தமிழ்ப்பெயர் சூட்டாதாரை

இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக!

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்

(திருவள்ளுவர், திருக் குறள் 813)

பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள்.

குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி, பிற மொழிக்கலப்பால் தேய்ந்து தமிழ்நிலத்தின் பெரும் பகுதியையும் இழந்து இன்றைய நிலைக்குச் சுருங்கியுள்ளது என்பதைத் தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி. இலக்குவனார் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிலப்பரப்பும் தமிழ் பேசும் மக்களின் தொகையும் சுருங்கும் வண்ணம்  எங்கும் மொழிக்கலப்பு மேலோங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியையேனும் தடுப்பதற்காகச் செல்வாக்கு மிக்க திரைப்படங்கள்  மூலம் தமிழ் வழக்கழிவதைத் தடுக்க முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ப்பெயர் சூட்டிய திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்தார். இதனைப் பயன்படுத்திப் பெயர்ச்சொற்கள் என்ற போர்வையில் முறைகேடாகப் பிற மொழிச்சொற்களைத் தாங்கிய படங்களுக்கும் வரி விலக்கு பெற்றனர். அதே நேரம் அரசியல் காரணங்களுக்காக ஒச்சாயி, கெத்து முதலான தமிழ்ப்பெயர் சூட்டிய படங்களுக்கு வரி விலக்கு தரவில்லை. எனினும் பெரும்பகுதி திரைப்படப்பெயர்கள் தமிழால் அழகு பெற்றன. ஆனால் கலைஞர் தந்த சலுகை மத்திய அரசு வரி விலக்கு அளிக்கும் அதிகாரத்தை மாநிலங்களில் இருந்து எடுத்ததால் நின்றது.

குறள் மொழியில் சொல்வதானால்பணத்திற்காக உடலை விற்பவர்களுக்கு ஒப்பானவர்கள் தமிழ்ப்பெயர்களை அடியோடு புறக்கணிக்கத் தொடங்கினர்; பிற மொழிப்பெயர்களைச் சூட்டலாயினர். அந்த வரிசையில் இப்பொழுது ஒரு திரைப்படம் ஆங்கிலப் பெயர் தாங்கி வருகின்றது.

தன் தோற்றத்தையும் நடிப்பையும்பற்றிக் கவலைப்படாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் தன்னம்பிக்கையுள்ள ஒருவர் தன் படத்திற்கு ‘The Legend’ என ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஒலி பெயர்ப்பு முறையில் கிரந்த எழுத்தைப்பயன்படுத்தித் தமிழில் குறிப்பிட்டுள்ளார். இதே பெயரில் ஆங்கிலத்தில் சில படங்கள் வந்துள்ளன. இதனுடன் எழுச்சி போன்ற அடைமொழி சேர்த்தும் படங்கள் வந்துள்ளன. இப்பெயர் தங்கள் கடையின் வணிகப்பெயர் என்றும் தன் அடைமொழி என்றும் பட ஆக்குநர் கூறலாம். தமிழ்நாட்டில் வணிகம் நடத்தித் தமிழர்களால் செல்வம் திரட்டித் தங்கள் நிறுவனத்திற்குத் தமிழ்ப்பெயர் வைக்காததே தவறாகும். அப்பொழுதே இதனைத் தடுத்திருந்தால் இப்போது தடுக்க வேண்டிய தேவை வந்திராது.

‘The Legend’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பின்வரும் பொருள்கள் உள்ளன:

கட்டுக்கதை,  குறி பொறிப்பு,   குறி விளக்கம், செம்மல், தனது துறையில் பெரும் புகழ் வாய்ந்தவர், தொன்மக் கதை, படக்குறிப்பு, பரம்பரைக்கதை, பழங்கதை, பழமரபுக் கதை, பாடல் தலைவர், புகழ்பெற்ற அளவுக்கு குறிப்பிடத்தக்கவர்; புராணக்கதை, பெயர் பெற்றவர், மரபுவழிக் கதை, மிகவும் நன்கு அறியப்பட்ட, வரைபட விளக்கம்/தலைப்பு, மேதை.

இவற்றுள் உயர்திணையைக் குறிக்கும் புகழ் வாய்ந்தவர், பாடல் தலைவர் போன்ற சொற்கள் தவிரப் பிற இப்படத்திற்குப் பொருந்தாது. இவற்றுள் மேதை என்பது சுருக்கமான சொல்.

