(இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி

)

தமிழ்ப்பாரதம்

முந்தைய கட்டுரையில் பரதம் அல்லது பாரதம் என்பது தமிழ்ச்சொல் எனக் கூறியிருந்தோம். இதற்கான தமிழிலக்கிய மேற்கோள்களையும் காட்டியிருந்தோம்.  இன்று வரையுள்ள அனைத்து மேற்கோள்களையும் காட்டினால் பக்கங்கள் பெருகும்.

“பாரத நாடு பழம் பெரும் நாடு,  பாரதப் பூமி பழம்பெரும் பூமி, பாரத நாடு பார்க்கெலாம் திலகம், பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?, பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், வாழிய பாரத மணித்திரு நாடு, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை,  பாரத தேவி, சயசய பாரதம், எமது பரத கண்டம், எமது பரதநாட்டுப் பெண்” எனப் பலவாறாகப் பாரதம் என்று பாரதியார் குறிப்பிடுகிறார்

தமிழ்த்தாய் வாழ்த்தில், “திகழ் பரத கண்டம்” என்கிறார்  மனோண்மணியம் சுந்தரனார்.

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன்விடுக்கின்றோம். விரும்புவோர் இணையவழித் தேடி அறிந்துகொள்க.

காலுடுவெல் ‘பரத கண்ட புராதனம்’ என்ற ஒரு தமிழ் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்(1893). இதனையும் அறிய வேண்டுகிறோம்.

இந்தியா என்பது ஆங்கிலேயர் சூட்டியது. எனவே வேண்டா என்கின்றனர் ஆங்கில மொழிக்கு அடிமையாகவும் ஆங்கிலேயர் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவோராகவும் உள்ள சிலர். ஆங்கிலேயர் தம் ஆட்சியெல்லைக்குள் வந்த நிலப்பகுதிகளை இணைத்து இந்தியா என்றது உண்மைதான். எனினும் இப்பெயர் அவர்களால் சூட்டப்பட்டதன்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததுதான். தமிழில் சிந்து என்றால் நீர் என்றும் நீர்ப்பரப்பு மிகுந்த கடல் என்றும் பொருள். இவைபோல் நீரோட்டம் மிகுந்த நீர்ப்பரப்பு சிந்து ஆறு எனப்பட்டது. இதனடிப்படையில் சிந்து>சிந்தியா>இந்தியா என வந்ததாகக் கூறுவர். சிந்து ஆற்றுப் பகுதி நம் தமிழர்கள் நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்ந்த பகுதி. எனவே இதனடிப்படையில் வந்திருந்தாலும் இது தமிழ் நிலத்தைக் குறித்ததாகவே கொள்ள வேண்டும்.

கிரேக்கச் சொல்லான ‘இண்டிகா’ என்பதிலிருந்து  இந்தியா என்னும் பெயர் வந்ததாகக் கூறுவர். மெகசுதனிசின் (Megasthenes) (கிமு 350 – கிமு 290)  நூல் ‘இண்டிகா’ என்பதைச் சான்றாகக் கூறுவர். இலத்தீனின் ஒலிபெயர்ப்புச் சொல்லாகப் பயன்படுத்தியதாகவும் கூறுவர். சிந்து> சிந்தியா>சிண்டியா>சிண்டிகா>இண்டிகா என மருவியிருக்க வேண்டும் என்கின்றனர்.

வடக்கே புகுந்த ஆரியர்களைப் பார்த்து “திருடன்,திருடன்” என்னும் பொருளில் “இந்து, இந்து” என மக்கள் கூவியதாகவும் இப்பெருசியச் சொல்லே நிலைத்துவிட்டதாகவும் கூறுவர். இந்து என்றால் திருடன் என்பதைப் பழம் நூல்கள் குறிப்பதாகப் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஐயாவும் பேசியுள்ளார். தமிழ்நாட்டரசின் மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கண்டித்து 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி “இந்து என்றால் திருடன் எனப் பொருள்” இருந்ததாகக் குறிப்பிட்டார்.  இதற்கு மதவாதிகளிடமிருந்து  வலுத்த எதிர்ப்பு வந்தது. தெ.சை.சி.நூற்பதிப்புக் கழகத்தின் வினா விடை நூலொன்றிலும் இச் சொல் விளக்கம் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு கூறுவதால் இப்பொழுதும் அதே பொருளில் பயன்படுத்தப்படுவதாகவும் இந்துக்கள் யாவரும் திருடர்கள் என்று கூறுவதாகவும் கருதக் கூடாது. அது சொல் வந்த வரலாறு. அவ்வாறு வந்த இந்து என்பதிலிருந்து இந்தியா வந்ததாகவும் கூறுவர்.

