தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி)

 

 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி)

  தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு   

என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழியை விழியாக எண்ணிக் காக்க வலியுறுத்துவதைப் பேராசிரியர் இலக்குவனார் விளக்கி உள்ளார். அந்த அடிப்படையில் மொழி உரிமை காப்பதும் குறள்நெறியே என்று ‘குறள்நெறி’யை மொழிப்போர் ஆயுதமாக நடத்தினார். தொடக்கத்தில் இருந்தே இந்தி எதிர்ப்பு பற்றிய கட்டுரைகள், வினா விடைகள், கவிதைகள் என இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்க்காப்பையும் தமிழ்ப்பயிற்சி மொழி முதலானவற்றையும்  வலியுறுத்தியும்  படைப்புகள் வந்தன. தமிழ் ஆர்வலர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய இதழாகக் குறள்நெறி அமைந்தது.

   மாணவர்கள் மத்தியில் ‘குறள்நெறி’ பரவியது. எந்தப் புரட்சியும் திடீரென்று முளைத்து வெடிப்பதல்ல. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போருக்கான தளத்தையும் களத்தையும் குறள்நெறி அமைத்தது. தொடக்கத்தில் இருந்தே பேராசிரியர் இந்தியை எதிர்த்து வந்தாலும்,  அவர் ஒருவர்தாம் முன்னின்று இந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் கொண்டு சென்றிருந்தாலும்,  1960களில் மேலும் பரவலாக்கவும் முனைப்பாக்கவும் விரும்பினார். இதற்கு அரசியல் பின்னணியும்   வேண்டும் என்பதால் அடுத்து ஆட்சியை அமைக்கும் எனக் கருதிய தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போரில் குதிக்க வேண்டும் என விழைந்தார். தியாகராசர் கல்லூரிக்குப் பேசுமாறு பேரறிஞர் அண்ணாவை அழைத்து, அவர் பங்கேற்றுப்பேசிய கூட்டத்தில்,1965 இல் இந்தி தானாகவே அரியணையில் அமர்ந்து நம்மை அழுத்தப் போவதால் முனைப்புடன் எதிர்க்க வேண்டும் என வேண்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தம் கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டி பேராசிரியர் இலக்குவனார் கூறும் பேரிடரை எடுத்துரைத்து மொழிப்போரில் கழகத்தவரை இறங்கச் செய்தார்.

 இந்திய அரசு தமிழினப் பகை அரசாக நடந்து கொள்வதைத் தொடர்ந்து உணர்த்தி வந்தார். முழுஉரிமையுடன் கூடிய தமிழக அரசு அமைந்தால்தான் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்க்கலை, தமிழ்நாகரிகம், தமிழ்ப்பண்பாடு முதலாயின ஓங்கவும் ஒளிரவும் இயலும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார். இதனை விளக்கும் அவரின்  படைப்பு ஒன்று வருமாறு:

இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது.

 தமிழகத்தின் பழைய கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்படாமல் அப்படியே மறைவுண்டு கிடக்கின்றன. கல்வெட்டுத்துறை, பழம்பெரும் ஆராய்ச்சித் துறை எனப் பல துறைகள் இந்திய அரசினர் கொண்டுள்ளனர்; கொண்டிருந்தும் பயனில்லை.

 ஒருகால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர் சங்க காலச் சோழர் காலத்தில் சிறப்புற்றிருந்த காவிரிப் பூம்பட்டினம் கடலால் மறைவுண்டு புதைவுண்டு கிடக்கின்றது. கடலுக்கடியில் ஆய்வு நடத்தினால் சோழர் கால வரலாறு தெரிவதற்கு இயலும் என இந்திய அரசுக்கு எழுதினராம். இந்திய அரசு இப்பொழுது அத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபட வசதி யின்று என அறிவித்துவிட்டதாம். நமது முதலமைச்சர் இன்று வெளிப்படுத்தியுள்ள உண்மை பல ஆண்டுகட்கு முன்பே மெய்ப்பிக்கப்பட்டதாகும்.

 ஆகவே, இனியேனும் தமிழக அரசு விழித்தெழுந்து தமிழகப் பழம்பெருமைகளை வெளிப்படுத்த ஆவன விரைந்து செய்யும் என எதிர்பார்க்கின்றோம். புதியதற்கு அடிப்படை பழைமையே என வலியுறுத்திய தமிழக முதலமைச்சர் அவர்கள், பழைமையைக் கண்டு பிடித்து வெளிப்படுத்தவும் அதனை உலகுக்கறிவிக்கவும் முன் வருவார் என நம்புகின்றோம். இந்திய அரசு உதவாது என அறிந்து அதனை உளமார வெளிப்படுத்திய முதலமைச்சரைப் பாராட்டுகின்றோம்.

 இந்திய அரசு  தமிழக வளர்ச்சியில் முழு ஆர்வம் காட்டாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆகவே முழு உரிமையோடு கூடிய தமிழக அரசைப் பெற முயல்வோமாக.

குறள்நெறி (மலர்1  இதழ்144): ஐப்பசி 24, 1997: 9.11.1966

மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்தி எதிர்ப்பு உணர்வு பேராசிரியரால் தீப்பிழம்பாக மாறியது.

 ஆங்கிலம் அயல்மொழி; அதனால் பொதுமொழியாகத் தகுதியற்றது என்பாருக்கு அதேபோல் இந்தியும் பிற மொழியினருக்கு அயல் மொழியே என்பதை விளக்கினார்.

ஆங்கிலம் அயல்மொழி என்றால் இந்தி மொழியும் இந்தி மொழியினர் அல்லார்க்கு அயல்மொழிதானே என்று கூறுவார் கூற்றைத் தள்ளமுடியாது அன்றோ? உலகக் கூட்டரசை உருவாக்கி அனைத்துலக மக்களும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற கொள்கையை மேலோங்கச் செய்து வெற்றி பெறவேண்டும்.

 என உலக்கூட்டரசை வலியுறுத்தினார்(குறள்நெறி). பின் வரும் நூற்றாண்டுகளில் உறுதியாக உலகக் கூட்டரசு அமையும்;  அப்பொழுது பேராசிரியர்  இலக்குவனாரின் தொலை நோக்கு உணர்வு தெள்ளிதின் புரியும்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்