(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

  [ஙோ] 3. தமிழ்நலப் போராளி

 இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும்  கருத்துகளைக் காணலாம்.

 “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது புதிய ஒன்றாகத் தோன்றும். அதுபோல்தான் தமிழ் இலக்கியம் மீது படிந்த ஆரியக் கறையைப் போக்கி அதன் தூய்மையைப் பேராசிரியர் சி.இலக்குவனார் வெளிப்படுத்திய பொழுதெல்லாம் எதிர்ப்பையே சந்திக்க வேண்டி வந்தது. இதனால் பேராசிரியர் இலக்குவனார் ஆய்வு முறையிலும் ஒரு போராளியே” என முதுமுனைவர் இரா.இளங்குமரனார் படம்பிடித்துக் காட்டுகிறார். பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-ஆய்வுரைகள் பற்றிய கருத்தாகப் பின்வருமாறு அவர் தெரிவிக்கிறார்(செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்: பக்கம் 4):

 “தொல்காப்பியம், வடமொழிச் சார்புடையது என்னும் நோக்கிலேயே வடமொழி ஆர்வலர்களால் உலகுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. முற்றிலும் அது தமிழ் நெறியே எனக் கண்ட இலக்குவர், தம் கண்டுரையை எழுதினால் அதனை உடனே ஏற்றுவிடுவரோ? அதனால் தடைகள் சில கிளத்தித் திருப்பினர். அத்தடைகளை எல்லாம் தம் நுண்மாண் நுழைபுல ஆவுக் கோடரியால் உடைத்துத் தொல்காப்பிய நெறி தமிழ் நெறியே என மெப்பித்து அரிமாவெனத் திகழ்ந்தார் இலக்குவனார். அதனால், அவர் ஆய்வியல் பட்டப் பேறு வகையாலும் தமிழ் மொழிப் போராளி என்னும் நிலையையே நாட்டினார்”  என்பதே புலவர்மணியாரின் கணிப்பு.

 தனித்தமிழ் என்றால் இப்பொழுதும்கூடப் பிராமண எதிர்ப்பாகக் கருதுவோர் பெரும்பான்மையர் உள்ளனர். அக்காலத்தில் அத்தகைய போக்கு மிகுதியாகவே இருந்துள்ளது. இதனால் பிராமண வகுப்பினர் தமிழ் அன்பர்களைப் பகைவர்களாகக் கருதி நடந்து கொள்ளும் போக்கும் இருந்துள்ளது. அக்காலப் போக்கு குறித்துப் பேராசிரியர் இலக்குவனார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “

  “ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் எல்லாரும் ஒன்று சேர்ந்து உரையாடுவதும் பார்ப்பனரல்லாதார் நலம் குறித்துத் தருக்கம் செய்வதும் சேர்ந்தே மாலை நேரங்களில் உலாவச் செல்வதும் வழக்கம். அப்பொழுது மாவட்டக் கழகத் தலைவராயிருந்தவர் பேராயக்கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே, நாங்களெல்லாரும் அரசுக்கெதிராக நடந்து கொண்டிருப்பதாக மொட்டைக் கடிதங்கள் மாவட்டக்கழகத்தலைவர்க்கு எழுதப்படும். இந்திமொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டுவிட்டது. அதனை எதிர்த்துக் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. தமிழாசிரியர்கள் இந்தியை எதிர்த்தனர். இந்தி முதன்மை பெற்றால் தமிழ் அழியும் என்பதை எல்லாத் தமிழாசிரியர்களும் அறிந்திருந்தனர். ஏனை யாசிரியர்களில் பார்ப்பனரல்லாதாரில் ஒருவர் இருவரைத் தவிர எல்லோரும் இந்திக் கட்டாயத்தை எதிர்த்தனர். இந்திக் கட்டாயத்தை எதிர்ப்போரை ஆட்சி எதிர்ப்பாளராகவே கருதினர். பார்ப்பனர்கள் இந்தியை வரவேற்றனர்;  ஆர்வமுடன் அதனைப் படித்தனர். பார்ப்பன மாணவர்கள்  இந்தியைப் படித்து அதிகத் தேர்ச்சி பெறுவதை இன்பப் பொழுது போக்காகக் கொண்டனர்.

  பார்ப்பனர்கள் வேலைவாய்ப்புக்காகவும் உரிமைகளைப் பெறுவதற்காகவும் தம்மைத் தமிழர்கள் என்று கருதிக் கொள்வர். ஆனால், தமிழைத் தமது மொழியாகவோ, திருக்குறளைத் தமது மறையாகவோ தமிழ்நாட்டைத் தமது நாடாகவோ ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள். தமிழர்களுடன் இரண்டறக் கலந்து வாழமாட்டார்கள். வெளிநாடுகளில் உள் நாட்டவர் உயர்ந்தவர்; வெளிநாட்டவர் தாழ்ந்தவர். ஆனால், தமிழ்நாட்டிலோ, தமிழ்நாட்டுக்கு உரியவர், தொன்றுதொட்டு இங்கே வசித்து வருபவர் தாழ்ந்தவர்எங்கிருந்தோ வந்து குடியேறியவர் உயர்ந்தவர். இந்நிலை என்று மாறுமோ?

  பார்ப்பனர்கள் தம்மை உயர்ந்தோராக ஆக்கி ஏனையோரைத் தாழ்ந்தவராகச் செய்து சாதிமுறையை வலுப்படுத்தி விட்டனர். இக்கொடுமையை  எதிர்த்தே பெரியார் அவர்கள் போராடத் தொடங்கி ஓரளவு வெற்றியும் பெற்றனர். ஆட்சித்துறையில் பார்ப்பனரல்லாதார் உயர்வுக்காக நீதிக்கட்சி பாடுபட்டுவந்தது. ஆதலின் பார்ப்பனர் அல்லாத படித்தவர்களில் பெரும்பான்மையினர் தன்மதிப்பு இயக்கம், நீதிக்கட்சி ஆகியவற்றின்பால் பற்றுடையராகவே இருந்தனர். படித்த பார்ப்பனரல்லாதார்க்கும் பார்ப்பனர்க்கும் இடையே உட்பகை வளர்ந்து வந்தது. பார்ப்பனர்கள் பேராயக்கட்சியைப்போற்றினர். கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் இருசாராரிடையேயும் பிரிவு மன்பான்மை வளர்ந்தே வந்தது.

  தூயதமிழில் உரையாடுவதும் பெயர் வைத்திருப்பதும் மொழிவெறியாகக் கருதப்பட்டது. என்னை மொழி வெறியனாகவே கருதினர். ஆயினும் மாணவரிடையேயும் மற்றவர்களிடையேயும் தூய தமிழ்ப்பற்றை உண்டாக்குவதில் யான் தவறிலேன். வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசுகின்ற பிராமணர்க்குத் தூயதமிழ்க்கொள்கை பிராமணர் வெறுப்பாகவே தோன்றியது.

  “இதன் மூலம் பேராசிரியர் இலக்குவனார் இந்திமுதன்மை எதிர்ப்பு உணர்வைத் தாம் பணியாற்றத் தொடங்கிய பொழுது இருந்தே மாணவர்களிடமும் மக்களிடமும் விதைத்து வந்துள்ளார் என்பதை உணரலாம். பேராசிரியரின் அரும்பணிகளால் தமிழ்ப்பற்றும் தன்மான உணர்வும் மாணாக்கர்களிடையேயும் பொது மக்களிடையேயும் கால்கொண்டன. சிலர் படிக்கும் பொழுது ஒரு நிலையிலும் பணியில் சேர்ந்த பின் வேறு நிலையிலும் இருப்பர். தமிழ் நலனையே எப்போதும் நாடும் பேராசிரியர் இலக்குவனார் நிலை மாறாமல் தொண்டினைத் தொடர்ந்தார். பேராசிரியரின் தனித்தமிழ் உணர்வூட்டமும் பகுத்தறிவு வித்தும் இந்தி எதிர்ப்பும் தந்தை பெரியாரிடம் கொண்டிருந்த தொடர்பும் தமிழ்ப்பகைவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.  பேராசிரியர் இலக்குவனார் வகுப்பிலும் வெளியிலும் ஆற்றும் தமிழ்க் காப்பு உரைகளாலும் தமிழ் விழாக்களாலும் தமிழ் வகுப்புகளாலும் தமிழ் வெறுப்பாளர்கள் பேராசிரியரைப் பகைவராகக் கருதி எதிர்த்தனர்.  அவர்கள் பல்வேறு வகைகளில் பேராசிரியருக்கு ஊறு விளைவித்தனர். பேராயக் கட்சியினரில் பெரும்பான்மையர் இன்றுபோல் அன்றும் தமிழ் என்று சொல்வதையே விரும்பாதவராக இருந்தனர். எனவே, பேராசிரியருக்கு எதிராக மொட்டை மடல்கள் அனுப்புவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, துண்டறிக்கைகள் அடிப்பது, பொதுக்கூட்டங்களில் தாக்கிப் பேசுவது, இதழ்களில் எதிர்த்து எழுதுவது அரசிற்கு எதிரான கருஞ்சட்டைப்படையினர் எனக் குற்றம் சுமத்துவது முதலான பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கினர். தமிழுக்குக்   கேடு செய்யும் பெரு மலையும் தூள் தூளாகும் என்னும் நம்பிக்கையால் அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டார்.

(தொடரும்)