தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி]
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)
இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து வராது என வலியுறுத்தினர். ஆகவே, பேராசிரியர் கட்சித்தலைவர்களே அமைச்சர்களாக ஆகட்டும் என, அதனை நாடவில்லை. பேரறிஞரைச் சந்திக்க ஒருமுறை பேராசிரியர் இலக்குவனார் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர் தம்மைச் சந்திக்க வரிசையில் காத்திருப்பதைப் பார்த்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதிர்ச்சி உற்றார். தன்னைச் சந்திக்கப் பிறரைப் போல் அலுவலகம் வந்து காத்திருக்கக்கூடாது என்றும் எப்பொழுது சந்திக்க விரும்பினாலும் வீட்டிற்கு இரவு 10.00மணிக்கு மேல் வந்தால் தானே வெளியே வந்து அழைத்துப் பேராசிரியர் இலக்குவனாருக்குச் செவிமடுப்பதாகவும் கூறினார். “தமிழுக்குச் செய்யவேண்டியனவற்றை என் செவியில் சொல்லுங்கள் நான்செய்து முடிக்கின்றேன்” என்றும் சொன்னார். இத்தகைய பெருந்தன்மையும் தமிழ்உணர்வும் கெழுதகைநட்பும் கொண்ட முதல்வர் பேரறிஞரிடம் பேராசிரியர் இலக்குவனார் பணிச்சிக்கல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் தலைவராக இருந்து முதல்வராக வந்த பேரறிஞரிடம் எந்த ஒரு வேலையும் இன்றி அன்பினால் அவரைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து அவரைச் சூழ இருந்தமையால் இல்லத்தில் சந்திப்பதே ஏற்றது என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் புரிந்து கொண்டார்.
சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியர் இலக்குவனார் பணியாற்றும் பொழுதுதான் சென்னையில் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் மாநாடுகளில் பேராசிரியரைப் பங்கு கொள்ளச் செய்திருப்பின் தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பியிருப்பார். கட்சிக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளும் அரசுகள் அதற்கான உரிய வாய்ப்பை வழங்கவில்லை. பேராயக்கட்சி வழங்கும் என்று எதிர்பார்க்க இயலாதுதான். எனவே, முதலாம் உலகத்தமிழ் மாநாட்டில் அவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இது குறித்து முன்னர்ப் பின்வருமாறு பேராசிரியர் எழுதியிருந்தார்:
தமிழ் ஆராய்ச்சி மாநாடா? அரசியல் மாநாடா?
கோலாலம்பூரில் கூடவிருக்கும் உலகத் தமிழறிஞர் மாநாடு பற்றி முன்பொரு தடவை எழுதியிருந்தோம். முற்றிலும் தமிழுக்கு முதன்மை கொடுக்கும் தமிழ் ஆராய்ச்சி மாநாடாக விளங்குவதற்குரிய கருத்துகளையும் வெளியிட்டிருந்தோம்.
அம்மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து செல்வோரையும் அதற்குத் தலைமை ஏற்றிருப்போரையும் நோக்குமிடத்து அது ஒரு தமிழ் ஆராய்ச்சி மாநாடாகுமா என்று வினவத் தோன்றுகின்றது. இங்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களே முன்னிற்பது போல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குச் செல்லும் குழுவுக்கும் முதலமைச்சரே தலைமை ஏற்றுள்ளார். இக்குழுவில் இடம் பெற்றுள்ளோரை நோக்கும்போது அரசியல்கட்சி அடிப்படையில் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளவராகவே காணப்படுகின்றனர். செல்வோர் நாற்பதுக்கு மேற்பட்டவர் எனினும் செய்தி இதழ்களிலும் வானொலியிலும் அரசியல் தலைவர்கள் பெயர்களே முழங்கப்பட்டன. தமிழறிஞர் (டாக்டர்) மு.வ.வும் இக் குழுவில் செல்கின்றார். அவரை இக்குழுவுக்குத் தலைவராக அமைத்திருந்தால் தமிழுக்கு முதன்மை கொடுத்ததாகக் கருதப்பட்டிருக்கும்.
தமிழறிஞர்கள் எனப்படுவோர் தந்நலம் ஒன்றையே கருதி நாட்டு நலத்தையும் மொழி நலத்தையும் புறக்கணிக்கும்வரை தமிழறிஞர்கள் மதிக்கப்பட மாட்டார்கள். ஆதலின் தமிழறிஞர்கள் அரசியலில் பங்குகொண்டு நாட்டுப் பணிபுரிய முன்வரல் வேண்டும்.
பண்டைத் தமிழ் நாட்டில் தமிழ்ப் புலவர்கள் அரசியலில் முதன்மையிடம் பெற்று ஆட்சி செம்மையாக நடைபெறத் துணைபுரிந்தனரே! ஏன் இக்காலப் புலவர்களும் அவர்கள் வழியைப்பின்பற்றி வாழ்வியலின் ஒரு பகுதியாம் அரசியலில் ஈடுபடுதல் கூடாது? தமிழறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுத் தலைமையிடம் பெற்றாலன்றித் தமிழ் முதன்மையிடம் பெறாது.
குறள்நெறி : 15.4.66
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply