[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ)

  பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார்.

சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று

  செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று

 முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும்

  முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று

 குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்

  குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்

 நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்

  நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும்

 (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன்  குறள்நெறி 15.8.65)

எனப் பேராசிரியர் இலக்குவனார், தான் முதற்பலி ஆவதில் மகிழ்ச்சியே என்றார்.

  எதிர்பார்த்தவாறே காவலர்கள் தி.மு.க. கொடியேற்றப்பட்ட மகிழுந்தில் இல்லம் வந்து, காவல் நிலையத்திற்கு வாருங்கள் என அழைத்தனர். எந்தப் பொருளையும உடன் எடுத்துச் செல்லவோ,  வேறு  யாருடனும் தொடர்புகொள்ளவோ இடம் தரவில்லை. மதுரைக்குக் காவல்நிலையம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டதைத் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக இந்தியப்பாதுகாப்புச்சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்பட்ட கலைஞரைச் சுமையுந்தில் சென்னையிலிருந்து பாளையங்கோட்டைச் சிறைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதால் மக்களிடையே பெரும் கண்டனம் எழுந்தது. எனவே, பேராசிரியர் இலக்குவனாரை மகிழுந்தில் வேலூருக்கு அழைத்துச் சென்றனர். இருந்தபோதும் இருபுறமும் காவலர்கள் நெருக்க, கால்களை நீட்ட முடியாமல் முடக்கி வைத்துக் கொண்டு பயணம் செய்தது பேராசிரியருக்குத் துன்பத்தைத்தான் தந்தது. வேலூர் மத்தியசிறை சென்றதும் அதன் கண்காணிப்பாளர், முதன்முறையாகத் தமிழறிஞர் வருவதால் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

 பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்த் தொண்டிற்குப் பரிசாக அரசு சிறை வாழ்வு, பதவி நீக்கம் ஆகிய இரண்டினையும் வழங்கியது. நாடெங்கணும் இதற்குக் கண்டனம் எழுந்தது. ‘தமிழ்த்தாயைச் சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள்’ எனத் தலைவர்களும் தமிழ் அமைப்பினரும் வேண்டினர். தமிழ் நாட்டு அரசின் கொள்கையை மக்களிடையே பரப்பி அதற்கு ஆக்கம் தர முயன்றதற்குப் பரிசாக உயர்வைத் தராமல் தண்டனைகளைத் தரலாமா எனக்கேட்டனர்.

 துன்பமிகு சிறைக்கோட்டம் தூயதமிழ் காத்தற்கு

 இன்பமிகு மாளிகையாம் எத்துணைநாள் அடைத்திடினும்

(குறள்நெறி நாள் 15.7.65)

எனச் சிறைத்தண்டனையைக் கருதினார் பேராசிரியர் இலக்குவனார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்