தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்!

நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும். 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504)

என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள் அல்ல. குறிப்பிட்ட கருத்து தொடரபானவற்றில் சுட்டிக் காட்டினால் போதும். அவற்றைப் பொதுவில் புறந்தள்ளுவதே நன்று.

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கும் இது பொருந்தும். தமிழர் மன்பதையில் மூடநம்பிக்கைகள் ஒழியவும் புரட்சிகரமான எண்ணங்கள் பரவவும் தன் மதிப்பு உணர்வு ஓங்கவும் பெரியார் செய்த பெருந் தொண்டுகள் உலகம் உள்ளளவும் மறக்க இயலாதவை.

பெரியார் தம் கருத்துகளுக்கு மாறானவும் முரண்பாடானவுமாக அமைந்தவற்றையும் பேசியுள்ளார், எழுதி உள்ளார். தி.மு.க.மீது உள்ள கோபத்தால் பச்சைத் தமிழர் ஆட்சி என்ற போர்வையில் பேராயக்கட்சியான காங்.ஐ ஆதரித்தார். எனவே, தன் கொள்கைக்கு முரணாக அதன் இந்தித்திணிப்பிற்கு ஆதரவாகவும் எழுதியுள்ளார்.

.பெரியார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் குறித்துத் தவறாகவும் எழுதி உள்ளார். தமிழறிஞர்கள் சிலரும் இதுபோல் தவறாக எழுதியுள்ளனர். தேவநேயப் பாவாணர்கூடத் தொல்காப்பியத்தை ஆரியச்சொல்லாட்சி நிறைந்தது எனவும் ஆரியத்தைப் புகுத்தியுள்ளதாகவும் எழுதினார். பேராசிரியர் சி.இலக்குவனார் அவை இடைச்செருகல்கள் எனவும் தமிழரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் எனவும் மெய்ப்பித்ததும் தம் கருத்தை அவர் மாற்றிக் கொண்டார். தொல்காப்பியம் ஒப்பற்ற தமிழ்நூல் என்றார். எனவே, ஒரு காலத்தில் சொன்ன தவறான கருத்து அடிப்படையில் எக்காலமும் முழுமையாக மதிப்பிடக் கூடாது.

அறிஞர் சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில், “பெரியார் வீட்டு மொழி கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையினர், தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் அளித்த வரவேற்பிதழில், “வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதலின் அவரது தமிழ் உணர்வையும் தமிழ்பற்றையும் உணரலாம்.

பல இடங்களில் தமிழ் மாணாக்கர் அனைவரும் தமிழ் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்றுச் சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.” (குடிஅரசு 18.12.1943) எனக் கூறியுள்ளார்.

தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும்” என்றும் “இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதாலும் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதாலும் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம்” என்றும் தமிழின் தூ்ய்மையைப் பேண வலியுறுத்தி உள்ளார்.

“தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து” என்றார் பெரியார். தமிழ் வழிபாட்டிற்கும் தமிழர் கோயில்களில் தமிழர்கள் உரிமையை மீளப்பெறவும் போராடியுள்ளார்.

இசை என்றால் அது தமிழிசைதான் எனத் தமிழிசையை வலியுறுத்திய தந்தை பெரியார், “தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.” (25.12.1943 ‘குடிஅரசு’ தலையங்கம்) எனக் குரல் கொடுத்துள்ளார்.

கால்டுவெல், வின்சுலோ, சிலேட்டர், மார்டாக்கு முதலான அறிஞர்கள் தமிழின் சிறப்பைப்பற்றிச் சொன்னவற்றை எல்லாம் மக்களிடையே பரப்பி வந்தார். தமிழைப் பழிப்பவராயின் அவ்வாறு செய்திருப்பாரா?

தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தவறான கருத்துகளையும் கூறியுள்ளார். அவர் மொழியறிஞர் அல்லர். எனவே, அவை எல்லாம் சரி என்று எண்ணத்தக்கன அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாறி இன்று பலர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சாதிப்பாகுபாடு இன்றி அனைவர்க்கும் கல்வி கிடைக்கிறது என்றால், இந்தியா முழுமையும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணமான பெரியாரைப் போற்ற வேண்டும்.

இன்றைக்கு அவர் கனவுகள் முழுமையாக நனவாகவில்லை. என்றாலும் இன்றைய நிலையின் சமநீதிக்கு அவர் ஆற்றிய பணிகளை மறக்கக் கூடாது.

தமிழர்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளையும் தொண்டுகளையும் நாம் பாராட்டுவதும் அவரால் உதிர்க்கப்பட்ட குப்பைகளுக்கு முதன்மை அளித்து அவருக்கு இழுக்கு தேடித்தருவதும் திராவிடர்கழகத்தின் கைகளில்தான் உள்ளது.

பெரியார் உண்மையிலேயே தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் பெருமை தேடித்தந்தார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால்  அவற்றை மட்டும் பரப்ப வேண்டும்.

இல்லையேல் தமிழுக்கும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கியத்திற்கும் இழுக்கு தேடித்தந்தார் எனக் கருதினால் அத்தகைய குப்பைகளைத் தாராளமாக வெளியிடலாம். தவறான கருத்துகளைப் பரப்பினால் பெரியாரின் தமிழ்ப்பணிகள் குறித்து ஒன்றும் பாராட்டிச் சொல்லக்கூடாது.

தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவரகள் திராவிடர் கழகத்திற்கு மட்டும் உரியவர் அல்லர். எனவே, அவரால் பயனுற்ற தலைமுறையைச் சேர்ந்த நாம் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் தன்மானத்தையும் தன்மதிப்பையும் பகுத்தறிவையும்  ஊட்டிய அவரைப் போற்றுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17092019