(தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு  தொடர்ச்சி)

8. பிறநாட்டார் ஆட்சிக் காலம்


முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள் வீரமுடன் போரிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றனர். இதன்காரணமாய் விசயநகரத்தாரும், மராட்டியரும் தமிழ்நாட்டை ஆளுதற்குரிய வாய்ப்பைப்பெற்றனர். வடக்கே முகமதியருடைய வலிமை நாளுக்கு – நாள் வளர்ந்த காரணத்தால் தெற்கு நோக்கி வந்த மராட்டியர் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் முதலிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரியலாயினர். இதே நேரத்தில் விசயநகர மன்னரும் கன்னியாகுமரி வரையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் காரணமாய் மகமதியருடைய படையெடுப்புகள் குறையலாயின.

விசயநகர மன்னர்

முகமதிய மன்னன் முகமதுபின் துக்குளக்கு தமிழ் நாட்டின் தென்பகுதியை வென்று, அதனை ஆள சலாலுதீன் அசன் என்பவனை நியமித்தான். இவன் கி. பி. 1335-இல் மதுரையில் தன் தனியரசையே நிறுவினான். இவனுக்குப் பின்னர் ஆண்ட கியாசுதீன் என்பவன் கொடுஞ் செயல்கள் பல புரிந்ததால், முகமதிய ஆதிக்கத்தினை அழிக்க கி. பி. 1336-இல் எழுந்த விசய நகரப் பேரரசை நிறுவிய அரிகரன், புக்கன் என்ற இரு சகோதரரில், புக்கராயனின் மகனான கம்பணன் காஞ்சியையும், மதுரையையும் கைப்பற்றி, முகமதிய மன்னனைக் கொன்று வீழ்த்தி, தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன் தந்தையின் குடைக்கீழ் கொண்டுவந்தான். இவ் வெற்றியினைக் கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய “மதுரா விசயம்” என்னும் நூல் நன்கு எடுத்தியம்புகின்றது. இதே போன்று கி. பி. 1280-இல் விசய நகர மன்னனாய் விளங்கிய இரண்டாம் அரிகரன் தன் மகன் விருப்பாக்குசனைத் தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். இவன் தொண்டை மண்டலத்திலும், சோழ பாண்டிய மண்டலங்களிலும், கொங்குநாட்டிலும், ஈழ நாட்டிலும் வெற்றிகள் பல அடைந்தான். இதன் பின்னர் இரண்டாம் தேவராயன் காலத்தில் விசய நகரப் பேரரசின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் உச்ச நிலையிலிருந்தது, ஆனால் இவனுக்குப் பிறகு கிருட்டிணதேவராயன் அரசனாகும் வரை விசய நகர மன்னர் செல்வாக்குத் தமிழ்நாட்டில் குறைந்தது. விசய நகரப் பேரரசனாகிய கிருட்டிணதேவ ராயன்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நேரடியாக அவன் தமிழ்நாட்டை ஆளாவிடினும், நாயக்கர், தனது அதிகாரிகள் இவர்களது உதவியினால் நல்ல முறையில் தமிழ் நாட்டை ஆண்டான்.

மதுரை நாயக்கர்கள்

தமிழக வரலாற்றிலே தமக்கெனத் தனியிடம் கொண்டவர்கள் நாயக்கர்கள். அவர்கள் ஆட்சியிலே தமிழகம் பற்பல சிற்பக் கலை பொதிந்த கோவில்களைக் கண்டது. நல்லதொரு ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றது. தமிழகம் அவர்கள் ஆட்சியினால் அடைந்த நன்மைகள் பலவாகும்.

