(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16)   தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(17)

4. உலகம் தழுவும் நோக்கு

  விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி ச் சிந்தனைகள் வளர்க்கும் கவிஞர், தென் வியத்துனாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்தை  எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன.

பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல்

பிழையென்றால் அப்பிழையைச்

சிறுநாடும் செய்யாமல் இருத்தல் ஒன்றே

செம்மையாம்

என அழுத்தமாகப் பதிவு செய்கிறார் கவிஞர்,

போரிடுதல் போல ஒரு கொடிய பாவம்

பூமி மிசைக் கண்டார் யார்?

யாரிதனை ஆதரித்தார்? எம்மதம் தான்

நாசத்தை வரவேற்ற துண்டு?

வேரினிலே வெந்நீரை ஊற்றலைப்போல்

விரி உலக மரத்தில் வெம்மை –

 நீரினை நீர் ஊற்றுகிறீர்! அந்நீர் செந்நீர்!

 நெறியுமிதா? நேர்மை காண்பீர்!

என்று இடித்துரைக்கிறார். சிலி பற்றியும் வங்கதேசம் பற்றியும் உணர்ச்சி துளும்பும் கவிதைகள் பாடியுள்ளார் பெருங்கோவிக்கோ.

  உலக நாடுகளை வியந்தும், அவர்கள் செயலைப் பாராட்டியும் பரிந்தும் பாடும் இயல்பு பெற்றுள்ள கவிஞர் எந்த நாடு அநீதி செய்யினும் வன்மையாய் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பத் தவறுவதில்லை. எவர் செய்தாலும் குற்றம் குற்றமே என்று சுட்டிக் காட்டித், தட்டிக் கேட்கும் நேர்மைத் துணிச்சல் கவிஞர் சேதுராமனின் உள்ளத்தில் உறைகிறது,

  கொரியாவின் பயணிகள் விமானம் ஒன்று வான வெளியில் எல்லைதவறி உருசியாவின் எல்லைக்குள் புகுந்து விட்டது என்று குற்றம் சாட்டி, சோவியத்து உருசியா அந்தக் கொரிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இது முறை அன்று! மனிதாபிமானம் அற்ற செயலே யாகும் என்று உணர்ந்த கவிஞர் அறச்சீற்றத் துடன் கவிதை படைத்துள்ளார்,

 தன்னுடைமை தன்னாடு தன்னின் வானம்

தமதெனவே எல்லைக்கோட்டைத் தான் போட்டு

மன்னுபெரும் பொதுவுடமை காத்தால்எந்த

வகையினிலே உலகு பொதுவுடைமை ஆகும்?”

என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

வைய மெல்லாம் பொது வுடைமை மலர வேண்டும் மக்கள்

வாழ்வாங்கே உலகிணைந்து வாழ வேண்டும்

 நையச்செய் கொடுமையெலாம் போகவேண்டும்

 நடுநிலையால் உலகநெறி உருசியாவைப்போல்

 வையகத்தின் அமுதாகக் கிடைக்க வேண்டும்

 கருத்துக்கே மதிப்பளிக்கும் முதல்வன் ஆயின்

ஐயகோ எனக் கதற உருசியாவும் தீ

அநீதி செய்யின் கண்டித்தல் கடமை அன்றோ?

 ஈழத் தமிழரின் போராட்டம் பற்றியும், இலங்கையில் சிங்களர் செய்த கொடுமைகள் குறித்தும் கவிஞர் கொதித்திருக்கிறார். இலங்கையில் நடந்த படுகொலைகள் மற்றும் வன்முறைச் செயல்களைக் கண்டும் அமெரிக்காவும் இதர நாடுகளும் அவற்றைக் கண்டிக்க முன்வராது வாளா இருந்ததைக் கண்டித்தும் குற்றம் சாட்டியும் அவர் உணர்ச்சியோடு பாடியிருக்கிறார். குறைகள் இல்லா உலகம் பற்றிக் கனவு வளர்க் கிறார் கவிஞர். அவர் விரும்பும் கனவுலகம் எப்படி இருக்கும்? ‘புத்துலகம்‘ என்ற பாடல் அதை அறிமுகம் செய்கிறது.

 சேர்த்துச் சேர்த்துப் பதுக்கி வாழும் தீயவ ரங்கில்லை

தேசம் கண்டம் மொழிகள் என்னும் சிறுமைப் பிரிவங்கில்லை

வேர்க்க வேர்க்க உழைப்போர் தவிர வேறு யாரும் இல்லை

வெற்றியுண்டு தோல்வி இல்லை வீணரென் பாரில்லை.

 அங்கே கயமை செய்வாரில்லை தனி உடைமை பேசிப் பொதுவுடமை மாய்ப்பாரில்லை. தண்டம் இல்லை, சலிப்பு இல்லை, குற்றமற்ற இளமை தான் உண்டு. பிணி முடிபுகள் இல்லை ஆணை யில்லை, ஏவலில்லை, அடிமை என்பதும் இல்லை.

இசையும் எழிலும் இணைந்து பேசும் ஈடில்லாத உலகம்

ஏற்றத் தாழ்வு இழிவு உயர்வு என்பதறியாப் புவனம்

வசையில்லாத உலகம்.

என்று புத்துலகக் கனவு காண்கிறார் கவிஞர், இப்படிப் பட்ட உலகம் இனிமையான உலகமாகத்தானே இருக்கும்!

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்