(தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி தொடர்ச்சி)

பிறநூல்கள்

இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும்

இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசான தேசிகர் எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக கி. பி. 18 – ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரால் எழுதப்பட்டதாகும்.

நேமிநாதம், முத்துவீரியம்

நேமிநாதமே சின்னூல் ஆகும். இது வெண்பாவால் ஆயது; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் இவற்றைக் கூறுகிறது. இந்நூலாசிரியரது பெயர் குணவீர பண்டிதராகும். இவர் காலம் கி. பி. 12- ஆம் நூற்ருண்டு. முத்துவீரியம் என்பது முத்துவீர ஆச்சாரியால் இயற்றப்பட்ட மற்ருெரு இலக்கண நூலாகும்.

மறைந்த நூல்கள்

அகத்தியம், பன்னிரு படலம், அவிநயம் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் முற்றிலும் கிடைக்கப்பெருத நூல்களாகும். இவற்றுள் அகத்தியம் என்பது அகத்திய முனிவரால் எழுதப்பட்டது என்பர். இந்நூல் இன்று முற்றிலும் கிடைக்கப்பெற்றிலது. உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட சூத்திரங்களே நமக்கு இன்று கிடைத்துள்ளன. இந்நூலினது காலம் முதற் சங்க காலம் அல்லது இடைச் சங்க காலம் என்பர். பன்னிரு படலம் என்பது அகத்தியருடைய மாணவர் பன்னிருவரால் பாடப்பெற்ற பாடல்களைக்கொண்ட புறப்பொருள் இலக் கணம் கூறும் நூல் என்று கூறப்படுகின்றது. அவிநயம் என்னும் நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் அவிநயனர் ஆவார். இவை தவிர கி. பி. 10-ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட காக்கைபாடினியம் என்னும் யாப்பு இலக்கண நூல் யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இறையனார் அகப்பொருள்

இது இறையனார் என்பவரால் இயற்றப்பட்ட களவியல் நூலாகும். இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். கடைச் சங்கப் புலவர் நாற்பதின்மரும் இதற்கு உரை கண்டனர். ஆனால் நக்கீரர் எழுதிய உரை மிகச் சிறந்ததாக விளங்குகின்றது. தூய செந்தமிழ் நடைக்கு எடுத்துக் காட்டாக இவ்வுரை நூல் விளங்குகின்றது.

இதுவரை எழுதியவாற்றால் தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக இருந்த தமிழ் இலக்கணம், காலம் செல்லச் செல்ல எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாகி, பின்பு பொருள் அகம், புறம் எனப் பிரிந்து வளரலாயிற்று என்பதை அறிகிறோம். இவை போகப் பாட்டிலக்கணம், பொருத்த இலக்கணம் என்பவையும் தோன்றின. பாட்டிலக்கணம் என்பது 96 வகைப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். பொருத்த இலக்கணம் என்பது மங்கலம் முதலாகப் பாட்டுக்கும், பாட்டுடைத் தலைவனுக்கும் உரிய பொருத்தங்களாகும். இவற்றேடு பிரயோக விவேகம் என்ற நூலும் உள்ளது. ஆனால் 19 – ஆம் நூற்ருண்டின் நடுப் பகுதியிலே தமிழிலக்கணம் இதுவரையில் வந்த வழியைவிட்டுப் புது வழியே செல்லத் தொடங்கிற்று. அதுவரை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என வளர்ந்த தமிழிலக்கணம் 19-ஆம் நூற்ருண்டிலே மொழி நூல்: (Philology) என்ற துறையிலே வளரலாயிற்று. இதற்கு அடிப்படைக்கல் நாட்டியவர் காலுடுவெலே. அவரே இந்த மொழி நூல் துறை தமிழிலில் ஏற்பட மூலமாவார். அவர் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஈடும் இணையும் அற்றது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாகியும் அதனை ஒப்பப் பிறிதொரு நூல் இன்னும் தோன்றவில்லை. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது திராவிட மொழிகளின் இலக்கணங்களை நன்கு ஒப்பிட்டுப் பார்த்து, அம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் தமிழ் விளங்குகின்றது என அறுதியிட்டுக் கூறுகின்றது. மேலும் திராவிட மொழிகளில் தமிழ் மொழி ஒன்றே வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கும் ஆற்றல் மிக்கது என்றும் இந்நூல் கூறுகின்றது. வட மொழியில் கலந்துள்ள பல தமிழ்ச் சொற்களைப் பற்றிய செய்திகளையும் இதனால் நாம் நன்கு அறியலாம். காலுடுவெல் காட்டிய வழிலே நின்று இன்று பேராசிரியர்கள் இரா. பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார், தேவநேயப் பாவாணர், சி. இலக்குவனார் என்போர் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் என்பவரும் அமெரிக்கா சென்று இத்துறையில் பயிற்சிபெற்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பி உள்ளார்.

நாடக இசைத் தமிழிலக்கண வளர்ச்சி

இயற்றமிழ் இலக்கண வளர்ச்சியைப் படித்துவிட்டு நாடக இசைத்தமிழ் இலக்கண வளர்ச்சியை நோக்கும் பொழுது நம் மனம் பெரிதும் வருத்தம் அடையவே செய்யும். வளராதது மட்டுமல்ல; வளர்ந்துள்ள நிலையினைக் காட்டும் நூல்களும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நூல்களின் பெயர்களையே நம்மால் அறிய முடிகின்றது. அதுவும் அடியார்க்கு நல்லார் உரை இல்லையேல் நாம் ஒன்றும் அறிய முடியாது.

பரதம், அகத்தியம், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு முதலியன இசை நாடகத் தமிழ் நூல்களாம்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்