மேதை என்பதற்குப் பேரறிவாளி, பேரறிவு, மேன்மை எனப் பொருள்கள் உண்டு. இச்சொல்லுக்கு கள், கொழுப்பு, இறைச்சி, தோல், நரம்பு,  பொற்றலைக் கையாந்தகரை (மருந்துப் பூடுவகை),    உடலிலுள்ள ஒகங்களாகிய பதினாறு கலைகளுளொன்று எனவும் பொருள்கள் உண்டு. அவை இங்கே பொருந்தா.

முன்பு ‘படிக்காத மேதை’ வந்து சிறப்புற்று விளங்கியது. இப்பொழுது ‘மேதை’ வந்து அதே போல் புகழும் செல்வமும் பெறலாம்.

புதுப்பெயர் சூட்ட எண்ணினால், ‘புகழ் வாணர்’ அல்லது சுருக்கமாகப் ‘புகழி’ எனலாம். செம்மல் என்பதும் சிறப்பாக இருக்கும். படத்தின் பெயருடன் செம்மல் சரவணன் என்று சொல்லும் பொழுது எவ்வளவு பெருமிதமாக இருக்கும். இவ்வாறு ஏதேனும் தாங்கள் விரும்பும் தமிழ்ப்பெயரைப் படத்திற்குச் சூட்டுமாறு திரைப்பட நிறுவனத்திற்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம். இல்லையேல் தமிழன்பர்கள் இப்படத்தைப் புறக்கணிக்கும் நிலைக்குச் செல்வர் என்பதையும் உணர வேண்டும்.

அதே நேரம், அரசிற்கு இப்படத்திற்கும் இதே போன்ற பிற மொழிப்பெயர் சூட்டும் பிற திரைப்படங்களுக்கும் நல்கை போன்ற எவ்வுதவியும் அளிக்கக் கூடாது. சொந்தக் குரலில் பேசினால்தான் தேசிய விருது தருவதுபோல், நம் சொந்த மொழியாகிய தமிழில் பெயர் இருந்தால் மட்டுமே திரைப்படத்திற்கும் அதில் பங்கேற்றுள்ள எல்லாவகைத் திரைப்படக் கலைஞர்களுக்கும் கலைமாமணி, சிறந்த படம், சிறந்த நடிகர் போன்ற விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்ப்படம் வைப்பதற்கு இதுபோன்ற சூழல் இருப்பது வேதனையானதுதான். என் செய்வது தமிழைக்காக்க இப்படித்தான் செயல்பட்டாக வேண்டும். கலைஞரின் தமிழ்ப்பெயர்க் கனவு கலைந்து விட்டதால், இம்முறையிலேனும் அவர் கனவை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகிறோம்.

படத்தின் பெயருடன் மட்டும் நின்று விடாமல் படத்தில் இடம் பெறும் கதைப்பாத்திரங்களின் பெயர்கள், இடங்கள், நிறுவனங்கள் முதலியவற்றின் பெயர்கள் ஆகியனவும் தமிழாக இருக்க வேண்டும். திரைப்பாடல்கள் ஒலிக்கோவையாகவோ பிற மொழிச்சொற்கள் கலவையாகவோ இராமல் தமிழ்ச்சொற்களாக இருக்க வேண்டும். உரையாடல்களில் மொழிக்கலப்பு தடை செய்யப்பட வேண்டும். இவற்றையும் அரசு வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் தமிழினம் மேலும் அழிவதிலிருந்தும் தமிழ்மொழி மேலும் சிதைவடைவதிலிருந்தும் காப்பாற்றப்படும்.

இப்படக் குழுவினரையும் உடனே தமிழ்ப்பெயர்  சூட்டி விளம்பரம் செய்யுமாறும் தேவை யெனக் கருதினால் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

கலைத்துறையில் உள்ள தமிழார்வலர்கள் தக்க வழிகாட்டுதலும் அறிவுறுத்தலும் வழங்கி நற்றமிழ் நிலைக்கத் தொண்டாற்ற வேண்டுகிறோம். திரைப்படப் பெயரைப் பதியும் பொழுதே தமிழ்ப்பெயராக இருந்தால் மட்டுமே பதியப்படும் என்னும் நடைமுறையைக் கொணர வேண்டுகிறோம்.

எனவே, தமிழ்நலத்தில் கருத்து செலுத்தும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின், கலை பண்பாட்டிற்குப் பொறுப்பாக உள்ள முதல்வர் வழியில் தமிழ் நலனில் கருத்து செலுத்தும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இப்படப் பெயரை மாற்றச் செய்வதிலிருந்து தொடங்கி இனி எப்போதும் தமிழ்ப்பெயர்கள் திரைப்படங்களுக்கு அழகு சேர்க்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை