(தமிழ்நாடும் மொழியும் 24 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 25

சோழர் கால ஆட்சி முறை தொடர்ச்சி

அளவைகள்

இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம் (Sripadam) எனப்படும். நிலவரி தானியமாகவோ, பணமாகவோ, தானியமும் பணமுமாகவோ செலுத்தலாம் என்ற முறை அக்காலத்தில் நிலவியது. வரி செலுத்தப்படாத நிலங்கள் மகாசபைக்குச் சொந்தமாகிடும். இவ்வாறு நிலத்தை இழந்தவரும் அவர் உறவினரும் தீண்டத்தகாதவர்களாகச் சமுதாயம் எண்ணியது. வெள்ளம் ஏற்பட்டபோதும், பஞ்சம் ஏற்பட்டபோதும் வரிகள் வாங்கப்படவில்லை. நாணயம், காசு என்று அழைக்கப்பட்டது. காசு என்பது தங்க நாணயமாகும். உழவர்களுக்குக் கடன்களும் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடனுக்குரிய வட்டித்தொகை நெய்யாகவும், எண்ணெய்யாகவும் பிற பொருளாகவும் கொடுக்கப்பட்டது.

மகாசபைக்கு முழு உரிமையும், எல்லாவித அதிகாரங்களும் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியலதிகாரிகட்கு அவை உட்பட்டே செயலாற்றி வந்தன. எந்த நேரத்தில் அதிகாரிகள் வந்தபோதிலும் மகாசபைகள் கணக்கு வழக்குகளைக் காண்பித்தேயாக வேண்டும். சில சமயங்களிலே மன்னனே நாட்டைச் சுற்றி வருகையில் மகாசபைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் உண்டு. அக்காலை மகாசபைகளின் தவறுகளை மன்னன் திருத்துதலும், தண்டித்தலும் உண்டு.

ஓரமயம் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் சோழன் ஒரு கோவிற்குச் சென்றான். அங்கே கோவிற்குச் செய்யவேண்டிய பூசையும் விழாவும் பிறவும் ஒழுங்காகச் செய்யாமலும், கோவிற்கு வேண்டிய பொருள்கள் மிகவும் குறைந்த முறையில் அளிக்கப்படலும் கண்டு வெதும்பி மகாசபை அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கண்டித்து, அதிலிருந்து கோவிற்காரியங்களைக் குறைவின்றி நடத்துமாறு உத்தரவிட்டுச் சென்றதாகத் திருவல்லம் கல்வெட்டுக் கூறுகிறது.

நீதி வழங்குதல்

இந்தக் காலத்திற்கூட நன்கு படித்த ஒரு சில அறிஞர்கள், நீதிமன்றங்கள் என்பன வெள்ளைக்காரர்களே கண்டுபிடித்தவை; நாட்டிலே அவர்கள் தான் நீதிநிர்வாகம் முதலில் ஏற்படுத்தியவர்கள் என எண்ணியும், எழுதியும் வருகின்றனர். சோழர்காலக் கல்வெட்டுக்களைப் பார்ப்போருக்கு இக்கருத்து நகைப்பிற்குரியது. இன்று நடைபெறுகின்ற நீதிமன்றங்களைவிட மிகச் சிறந்த முறையிலே அக்காலத்தில், நீதிமன்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

நாகரிக மிக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலே மரண தண்டனை மிகமிகச் சருவசாதாரணமாகி விட்டது. ஆனால் நானூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலே மூன்றே மூன்று தடவைகள் தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பழிக்குப் பழி வாங்கல் அக்கால நீதிமுறையன்று. குற்றத்தின் அளவைமட்டும் பார்த்து தண்டனை வழங்கவில்லை. குற்றத்தின் தன்மை, அது செய்யப்பட்ட சூழ்நிலை, செய்தவன் மனநிலை முதலியவற்றையெல்லாம் பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டது. சாவா மூவாப் பேராடுகளும், நந்தாவிளக்குமே பொதுவாகக் குற்றத்திற்கு விதிக்கப்பட்ட அபராதப் பொருள்களாகும். அறியாமற் செய்த கொலைக்குக்குக்கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை .

வழக்கை விசாரிக்கும் முழுப்பொறுப்பும், அதிகாரமும் மகாசபைக்கே. மகாசபைக்கு முடியாவிட்டால்தான் மேலதிகாரிகள் அழைக்கப்படுவர். சிலசமயங்களில் ஒரு மகாசபை மற்றொரு மகாசபையின் உதவியை நாடுவதுகூட உண்டு. இதிலிருந்து சோழர் காலத்திலே நீதி நிருவாகம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது எனத் தெளிவாகத் தெரிகிறதல்லவா?

