(தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (6)

என் பெயர் சோசுவா ஃகான்சிங்கு. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவி மீனா ஃகான்சிங்கு (அகவை 45) மெய்த்தி இனத்தைச் சேர்ந்த கிறித்தவப் பெண். எங்கள் ஏழு வயது மகன் தொன்சிங்கு ஃகான்சிங்கு. எங்கள் உறவினரான லிடியா (இ)லூரம்பம் (அகவை 37). அவரும் மெய்த்தி கிறித்தவர்.

நாங்கள் அனைவரும் இம்பாலில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ஆபத்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

சூன் 4ஆம் நாள். 20-அசாம் தோணணி துப்பாக்கிப் படைப் பிரிவின் தண்ணீர் வழங்கல் ‘தோலனி’ல் என் மனைவி மீனாவும் மகன் தொன்சிங்கும் அறைக்குள் இருந்தனர். நான் தரைத் தளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தேன். அப்போது என் மகன் சாளரத்தில் இருமுறை துள்ளி விழக் கண்டேன். அவன் சுடப்பட்டுக் குண்டு பாய்ந்து காயமடைந்தான். எப்படி யாரால் சுடப்பட்டான் என்று தெரியவில்லை. யாரோ மறைந்திருந்து சுட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

“ஃகே பா! ஃகே பா!” [அப்பா! அப்பா!] என்று என் மகன் அலறினான். மூன்றாவது முறை அவனிடமிருந்து ஓசை இல்லை. என் மனைவி மெய்த்தி மொழியில் கத்தினாள்: “தாதா, அங்காங்கு யதாரே” [தாதா, நம் மகன் போய் விட்டான்!”]

நாங்கள் எங்கள் குழந்தையை இராணுவ ஆய்வு அறைக்குத் தூக்கிப் போனோம். தலையில் குண்டு பாய்ந்து குருதி பெருகிக் கொண்டிருந்தது. அவர்களால் இவனைக் காப்பாற்ற முடியாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது.

அவர்கள் அவனை ஊருக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது என் மனைவி மெய்த்தி என்பதால் எதுவும் நேராது என்று நினைத்தேன். நாங்கள் இருப்பது இராணுவ முகாம் என்பதால் அவசர ஊர்தியில் இம்பால் செல்வதில் ஆபத்தில்லை என்று என் மனைவி கருதினார். அவசர ஊர்திக்கு வழிக்காவலாக மூன்று கொமாண்டோ சிப்சி வண்டிகள் அழைக்கப்பட்டன. ஆனால் இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லவில்லை.

மனைவியுடன் சென்ற தோழி (இ)லிடியாவும் மெய்த்திதான். (இ)லிடியாவின் கணவரும் மெய்த்திக்னு கிறித்தவர். அவர்களுக்கு ஏதும் தீங்கு நேராது என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறாகி விட்டது.

என் மகனும் மனைவியும் எங்கள் உறவினரான (இ)லிடியாவும் மணிப்பூர் இம்பாலில் உயிருடன் எரிக்கப்பட்டனர். மெய்த்தி வன்முறை வெறிக்கும்பல் அவர்களைப் பிடித்து எரித்து விட்டது. ஆனால் எப்போது அவர்கள் செத்தார்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை. சூன் 4ஆம்நாள் இரவு 7 மணியளவில் அவர்கள் இறந்து விட்டாலும், 5ஆம் நாள் எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. 6ஆம் நாள்தான் எனக்கு செய்தி தெரிந்தது. என் மனைவியின் குடும்பம் மெய்த்தி இனம் என்பதால் உள்ளூர் செய்தி பார்த்து என் மாமனார்தான் எனக்குத் தகவல் தந்தார். கதறியழுவது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

என் மனைவியும் மகனும் இறந்த செய்தியை மற்ற இரு பிள்ளைகளுக்கும் சொல்லாமலிருந்தேன். எப்படியோ செய்தி கிடைத்து அவர்கள் துடித்தழுது மயங்கி விழுந்து விட்டார்கள்.

என்னால் இந்தத் துயரத்திலிருந்து மீள முடியவில்லை. என் மகன் குக்கிக்கும் மெய்த்திக்கும் மகனாகப் பிறந்தது அவன் குற்றமா? அவன் மெய்த்திகளுக்கு மருமான் இல்லையா? மனிதர்கள் இந்த அளவுக்கு மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நான்கைந்து மெய்த்தி இல்லங்கள் உள்ளன. அவர்களுக்கு நாங்கள் எந்தக் கேடும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் இபப்டிச் செய்து விட்டார்கள். மெய்த்திகளின் மனப்போக்கு இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.

நான் என் மெய்த்தி உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வெறுப்புச் சிந்தையிலிருந்து விடுபடுங்கள். நாங்களும் உங்கள் மீது வன்மம் வளர்க்க மாட்டோம். இது மிக மோசமான குற்றம், இதற்கு மேல் ஒரு குற்றத்தை எண்ணிப் பார்க்க முடியாது. நான் உங்களைப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்: இவ்வகையான மனப்போக்கை விட்டொழியுங்கள்.

இறுதியாக, “ஃகே பா! ஃகே பா!” என் மகனின் கடைசிக் குரல் என்னை வாட்டுகிறது. மூன்றாவது முறை அவன் என்னை அழைக்க மாட்டானா? “ஃகே பா!”

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 262