(தமிழ்நாடும் மொழியும் 2 தொடர்ச்சி)

2. தமிழகம்

முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம்.

எல்லை

தொல்காப்பியம் முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன.

தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. சியார்சு எலியட்டு என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக மிக நெடுங்காலத்திற்கு முன்பு வடக்கே விந்திய மலையும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. குமரிக் கண்டம் இன்று இந்துமகாக் கடலாக விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் எல்லைகளாக இருந்தன. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், ‘வட வேங்கடம் தென்குமரி நல்லுலகம்’ எனவும், சிகண்டியார், ‘வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று இன்னான்கு எல்லை தமிழது வழக்கே’ எனவும், காக்கை பாடினியார்,

‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம் என்று
அந் நான்கு எல்லை அகவையின் கிடந்த
நூலது முறையே வாலிதின் விரிப்பின்’
எனவும்

கூறுகின்றமையால் பழந் தமிழ் நாட்டு எல்லைகளை அறிகிறோம். மேற்கும் கிழக்கும் கடல்கள் என்றதனாலும் தெற்கில் குமரி என்றதனாலும் தெற்கு எல்லை கடல் அன்று என்பது நன்கு விளங்கும். குமரி என்பது அக்காலத்தில் ஓர் ஆறாக இருந்தது. சிலப்பதிகார காலத்தில் எல்லையும் அதுவே. சிலப்பதிகாரம் நாடு காண் காதையில்,

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’

என்று இளங்கோவடிகள் குறிக்கின்றமையால் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்நாடு குன்றியது என்பது புலனாகும். இங்கு குமரி என்பது மலையினையும், கோடு என்பது சிகரத்தையும் குறிக்கும். சிலர் குமரி என்பது நாட்டின் பெயரென்றும், இன்னும் சிலர் ஆற்றின் பெயரென்றும், வேறு சிலர் மலையின் பெயரென்றும் கூறுவர். இளங்கோ வேனிற் காதையில்,

நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு

என்றனர்.

அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் “தொடியோள் என்பது பெண்பாற் பெயரால் குமரி என்றாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையோ வெனின், பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடையே எழுநூறு காவதம் (7000 கல்) பரப்புள்ள 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் பதியும் கடல் கொண்டு ஒழிந்தமையால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று கூறினர். எனவே உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுவதைக் கொண்டு காணுங்கால் அக்காலத்தில் தெற்கு எல்லை குமரிக் கடலாக இருந்தது என்னும் உண்மை நன்கு விளங்கும்.

மலைகள்

தமிழகத்திலே மலைகளுக்குக் குறைவில்லை. வடக்கே திருப்பதி; மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை; கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலையிலே பல பிரிவுகள் உள. பாலைக்காட்டுக்கு வடக்கே உள்ள மலைத் தொடர் வான மலை எனப்படும். வான மலைக்கு வடக்கே குதிரை மலை, ஏழில் மலை என்ற இரு மலைகள் உள. பாலைக்காட்டுக்குத் தெற்கே உள்ள தொடர் தென்னம் பொருப்பாகும். இத்தொடரில் நேரி மலை, அயிரை மலை, பொதிய மலை, நாஞ்சில் மலை முதலிய மலைகள் உள. இவை மட்டுமா! காவிரியின் வடகரையிலே கொள்ளி மலை உள்ளது. திருச்சி மாவட்டத்தில் விச்சி மலை உள்ளது. வட ஆர்க்காட்டிலே விச்சி மலை அல்லது பச்சை மலை உள்ளது.

பேராறுகள்

தமிழகத்திலே பேராறுகளும் சிற்றாறுகளும் நிறைய ஓடி நாட்டை நஞ்சை நிலமாக வளப்படுத்துகின்றன. பெண்ணை, காவிரி, வையை, பேரியாறு, வானியாறு என்பன பேராறுகள். வெள்ளாறு, தண்ணான் பொருநை, பொன்வானி, பூவானி, பொருநை, ஆன் பொருநை என்பன சிற்றாறுகளாம்.