வரிகள்

சோழர் காலத்தில் அரசாங்கத்திற்கு நிலவரி மூலம் தான் அதிகமான வருவாய் வந்தது. தஞ்சை போன்ற வளமான மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு வேலிக்கு 100 கலம் நெல் வரியாகத் தந்தார்கள். மேலும் சோழர் காலத்தில் பல வரிகள் போடப்பட்டபோதிலும், அவையெல்லாம் வெறும் வரிகளாக இருந்தனவே தவிர பணம் தரக்கூடிய வரிகளாக இருக்கவில்லை. தோட்டவாரிய வரி முதலிய பல வரிகள் போடப்பட்டன. உப்பள வரி, காட்டு வரி, சுரங்க வரி போன்ற வரிகள் ஓரளவுக்கு நல்ல வருவாயை அரசுக்குத் தந்தன. கலம், மரக்கால், நாழி, உழக்கு என்பன முகத்தலளவைகள். கழஞ்சு, மஞ்சாடி, காசு என்பன தங்க நிறுவைகளாம். நிலவரி தானியமாகவும் தங்கமாகவும் வாங்கப்பட்டது. சில வகை வரிகள் காசாகவே வாங்கப்பட்டன. தொழில் வரிகூட உண்டு. தட்டார்கள் தட்டார்ப் பட்டம் என்ற வரி செலுத்தினர். வாணியச் செட்டியார்கள் செக்கிறை, நெசவாளர்கள் தரியிறை, குயவர்கள் குசக்காணம், ஆயர்கள் இடைவரி முதலிய வரிகளைச் செலுத்தினர்.

செலவினம்

நீதி நிருவாகம், படை, கப்பற்படை, சிறந்த அதிகாரிகள் குழு, பொதுநலத்துறை ஆகியவற்றிற்காகச் சோழர் காலத்தில் வருவாயில் பெரும்பங்கு செலவிடப்பட்டது. பல்லவ மன்னர்களைப் போலச் சோழ மன்னர்கள், பெருங்குளங்கள் வெட்டுவதிலும், அணைக்கட்டுகள் கட்டுவதிலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.

படை

சோழ மன்னர்கள் இமயத்திற் கொடி பொறித்துக் கடாரத்திற் கல் நாட்டி, ஈழ நாட்டிற் கொடிகட்டி, உள் நாட்டில் ஆணை செலுத்தி, வலிவோடும் பொலிவோடும் தங்கள் சோழப் பேரரசை நிறுவிக் கட்டி ஆண்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பெரும்படையே ஆகும். இத்தகைய பெரும்படை தமிழ் நாட்டில் எக்காலத்திலும் இருந்ததில்லை என்றே கூறவேண்டும். நால்வகைப் படையோடு, கைக்கோளப் பெரும்படை, வில் வீரர்களாலான வில்லிகள் படை, அரசனது மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றிய வேளக்காரர் படை, கடற்படை முதலிய படைகளும் நாடெங்கும் இருந்தன. இப்படைகள் வைக்கப்பட்டிருந்த இடம் ‘கடகம்’ (Cantonment) என்று வழங்கப்பட்டது. இப்படைகளின் துணையால்தான் சோழப் பேரரசர்கள் பெரும் பெரும் வெற்றிகளை அடைந்தனர். மேலும் படைவீரர்களுக்குத் துணையாகப் பணியாளர் படையும் சோழர் காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது. இக்காலத்தில், போர்க் காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தார் ஆற்றிவரும் பணிகளையே அப்பணியாளர் படையிலுள்ளோரும் செய்துவந்தனரெனக் கூறலாம். மேலும் போர்க்காலங்களில் படை வீரர் தவிர, பொதுமக்களும் நாட்டைக் காத்தற்பொருட்டுப் போரில் ஈடுபட்டனர்.

பொதுநலப் பணி

சோழர்கள் தங்கள் வருவாயிற் பெரும்பங்கைக் கோவிலுக்கும் வேளாண்மைக்குமே செலவிட்டனர். தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் சோழர்கள் கட்டியதே. இக்காலத்தில் பொது நலத்துறை (P. W. D.) என்ன பணிகளைச் செய்கின்றதோ அதே பணிகளையே அக்காலத்திற் செய்ய ஒரு குழு இருந்தது. சிறு குளம், கோவில், அணைக்கட்டு முதலிய சிறுசிறு வேலைகளைக் கிராம மகாசபைகள் கவனித்துக் கொண்டன. பெரும்பெரும் ஏரிகளும், சாலைகளும், அணைக்கட்டுகளும் கட்டுவதே பொது நலத்துறையின் பணியாகும். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது போன்ற பெரிய ஏரிகள், தஞ்சை- திருவாடி நெடுஞ்சாலை முதலியன சோழர்களால் அமைக்கப்பட்டன. தடிகைபாடி நெடுஞ்சாலை, கோட்டாற்று நெடுஞ்சாலை, வடுகவழி நெடுஞ்சாலை, கீழவழி நெடுஞ்சாலை ஆகியவை சோழர்கள் போட்ட சாலைகளாம். இதுமட்டுமல்ல; நதிகள் மூலம் சோழர் காலத்தில் வாணிகம் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சுருங்க உரைப்பின் சோழர்கால ஆட்சிமுறை மிகச் சிறந்த ஆட்சிமுறையாகும். இன்று நடக்கும் ஆட்சிமுறை அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சிமுறையின் சில கூறுகளை நீக்கியும், அவற்றோடு சில கூறுகளைச் சேர்த்தும் அமைக்கப்பட்ட ஆட்சிமுறையாகும். சோழர்கால ஆட்சிமுறையில் உடல் முடியாட்சி; உயிர் குடியாட்சி என்க.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்