[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை)

   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தல் வந்தது. சட்ட மன்றத்தில் போட்டியிடுவதாக இருந்த பேராசிரியர் இலக்குவனாரிடம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகக் கூறியவர்கள் மேலவைக்காவது அனுப்பி இருக்கலாம். கழகத்தின் ஆதரவைப் பேராசிரியர் கேட்ட பொழுது நடுநிலை வகிப்பதாகக் கூறி மற்றொருவருக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். தமிழுக்காக அனைத்தையும் இழந்தவருடன் மற்றொருவரையும் இணையாக எண்ணி நடுநிலை வகிப்பதாகக் கூறியதை நாடகம் என்று சொல்வதல்லாமல் வேறு என்ன சொல்வது? இருப்பினும் பேராசிரியர் இலக்குவனார் முனைப்பாக ஆதரவு திரட்டினார். ஆனால் வாக்களித்தவர்கள் தமிழ் உழைப்பைக்கருதாமல் கட்சிக் கண்ணோட்டத்தில் செயல்பட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் நிலைக்கு வந்தார்.

 அ.தி.மு.க தோன்றியபின் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் மக்கள் திலகம் மா.கோ.இரா.அவர்கள் பேராசிரியர்  இலக்குவனாரைத்தான் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார் எனத் ‘தினமலர்’ முதலான நாளிதழ்கள் குறிப்பிட்டிருந்தன. அறிஞர்களையும் துறை வல்லுநர்களையும் ஆட்சியில் பங்கேற்கச்செய்ய வேண்டும் என்னும் பேரவாவில் இருந்தமையால் மக்கள் திலகம் அங்ஙனம் எண்ணியது உண்மைதான். எனினும் கடைசிநேரச் சூழலால் அவ்வாறு அறிவிக்கவில்லை. இந்திய நாடாளுமன்ற அமைப்பில் பேராசிரியருக்கு நம்பிக்கை இன்மையால் இது குறித்துக் கவலைப்படவில்லை. எனினும் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் இடம் பெறும் வாய்ப்பு அமைந்திருப்பின் தமிழுக்கும் ஏற்றத்திற்கான வாய்ப்பு அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

 தமிழர் திருமணங்கள் தமிழ் முறையில் தமிழில் நிகழ்த்தப்படவேண்டும் என வலியுறுத்திய தலைவர்களில் பேராசிரியரும் ஒருவர். பிராமணர் அல்லாதார்க்கான இயக்கங்களால் இக்கருத்து வலிமை பெற்றது. பேராசிரியர் ஆயிரக்கணக்கில் தமிழ் முறைப்படித் திருமணங்களை நிகழ்த்தி உள்ளார். அத்திருமண நிகழ்வுகளிலும் தம் நூல்களிலும் தமிழ்த் திருமணங்கள் பற்றிய கருத்தை வலியுறுத்தி உள்ளார். தமிழர் திருமண நெறி இன்ப நெறி எனவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்துச் சான்றுடன் திருமணங்கள் நிகழ்த்தப்பட்டன என்றும்  உணர்த்தி உள்ளார்.

 பேராசிரியர் இலக்குவனார் பிறர் உரைக்காத புதிய கருத்துகளைத் தம் நூல்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள் வாயிலாக விளக்கி உள்ளார். உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன; அரிசுட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன; தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர்  வேறு-பிராமணர் வேறு; உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு; நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்; நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துள்ளார்; மெப்பாட்டியல் ஆராச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை; தொல்காப்பிய மரபியல் 71 முதல் 85 முடிய உள்ள பதினைந்து நூற்பாக்களும் இடையில் நுழைக்கப்பட்டனவே; மரபியலில் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்களும் ஆசிரியருடையனவல்ல; மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும்; உலக ஆராச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர்; அறநெறியைக் கூறாதன  இலக்கியம் ஆகா; இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்; மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை; இலக்கிய இலக்கணம் (Science of Literature) தமிழில்தான் உண்டு; இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்; உலக மொழிகளுக்கும் தாய் தமிழ்தான்; திராவிடம் என்ற சோல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது; தொல்காப்பியம் கி.மு.1000 ஆண்டுப் பேரெல்லையை உடையது; தொல்காப்பியத்திற்கு முன்னரே எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் இருந்துள்ளன; மொழியை இழந்தால் நாட்டையும் இனத்தையும் இழந்தவராவோம்; என்பன போன்ற பேராசிரியரின் நூற்றுக்கணக்கான முடிவுகள் தமிழுக்குத் தூய்மையும் வளமையும் சேர்த்தன.

 இந்தியத்துணைக்கண்டம் முழுமையும்பேசப்பட்ட தமிழ்மொழி இன்றைக்குச் சுருங்கிய அளவில் மாறிப்போனதன் காரணம் பிற மொழிச் சொற்களுக்கு இடம் கொடுத்துப் பேசுவதுபோல் எழுதுவதற்கு முதன்மை அளித்ததே. இவ்வரலாற்றை உணராமல், பேசும் மொழியே உயிர் மொழி எனக் கூறிக்கொண்டு தமிழை மேலும் சிதைப்போர் பெருகி வருகின்றனர். மொழியியல் படித்தவர்களும் ஆழமான எண்ணம் இன்றி இதற்குத் துணை போவதுதான் வருத்தத்திற்கு உரியது. பேராசிரியர் திருத்தமான தமிழ்நடையை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்