பெண்ணையாறு பிறந்த மாவட்டம் மைசூர். விளையாடிய மாவட்டங்கள் வட, தென் , ஆர்க்காடு மாவட்டங்கள். இறுதியிலே அது கடலகம் புகுகிறது. காவிரி வானமாமலையில் தோன்றி, மைசூரில் தவழ்ந்து, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடந்து, திருச்சியிலும் தஞ்சையிலும் களியாட்டம் ஆடி, இறுதியில் கடலிற் கலக்கிறது. வையை தென்னம் பொருப்பிலே தோன்றி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலே பாய்கிறது. பேரியாறு தென்னம் பொருப்பிலே தோன்றி, திருவாங்கூர், கொச்சி வழியாகப் பாய்ந்து மேல் கடல் புகுகிறது. வானியாறும் வடக்கே தோன்றி மேல் கடலில் விழுகிறது.

பூவானியும் ஆன்பொருநையும் பொன்னியிலே கலக்கின்றன. வெள்ளாறும், தண்ணான்பொருநையும் கீழ் கடலில் விழுகின்றன. பொன்வானி, பொருநை என்பன மேலைக் கடலில் விழுகின்றன.

நில அமைப்பு

உலகில் உள்ள நிலங்கள் யாவும் ஒரே அமைப்பு உடையன அல்ல; அவ்வந் நிலத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்பவும், அமைப்பிற்கேற்பவும், அந்நில மக்களின் வாழ்க்கை , உணவு, உடை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியன மாறுபடுவது இயற்கை. எனவே அடுத்து நம் தமிழகத்தின் நில அமைப்பைப் பார்ப்போம்.

பண்டு தமிழ் நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும். இந்நில மக்களது முக்கிய தொழில் வேட்டையாடுதலே. தினையும் பயிரிடுவர். தினை, வேட்டை மிருகங்கள், கானில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு முதலியவை இவர் தம் உணவுப்பொருள்களாகும். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் பொழுதை உணவு தேடுவதிலேயே கழித்ததால் இவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை. எனவே இந்நில மக்கள் கல்வியிலோ, கலையிலோ, பண்பாட்டிலோ உயர வழியில்லாமற் போயிற்று.

முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமுமாகும். இந்நில மக்களாகிய ஆயர்கள் ஆடுமாடுகளை மேய்த்தும், அவை தரும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை விற்றும் வாழ்க்கை நடத்தினர். இவர்களுக்கும் குறிஞ்சி நில மக்களைப் போன்று ஓய்வில்லாததால் இவர்களும் பிற துறைகளில் முன்னேறவில்லை.

கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். இந்நில மக்கள் காலமெல்லாம் கடலிலே கலம் செலுத்தி மீன் பிடித்து இரவில் வீடு திரும்பியதால் இவர்களும் குறிஞ்சி, முல்லை நில மக்களைப் போன்றே ஓய்வில்லாது உழைத்தனர் என்று சொல்லவேண்டும். ஒன்றும் விளையாத பொட்டல் நிலமே பாலை எனப்படும். இந்நில மக்கள் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் வாழ நேரிட்டது.

எஞ்சா வளம் படைத்த நஞ்சைசூழ் நிலப்பகுதியே மருதமாகும். இந்நிலப் பகுதி நீர் வளமும் நில வளமும் சிறக்கப் பெற்றிருப்பதால், இந்நில மக்கள் தங்களுக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் குறையாது பெற்று மகிழ்ந்தனர். இதே போன்று பருத்தி பயிரிட்டு அழகிய ஆடைகளை நெய்து அணிந்தனர். சுருங்கக் கூறின் இந்நில மக்கள் உணவு, உடை, உறையுள் இம்மூன்றிற்கும் கவலைப்படாது களிப்புடன் வாழ்ந்தனர். இதன் காரணமாய் இம் மக்கள் கவலையற்றவர்களாய், கல்வியிற் கவனம் செலுத்தி, பண்பாடு முதலியவற்றில் சிறந்தோங்கி, கலையுணர்வுடையோராய் உயர்ந்து விளங்கினர்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்