“இந்தியா அஃதாவது பாரதம்” என இந்திய அரசியல் யாப்பே கூறும் பொழுது பாரதம் என்பது தீண்டத்தகாத சொல்லல்ல. பேராய(காங்கிரசு) ஆட்சி, அதன் கூட்டணி ஆட்சி, பாசக ஆட்சி, அதன் கூட்டணி ஆட்சி என ஒன்றியத்தில் யார் ஆட்சி செய்தாலும் இந்தியா என்பதற்கு இந்தி முதலிய பிற மொழிகளில் மாற்றுச் சொல்லாகப் பாரதம் என்பதையே கையாள்கின்றனர். இந்தி அகராதியிலும் இந்தியா என்பதற்குப் பொருளாகப் பாரதம்(பாரத்) என்றே குறிக்கப் பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் அமைப்புகள் அனைத்தும் பாரத்து பெயர்தாங்கியே உள்ளன. இசுடேட் பாங்கு ஆப் ந்தியா என்பதும் தமிழ் முதலான பிற மொழிகளில் பாரதிய வங்கி என்றுதான் குறிக்கப்பெறுகிறது. பாரதிய மகிளா வங்கியும் அவ்வாறுதான் இந்திய மொழிகளில் குறிக்கப் பெறுகிறது. ஒன்றிய நிறுவனங்கள் பெயர்கள், இந்திய விடுதலைக்கு முன்னர்  இந்தியா எனக் குறிக்கப்பெற்றிருப்பின் பிற மொழிகளில் பாரத் என்றே குறிக்கப்பெறுகின்றன. அதற்குப் பின்னர் தோன்றிய அனைத்து நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பாரத்(து) என்ற பெயரிலேயே குறிக்கப் பெறுகின்றன.

மேலும் சில நிறுவனங்கள் பெயர்களை அவ்வாறே ஒலிபெயர்ப்பில் காணலாம். பாரத் எர்த்து மூவர்சு லிமிடெடு, பாரத் பாரி உத்யோக்கு நிகம் லிமிடெடு. பாரத் பிராட்பேண்டு நெட்வொர்க்கு, பாரத் கோக்கிங்கு கோல் லிமிடெடு, பாரத் டைனமிக்சு லிமிடெடு, பாரத் எலெக்ட்ரானிக்குசு லிமிடெடு, பாரத் கேசு ரிசோர்சசு, பாரத் எவி எலக்ட்ரிக்கல்சு லிமிடெடு, பாரத் இம்மியூனாலாசிகல், பயலாசிக்கல் கார்ப்பரேசன் , பாரத் பெட்ரோலியம் லிமிடெடு, பாரத் பெட்ரோ ரிசோர்சசு லிமிடெடு, பாரத் பம்ப்சு & கம்ப்ரசர்சு லிமிடெடு, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெடு, பாரத் வேகன், எஞ்சினீயரிங்கு லிமிடெடு எனப் பாரதம் என்னும் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அப்பொழுது யாரும் பொங்கி எழவில்லை. ஒரு பகுதியினர் ஏற்றுக் கொண்டனர். மறு பகுதியினர் எப்படி அழைத்தால் நமக்கென்ன எனப் பொருட்படுத்த வில்லை.

