தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ)
சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்:
“தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச் செயப் புறப்பட்டேன். நாட்டு மக்கள் கூட்டுறவுடன் நல்வாழ்வு வாழ நற்றமிழ் மறையாம் குறள்நெறியை நாளும் போற்றுமின் என நவிலப் புறப்பட்டேன். ‘உலகக் கூட்டுறவில் உயர் பங்கு கொள்மின்’ என உரைக்க முற்பட்டேன். இன்றமிழ் நாட்டில் எல்லாம் தமிழ் எங்கும் தமிழ் எனும் நிலை ஏற்றம் பெற என்னாலியன்றதைச் செய முற்பட்டேன். அந்தோ! தமிழால் வாழும் யான் தமிழுக்காகவும் வாழ்தல் கடன் என வள்ளுவர் நெறியில், காந்தியடிகள் காட்டிய வழியில் செயல்புரியத் திட்டமிட்ட என்னை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தி விட்டனர். செந்தமிழ் காக்கப் புறப்பட்ட எனக்குச் சிறை வாழ்வு கிடைத்து விட்டது.
சிறை வாழ்வு மட்டுமா? என் பேராசிரியர் இலக்குவனார் பதவியையும் இழக்க வேண்டி நேரிட்டுள்ளது. பேராசிரியர் இலக்குவனார் பதவியால் திங்கள் தோறும் பெற்று வந்த ஏறக்குறைய எழுநூறு வெண்பொற்காசுகள் வருவாயும் நின்றுவிட்டது.
என்னைக் கல்லூரியில் வைத்திருந்தால் கல்லூரிக்கு அரசினர் உதவி கிடைக்காதாம். ஆகவே, நான் கல்லூரியில் பணியாற்றுதல் கூடாதாம்.
இன்று என்னைக் கண்டால் எல்லாரும் அஞ்சுகின்றனர். நண்பர்கள் நகைமுகம் காட்டி இன்னுரையாடாது மறைந்தோடுகின்றனர். அன்பர்கள் ஆறுதல் கூறாது அகன்றோடுகின்றனர். உறவினர்கள் உறவாடுதலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர். அரசே என்னைக் கண்டு அஞ்சித் தற்காப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டதால் இவ்வச்ச நிலை; அவல நிலை.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ?
(தமிழ்க்)குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு
இவ்வளவுக்கும் நான் ஆற்ற இருந்த தொண்டுதான் என்ன? அரசின் குறிக்கோளை – கோட்பாட்டை – நாடு நன்கு கடைப்பிடிக்கச் செய முற்பட்டதுதான்.
உதட்டளவில் தமிழ்ப்பற்றைக் காட்டிவிட்டு உலகப் புகழ் பெற நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து திருந்த முற்படுங்கள். தமிழ்ப் பயிற்று மொழித்திட்டத்தை உடனே செயற்படுத்த முனையுங்கள்.
குறள்நெறி (மலர் 2 இதழ் 12) ஆனி 17, 1996 : 1.7.65
என்று குறள்நெறியிலும் எழுதினார்.
செந்தமிழ் மொழி எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெறவும் திருக்குறள் நெறியில் மக்கள் எல்லாரும் செம்மையுடன் வாழவும் உழைப்பதே என் குறிக்கோளாகும்.
(குறள்நெறி: ஆடி31,1996 : 15.8.65)
என்னும் இலக்குடன் வாழும் பேராசிரியர் இலக்குவனார் சிறைக்கு அஞ்சவில்லை. ஆனால், தமிழன்பர் ஒவ்வொருவருக்குமே தத்தமக்குத் தண்டனை வழங்கியதுபோல் கவலை. பேராசிரியர் இலக்குவனாரைச் சிறையில் அடைத்ததால், தமிழன்பர்கள் பலர், ஒரு வேளை உணவைத் துறத்தல், தாடி வளர்த்தல் முதலான நோன்புகளைப் பின்பற்றினர். பேராசிரியர் இலக்குவனார் விடுதலை பெற்றதும் இதனை அறிந்து அவர்களை அந்நோன்புகளைக் கைவிடுமாறு வேண்டினார். தாம் விடுதலை பெற்றாலும் தமிழ்த்தாய் விடுதலை பெறவில்லையே எனக் கவலைப்பட்டார். ஆட்சித்துறை, கல்வித்துறை, அறத்துறை என எல்லாத் துறைகளிலும் தமிழ்த்தாய் இழந்த இடத்தைப் பெற வேண்டும் என்றார். இது குறித்த ஆசிரியருரையில் மத்திய அரசு ஆரியம் முதலான வெளிநாட்டுப் புலவர்களைப் போற்றுவது போல் தமிழ்ப்புலவர்களையும் போற்ற வேண்டும் என்றார். இன்றைக்கு ஓரளவு இது நிறைவேறி உள்ளது. தமிழுக்குரிய செம்மொழித்தகுதிக்கான அறிந்தேற்பை வழங்கியதால் செம்மொழி விருதுகள் வழங்கித் தமிழ்ப்புலவர்கள் போற்றப்படுகின்றனர். ஆனால், பேராசிரியர் விழைந்தது போல் சம உரிமையில் போற்றப்படவில்லை. ஆரியம், அரபி முதலான புலவர்களுக்குத் தரப்படும் மூத்த அறிஞர் விருதுகள் தமிழுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. போராடிப் போராடிப் பெற்றாலும் ஒப்புக்குச் சப்பாணி போன்ற நிலையைத்தான் மத்திய அரசு தமிழுக்குத் தருகின்றது. இதற்கெல்லாம் காரணம் உதட்டளவில் தமிழின் உயர்வைப்பேசித்தம்மை மட்டும் உயர்த்திக் கொள்வோர் எண்ணிக்கை பெருகியதுதான் என்றார் பேராசிரியர். இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு:
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply