தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ)

 

  சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.

  “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.

 இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில் கொள்ள வேண்டியன.

 சமயச் சார்பற்ற அரசில் சமயத் தொடர்பான நாட்களுக்கு விடுமுறை விடுவது எதற்கு? நில நூல் வான நூல்பெருகியுள்ள  இக்காலத்திலும், திங்களில் சென்று உறைவதற்குத் திட்டமிடும் இந்நாளிலும், ஞாயிற்று மறைப்புக்கு (Solar eclipse) விடுமுறைவிடுகின்றது எற்றுக்கு? இவையெல்லாம் பிராமணர்களின் செல்வாக்கைத்தானே    சுட்டுகின்றன. சமயச்       சார்பற்றது என்னும் போர்வையில் பிராமணீயமாம் இந்து மதமே ஆட்சி புரிகின்றது. 

சட்டம் செதால் மட்டும் போதாது. உள்ளங்களும் திருந்த வேண்டும். சாதிமத வேறுபாடுகள் ஒழிந்த மன்பதையை உருவாக்க உளமார உழைத்தல் நாட்டு நலன் நாடுவார் அனைவரின் கடனாகும். கல்வி நிலையங்கள் இத்துறையில் முன்னோடிகளாகத் தக்க வழிகாட்ட வேண்டும்.”

 குறள்நெறி (மலர்2 : இதழ்22): கார்த்திகை 16,1997 : 1.12.65

இவ்வாறு சாதி சமயமற்ற மன்பதை உருவாகக் கல்விநிலையங்களே வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 தமிழ் வகுப்புகள் மூலம் அறிவுப்பசியைத் தீர்த்து வைத்த தமிழ்க்காப்புக்கழகம், வீதிகளுக்கு வந்து தமிழ் காக்கப் போராடியது. பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறவும் தமிழ்ப் பெயர் சூட்டவும் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தவும் தமிழ்வழிபாட்டையே போற்றவும் தமிழ்நெறியில் வாழவும் வலியுறுத்திய ஊர்வலங்கள் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தின. 25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் (செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):

 “தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”

  தமிழ்க்காப்புக்கழகச் செயல்பாடுகளாலும் ‘குறள் நெறி’யாலும் இந்தி எதிர்ப்பு உணர்வும் தமிழ்க்காப்பு உணர்வும் பொது மக்களிடையே நன்கு பரவியது. மாணவர்கள் பெரிதும் தமிழ் உணர்வோடு தங்களை இணைத்துக் கொண்டனர். 1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் இந்தி எதிர்ப்புப் போர் பெரிதாக வெடித்தது. அரசால் மாணவர்களை அடக்க  இயலவில்லை. மாணவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனப் பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்களும் கை விரித்து விட்டனர். தி.மு.க.மாணவர்கள் மட்டும் போராட்டத்தில் இருந்தால் கட்சியால் கட்டுப்படுத்த இயலும். ஆனால், அனைத்துக் கட்சியினரும் கட்சி சாராதவர்களும் எனப் பங்கேற்கும் போராட்டத்தை நிறுத்தும் விசை மதுரையில் பேராசிரியரிடம்தான் உள்ளது எனப் பேரறிஞர் அண்ணா கூறினார். இந்தி எதிர்ப்புத் தீயை அணைக்க முடியாமல், காவல்துறையினர் பேராசிரியர் இலக்குவனாரை அணுகி மொழிச்சிக்கலைத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் மாணவர்கள்  போராட்டத்தை விலக்கி அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட வேண்டினர். அவ்வாறான அறிக்கை தம்முடைய ஆசிரியக் கடமைக்கு மாறுபட்டதென்றும் தமிழ்நலனுக்கு எதிரானது என்றும் கூறிப் பேராசிரியர் இலக்குவனார் மறுத்துவிட்டார்.

 இந்தி எதிர்ப்புப் போரை அடக்குவதற்குப் பேராசிரியர் அறிக்கை தராமையால், பேராசிரியர் இலக்குவனாரை அடக்கினால், இந்தி எதிர்ப்புப் போரும் அடங்கும் என அரசு கருதியது. எனவே, இந்தி எதிர்ப்புப் போரினைத் தலைமை தாங்கி நடத்துபவர் எனக்கூறிக் காவல்துறையினர் பிப்பிரவரி முதல்நாளன்று பேராசிரியரை (மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள) அவருடைய குறள்நெறி அச்சகத்தில் கைது செய்தனர். இருநாள் முன்னதாகவே மாலைமுரசுச் செய்தியாளர் ஒருவர் மூலம் கிடைத்த செய்தியால்  பேராசிரியர் இதற்கு ஆயத்தமாகவே இருந்தார். அச்சகத்தில் குப்பைக் கூளங்களையும் ஆராய்ந்து, அமைச்சரவையைக் கவிழ்க்க வேண்டும் என்ற மாணவர்களின் துண்டறிக்கை முதலானவற்றையும் பேரறிஞர் அண்ணா முன்னுரை எழுதியிருந்தமையால் தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூலையும் அச்சுப்பொறியில் அச்சிற்கு ஆயத்தமாக இருந்த அச்செழுத்துக் கோப்பையும் எடுத்துக் கொண்டு காவலுடன் திருநகர் இல்லம் வந்தனர். அங்கும் புத்தகங்களையும் அறிக்கைகளையும் ஆராய்ந்து, தங்களுக்கு விசாரணைக்குத் தேவைப் படலாம் எனக் கருதுவனவற்றுடன் நள்ளிரவு 12.00 மணிக்கு மதுரைக் காவல்துறை மைய நிலையக் கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர். “இன்பத்தமிழுக்காக ஏகுகின்றோம் சிறைக்கு என்னும் பெருமித உணர்வுடன் யான் வீற்றிருக்க முன்னும் பின்னும் காவலர்கள் வீற்றிருந்த ஊர்திகள் வர, இரு பக்கங்களிலும் இரு காவல்துறை அலுவலர்கள் அமர்ந்திருக்க மகிழுந்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக” இது குறித்துப் பேராசிரியர் குறிப்பு எழுதி உள்ளார். மறுநாள் காலை மாவட்டக்காவல்துறைத் தலைவர் வந்து பார்த்துவிட்டுச் சென்றதாகவும் காவல்துறையினர் அன்பாகவே நடத்தியதாகவும் தமிழுக்காகச் சிறைப் படுத்தப் பட்டுள்ளார் என இரக்கத்துடன் பேணிக் காத்ததாகவும் பேராசிரியர் குறித்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் வீட்டிற்கு உள்ள தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டனர். குற்றம் புரிந்து சிறைக்குச் செல்வோர் தங்களை ஈகியராகக் காட்டிக் கொள்வதும் உள்ளே வசதிகளைப் பெற்றுக் கொண்டாலும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு உள்ளானதாகச் சொல்வதும் சிறைத்தண்டனையையே அடுத்த உயர்விற்கு அடித்தளமாக மாற்றுவதையும் இன்று நாம் காண்கின்றோம். ஆனால், பேராசிரியரோ தம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு ஊறு நேர்ந்திருப்பினும் ஒரு முறை கூடச் சிறைக் கொடுமையில் துன்புற்றதாகக் கூறவில்லை. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆதாயம் அடையவும் முயலவில்லை. சான்றோர் என்றும் சான்றோர் தாமே!

 பேராசிரியரின் கைதால் தமிழுலகம் மேலும் கிளர்ந்தெழுந்தது. வழக்கு மன்றத்தில், திரு தருமராசு சந்தோசம் தலைமையில் திரு இராமசுப்பிரமணியம் முதலான முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பேராசிரியருக்காக வழக்காடினர். அவர்கள் சார்பில் திரு மலைச்சாமி பேராசிரியரைச் சந்தித்துப், பொறுப்பில் விடுவிக்க ஆவன செய்ய உள்ளதாகக் கூறினார். பேராசிரியரோ, “அரசு விரும்பிச்சிறை வைக்கும் நாள் வரை சிறையிலேயே இருக்கின்றேன். பொறுப்பில் விடுதலை பெற்று  வர விரும்பிலேன்” என்று கூறி விட்டார். ஆனால், பேராசிரியருக்கு உணவு கொண்டு வந்திருந்த அவரது கெழுதகை நண்பர் திரு கோபால்(பிள்ளை) அவர்களும் திரு மலைச்சாமி அவர்களும் சில காரணங்களைக் கூறிப் பேராசிரியர் பொறுப்பில் விடுவிப்புபெற இசைய வலியுறுத்தினர். பேராசிரியர் இசைந்தார். (திரு மலைச்சாமியே பின்னர் இ.ஆ.பணியில் சேர்ந்து உயர் பதவிகள் பெற்றுத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்றவர்; நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.) ஆனால், பேராசிரியர் வெளியில் இருந்தால் நாட்டுக்குப் பேரிடர் உண்டாகும் என அரசு கருதுவதாகக் கூறி  நடுவர் மறுத்தார். பின்னர்க் கட்டுப்பாட்டுடன் கூடிய ஈட்டுப் பொறுப்பில் விடுவித்தார்.

  பேராசிரியர் குடியிருக்கும் திருநகர் எல்லையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டால் குடியிருக்கும் தெருவிலும் பக்கத்துத் தெருக்களிலும் அடுத்துள்ள தெருக்களிலும் எனக் காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டுக் கண்காணித்தனர். வீட்டிற்கு வருவோர் போவோரையும் கண்காணித்தனர். என்ற போதும் மார்ச்சு 8 ஆம் நாள் கல்விநிலையங்கள் திறக்கப்படும் என அறிவித்ததால்,  பேராசிரியருக்கு விதித்த நிபந்தனைகளை நீக்கி நடுவர் மன்றம் ஆணையிட்டது. ஆனால், வழக்கு தொடர்ந்தது. காவல்துறையின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் நண்பர்களோ அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் காங்கிரசு மாணவர் உட்பட மாணவர்களோ  பேராசிரியருக்கு எதிராகச் சான்றுரைக்க மறுத்து விட்டனர். எனவே, அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வழக்கை ஆய்வுக்குக் கொண்டுவர இயலாது எனக் கூறிவிட்டார். காவல்துறையினரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தீவைப்பு முதலான கலக நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணமானவர் என்றெல்லாம் பேராசிரியர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் மெய்ப்பிக்கப்படவில்லை என நடுவர் மன்றம் பேராசிரியரை விடுதலை செய்தது. ஆனால், தமிழ் விடுதலை அடையும் வரை தாம் ஓயப்போவதில்லை எனப் பேராசிரியர் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் பணிகளிலும் தமிழ்க்காப்புப் பணிகளிலும் முனைப்புடன் ஈடுபட்டார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்