பெருசியர்களால் இந்துசுதான் என்ற சொல்லும் பயன்படுத்தப்பெற்றது. பிரித்தானிய ஆட்சியில் 1750 – 1880 இல் இந்துசுதான் சொல்லும் பரவலாகக் கையாளப்பெற்றது. எனவே  இந்திய அரசியல் யாப்பு குறித்த வரையறைக் கலந்துரையாடலில், நாட்டின் பெயர் குறித்த கூறு ஒன்று ஆராயப்பட்ட பொழுது இந்துசுதான் கருதிப் பார்க்கப்பட்டு,  அனைவராலும் கைவிடப்பட்டது. இருப்பினும்   இன்றும் மதவாதிகள் இந்துசுதான் என்று குரல் கொடுக்கின்றனர். இப்பெயர் இந்து மத அடிப்படைப் பெயர் என்பதால் இதைக் கைவிட வேண்டும்.

2004இல் உ.பி.யில் முதல்வர் முலாயம் சிங்கு யாதவு சட்டமன்றத்தில் “இந்தியா அஃதாவது பாரதம்” என்பதை மாற்றிப் “பாரதம் அஃதாவது இந்தியா” என மாற்ற வேண்டும் எனத் தீர்மானம் கொணர்ந்தார். அபபோது பாசக  இதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதே பாசகதான் இன்று பாரதம் என்று பெயர் மாற்றத் துடிக்கிறது. ஒருவேளை இந்தியா என்பது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைப்பெழுத்து சொல். பாரத்(து) (பாரதிய) என்பது தம் கட்சியின்பெயரில் உள்ள சொல் எனக் கருதியும் அவ்வாறு இப்பொழுது ஆதரிக்கலாம்.

நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நான் முன்பு தெரிவித்த கருத்தை இப்போது நினைவு கூர்கிறேன்.

இந்தி விதைப்பு :  ‘வங்காளியர்’ எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’ எனில் மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர்’ எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’ எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’ எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’ எனில் ‘இந்தி மொழி பேசுநர்’ ; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம் நாட்டில் மட்டுமல்ல; உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமையை இழுக்கு எனக்கருதி, இந்தியில் உரையாற்றுகிறார்.   ‘இந்தியா’ என்றால், இந்தி நாடு, இந்துநாடு என்ற எண்ணம் மாற முதலில் நம்நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.

தமிழ் இந்தியா: உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய, வாழ்ந்த, வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் ‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது தமிழ்த் துணைக்கண்ட கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது, ‘தமிழ் இந்தியா’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரையில் இடம் பெற்ற பத்திகள் .]

கடல் சார் நில அடிப்படையில் தமிழ்ச்சொல் இருப்பினும் இச்சொல் இதிகாசங்களில் இடம் பெற்றமையால் மதம்சார்ந்து மதவாதிகள் கற்பிக்கின்றனர்.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) குரு கோல்வாக்கர், “இந்தியா என்றால் கிறித்தவர்களையும் முசுலிம்களையும் உள்ளடக்கும், பாரதம் என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும்” என்று கூறுகிறார்

மாறுபட்ட கருத்துகளைக் கூறும் பாரதியாரும்,

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

என்று கேட்டு, இந்துமதத்தை ஏற்போருக்கே பாரதம் என்பதைக் கூறுகிறார். இவ்வாறு, காவிக்கட்சி பாரதத்தை வலியுறுத்துவதால்,  இந்தியாவை இந்துமத நாடாக அறிவிப்பதற்கான முயற்சி என அனைத்துத் தரப்பாரும் கருதி யஞ்சுகின்றனர்.

ஆனால், பா.ச.க.வின் மதநோக்க அடிப்படையில் அல்லாமல் நான் இந்தியாவின் பெயர் மாற்றத்தை வலியுறுத்தவே செய்கிறேன்.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்”

என்கிறார் காரிகிழார். அஃதாவது பழந்தமிழ் நாட்டு எல்லை வடக்கே இமயமலைக்கு அப்பாலும் தெற்கே குமரிக்கு அப்பாலும் இருந்தது என்கிறார். எனவே, இந்நிலம் முழுவதும் தமிழ் நிலமாகவே முன்னர் இருந்தது. இந்த வரலாற்று உண்மையை உணர்த்தும் வகையில் இந்நிலப்பரப்பின் பெயரில்  தமிழ்  என்னும் சொல் இடம் பெற வேண்டும்.

இமயமலை தோன்றும் முன்னர் அந்த இடம் கடற்பரப்பாக இருந்தது. திதை என்றால் பரவு எனப் பொருள். வடக்கே நீரெல்லை பரவியிருந்த இந்த இடம் திதையன் > திதியன் எனப் பெற்றது. நீர் பரவி யிருக்கும் பரப்பிற்குப் பரவை என்று சொல்வதும் தமிழே. பரவையில் ஆட்சி      செலுத்தியவர்கள் பரவையர்கள் என்பதிலிருந்து பரதவர் என்னும் சொல் வந்தது என்பாரும் உளர். எவ்வாறிருப்பினும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வடக்கே கடல் இருந்த பொழுதும் அதுவரை தமிழே இருந்தது என்பதே உண்மை. எனவே, இந்நிலப்பரப்பில் ஆட்சி செய்த மண்ணின் மொழியான தமிழ், நாட்டின் பெயரில் இடம் பெற வேண்டும் என்பதே அறவழிப்பட்ட செய்தியாகும்.

தலைமையமைச்சர் நரேந்திரர் பிப்பிரவரி 2023 இல் மக்களுடனான சந்திப்பிலும் அண்மையில் 6 வெளிநாடுகளின் அரசுமுறைப் பயத்தைமுடித்துவிட்டுத் திரும்பியபோதும், “தமிழ் மொழி நமது மொழி, உலகில் சிறந்த, மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி இந்தியர்களின் மொழி” என்று பேசியுள்ளார். முதன்மை எதிர்கட்சியான பேராயக்கட்சியைச் சேர்ந்த இராகுல் காந்தி கடந்த  நிதிநிலையறிக்கைக் கூட்டத் தொடரில் (2/2023) நாடாளுமன்றத்தில் பன்முறை தமிழ்நாடு குறித்துப்பேசி இதன்சார்பில் குரல் கொடுத்தார். உரை முடிந்து வெளியேறிய இராகுலிடம் செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு என அதிக முறை உச்சரிததது ஏன் எனக் கேட்ட கேள்விக்கு  “ஏனென்றால் நான் ஒரு தமிழன்” எனக் கூறியுள்ளார். இத்தகைய தமிழ்க்காதலர்கள், தமிழினக் காவலர்கள் ஒன்றியத்தில் இருக்கும் பொழுது நம் நாட்டின் பெயரைத் தமிழ்ப்பாரதம் என மாற்றுவது எளிதாகும்.

நாடும் ஒன்றே! சாதி தவிர மொழி, பண்பாடு, நாகரிகம், மதம், தேர்தல், ஆட்சி முதலிய எல்லாம் ஒன்றே! எனச் செயல்படும் ஒற்றைநாயகப் பாசக அரசு ஒற்றை இந்தியாவிற்காகத்தான் நாட்டின் பெயரை மாற்றத் துடிக்கிறதோ என்ற ஐயம் அனைவருக்கும் உள்ளது. அதனைப் போக்க நாட்டின்பெயரில் மிகவும் தொன்மையான – ஒருகாலத்தில் நம்நாட்டில் முழுமையாக வழங்கிவந்த மொழியான தமிழின் பெயரை நாட்டின் பெயருடன் இணைக்கவும் ஆசியாக் கண்டத்தைத் தமிழ்க்கண்டம் என மாற்ற வலியுறுத்தவும் முன் வருமா? 

இந்தியா என்னும் பெயரே நீக்கப்படும்போது தென் பெருங்கடலுக்கு இந்தியப்பெருங்கடல் என்ற பெயர் ஏன்தேவை? இதனை இனிமேல், தமிழ்ப்பெருங்கடல் என அழைக்க வேண்டும்.

எனவே, நம் நாட்டுப் பெயரைத் தமிழ்ப்பாரதம்(THAMIZH PAARATHAM) என மாற்ற முன்வருவார்களா?

இனிமேல் வரலாற்றாசிரியர்கள், தமிழ்ப்பாரதம், தமிழ்க்கண்டம், தமிழ்ப்பெருங்கடல்  எனக் குறிப்பிட்டு வரலாறு எழுதுவார்களாக! நாமும் இவ்வாறே அழைப்போமாக! அரசும் அதற்கேற்ப பெயர்களை மாற்றுவதாக!

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை