[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி

  அப்போதைய ஆளுநர் திரு சிரீபிரகாசா அவர்கள், “ஆடவர்கள் வெறித்துப் பார்ப்பதை மறுக்கும் ஒரு பெண்ணைக் கூட நான் இதுவரை சந்தித்ததில்லை” எனப் புதிய மண்டபத்திறப்பு விழா ஒன்றில் பேசினார். இது குறித்த கண்டனைக் கணைகளை விடுக்கப் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை. பின்வரும் பேராசிரியர் இலக்குவனாரின் உரையே அவரின் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தும்.

  “பந்தயம் பார்க்கவும் பதக்கங்கள் வழங்கவும் கட்டடத் திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதற்கும் அடிப்படைக் கல் நாட்டவும் தவறாது சென்றுவருவதுதான் ஆளுநர் அவர்களுக்குரிய கடமையா? பட்டத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, உல்லாச புரியிலே உலவும் நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்களின் தன்மான உணர்ச்சியை மறந்தா அவர் இவ்வாறு உளறினார்? கற்பை உயிரென ஓம்பும் வேறெந்த நாட்டிலுமில்லாத நம் தமிழ்ப் பண்பாட்டை அவர் அறிந்திலர் போலும். வேற்று ஆடவர் வெறித்துப் பார்ப்பதை வட நாட்டுப் பெண்கள் சிலர்  ஒரு வேளை விரும்பி வரவேற்கலாம்,… ஆரியப் பரம்பரையில் வளர்ந்து, ஆரியச் சூழலிலேயே பழகிப் பழுத்துப் போயிருக்கும் திரு சிரீ பிரகாசா அவர்களது குண இயல்புகளைத்தானே பறைசாற்றுவார்? அதற்காக அவர் இந்திய நாட்டு எல்லாப் பெண்களையுமே ஏன் இழிவு படுத்த வேண்டும்?

                   …  …   …

 ஆராயும் திறனற்ற அவரது இந்த மொழிகளை அங்கிருந்த அத்தனை பேரும் விகடமென்று கருதினர் போலும். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவர் கூற்றை மறுத்து உண்மையை விளக்கிப் பெண்ணினத்தின் பெருமையை நிலைநாட்ட, ஒரு தமிழன், தமிழச்சிகூட அங்கில்லை. எத்தனை வருந்தத்தக்க செய்தி இது? அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற உயரிய குணங்களை உயிர்நாடியாகக் கொண்டிருந்த தமிழ் உதரத்தில் ஊறி உருவான பெண்களும், அவர் இங்ஙனம் உளறியதைக் கேட்டுச் சிரித்தனராம். ஆம், அதனைக் கேட்டு நாமும் சிரிக்கின்றோம். பண்டைத்தமிழ் மரபுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தி விட்ட அவர்களது தகாத செயலைக் கண்டு வயிறெறிந்துதான் சிரிக்கிறோம்.

 இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாட்டுக்களை எடுத்தோதி அவரைத்திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52  மலர் 1 இதழ் 7)

   பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலும் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிராகவும் பழித்துக் கூறியவர் ஆளுநரே ஆக இருந்தாலும் தம் எதிர்ப்பைக்காட்ட அஞ்சவில்லை பேராசிரியர் இலக்குவனார். நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பதுபோல் நாட்டின் உயர் நிலைத் தலைமை நிலையில் உள்ளவராக இருப்பினும் குற்றத்தை இடித்து உரைக்கத் தவறவில்லை அவர். தீங்குரை கேட்பின் பொங்கி எழ வேண்டும் என மக்களுக்கும் அறிவுறுத்த மறக்க வில்லை அவர். அதனால்தானே பேராசிரியர் இலக்குவனார், இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் என்றும் இரண்டாம் நக்கீரர் என்றும் நாட்டு மக்களால் போற்றப்படுகிறார். இதனால் அவர் பண்பாட்டுப் போராளியாகவும் திகழ்கிறார்.

   சிலர் தமக்கு வேண்டாதவர் கூறிய கருத்தெனில் கடுமையாக எதிர்ப்பர். தம் அன்பிற்குரியவர் என்ன சொன்னாலும் வாய்மூடி அமைதி காப்பர். பேராசிரியர் இலக்குவனார் அத்தகையவர் அல்லர். தமிழ்ப் பகைக் கருத்தை யார் சொன்னாலும், யார், எவர் என நோக்காது கடிந்துரைப்பவர். இதற்கு எடுத்துக்காட்டாகப் பலவற்றைக் கூறலாம். இரண்டை மட்டும் இந்த இடத்தில் காண்பது சிறப்பாக இருக்கும். ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள், அடுத்த நூற்றாண்டில் இந்தி வந்து விட்டுப் போகட்டும். இப்பொழுது வேண்டா என்றார். உடனே பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், “வரும் தலைமுறையினருக்குரிய மொழி உரிமையை முடிவெடுக்கும் உரிமையை யார் இவருக்குத் தந்தது. இன்று நாளை என்று இல்லாமல் என்றுமே இந்தியோ வேறு பிற மொழியோ புகுத்தப்படக்கூடாது” என்றார். உடனே பேரறிஞர் அண்ணா அவர்கள் தமக்கும் இந்தக் கருத்து உடன்பாடுதான் என்றும் ஒரு பேச்சிற்காகச் சொல்வது என்பார்களே அந்த அளவில் இந்த நூற்றாண்டில் வேண்டா எனக் கூறியதாகவும் விளக்கினார். இந்த நடுநிலைப்போக்குதான் அவருக்குச் சிறப்பைத் தந்தது.

 இதுபோல் தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து பேராயக்கட்சியை(காங்கிரசை) ஆதரித்துப் பேசியது கண்டு அவருக்கு எதிராகவும் வெகுண்டெழுந்துள்ளார்.

(தொடரும்)