மாமன்னன் கிருட்டிணதேவராயன் ஆட்சிக் காலத்தில் விசுவநாத நாயக்கன் தலைமையில் நாயக்க வமிசம் மதுரையை ஆளத் தொடங்கியது. விசுவநாதனது ஆட்சிக் காலம் கி. பி. 1529-64 வரை ஆகும். எனினும் இதற்கு முன்னரே விசய நகரப் பேரரசின் ஒரு பாகமாகத் திகழ்ந்த மதுரையை ஆள நாகம நாயக்கன் முதலில் அனுப்பப்பட்டான். ஆனால் அவன் தனது பேரரசின் ஆணைப்படி ஆட்சி புரிய மறுத்ததால், விசய நகர மன்னன் அவனைப் பதவியினின்று நீக்கிவிட்டு விசுவநாதனுக்கு அப்பதவியை அளித்தான். திருச்சியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கொங்கு நாடு வரையிலும் இவன் ஆட்சி செலுத்தினான். இவனது தலைமை அமைச்சராக விளங்கியவர் புகழ் வாய்ந்த அரிய நாத முதலியார் ஆவார். விசுவநாதன் காலத்தில்தான் தமிழ் நாட்டில் பாளையப்பட்டுகள் தோன்றின. தமிழ்நாடு 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இவை ஒன்பது பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பாளையப்பட்டுகளின் தலைவர்களாக விளங்கியவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் மதுரை நாயக்கர் வேண்டியபோது படைகள் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தங்கள் பாளையப்பட்டுகளில் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாய் நாட்டில் ஒழுங்கும்,அமைதியும் நிலவின. ஆந்திரருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஒற்றுமை நிலவியது.

விசுவநாதனுக்குப் பிறகு அவன் மகன் கிருட்டிணப்ப நாயக்கன், மூன்றாம் கிருட்டிணப்பன், இரண்டாம் வீரப்பன், திருமலை நாயக்கன், முதலாம் சொக்கநாதன், நான்காம் வீரப்பன் என்போர் முறையே தமிழ் நாட்டை ஆண்டனர். மூன்றாம் கிருட்டிணப்பன் காலத்தில் தான், அதாவது கி. பி. 1601-1609-இல் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இரண்டாம் வீரப்பன் காலத்தில் திருச்சி தலை நகராக விளங்கியது.

மதுரையை ஆண்ட நாயக்கர்களில் பெரு வீரனாக விளங்கியவன் திருமலை நாயக்கன் ஆவான். இவன் கி. பி. 1623-இல் பட்டமேறினான். திருவனந்தபுரமும், இராமநாதபுரமும் இவன் அரசுக்கு உட்பட்டிருந்தன. கொங்கு நாடும் அடிபணிந்தது. காந்திரவன் என்ற மைசூர் மன்னனும், விசய நகர மன்னன் மூன்றாம் சீரங்கனும் இப்பெருவீரனால் தோற்கடிக்கப்பட்டனர்.

திருமலை பெரு வீரனாக விளங்கியதோடமையாது, சிறந்த கலைஞனாகவும் விளங்கினான். இவன் செய்த கலைத் தொண்டை எவரும் மறந்திட முடியாது. போரில் புலியாக விளங்கிப் புகழ்பெற்றது போலவே, கலைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றான். இதன் காரணமாய் மதுரை மா மதுரையாயிற்று; பழம் பெரும் மதுரை புதியதொரு கலைக்கூடமாக மாறியது. அவன் கட்டிய விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய கோவில்கள், மக்கள் மனங்கவர் மண்டபங்கள், பெரிய பெரிய தூண்கள் போன்றவை இன்று அவனது கலைப் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. அவனால் கட்டப்பட்ட புது மண்டபமும், அழகிய மகாலும் இன்றும் அழியாச் சின்னங்களாய் விளங்குகின்றன. இவற்றுள் புது மண்டபம் கட்டி முடிக்க இருபது இலட்சம் உரூபாய் செலவாகியது; இருபத்திரண்டு ஆண்டுகள் அல்லும் பகலும் சிற்பியர் பலர் உழைத்தனர். இக்கலைக் கூடத்தின் இரு பக்கத் தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிலைகள் நம் நாட் டத்தையெல்லாம் ஈர்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன. மகாலைக் கட்டுவதற்கு நிறையச் செங்கற்கள் தேவைப்பட்ட காரணத்தால் தோண்டப்பட்ட பள்ளமே பின்னர் அழகிய தெப்பக்குளமாக்கப்பட்டது. இதனை இன்று மக்கள் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும், வண்டியூர்த் தெப்பக்குளம் என்றும் வழங்குகின்றனர்.

(தொடரும்)
பேரா..திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்