடலில் அவர்தம் மொழியார்வம் விளங்கக் காண லாம். அடுத்த ஆண்டில் அவர் இயற்றிய செய்யுள் நூல் முருகன் அருள் வேட்டல் எனும் நூலாகும். முருகன் அல்லது அழகுஎனும் உரைநடை நூலினை 1925ஆம் ஆண்டில் எழுதினார் அவர். தம் மனத்திற்குப் பிடித்த இயற்கையில் இறைவனைக் கண்ட பாங்கில் எழுந்த நூலாகும் அது. 1938ஆம் ஆண்டில் ‘திருமால் அருள் வேட்டல்’ வெளியாயிற்று. தென்திருப்பேரை முதலாகத் திருமலை ஈறாகப் பல வைணவத் திருப்பதிகளில் கோயில் கொண்டுறையும் கோல நெடுமாலை வந்தித்து வழிபடும் நிலையில் இந்நூல் இயன் றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்குவதைக் காணலாம்.

பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள்
பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம்
ஒன்றே அன்றோ நன்றே தெளியின்
ஒருவ நிற்கே மருவிய பெயர்கள்
பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி
எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி
எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி
பேரெலாம் நீயே பேரிலான் நீயே
பதியெலாம் நீயே பதியிலான் நீயே
உருவெலாம் நீயே உருவிலான் நீயே
மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே
எல்லாம் நீயே
திருமால் அருள்வேட்டல்.

என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.

திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.

மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய்
மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய்
அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய்
அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய்
பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய்
பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை
பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின்
பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே
திருமால் அருள் வேட்டல்

1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.

காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக்
கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி
மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ
மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும்
மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ
விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங்
காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக்
கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”
– பொதுமை வேட்டல்

என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்