தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) தொடர்ச்சி]
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ)
தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம்.
“இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும் ’ என்று கூறிக் கொச்சை வழக்குகளை எழுதி மொழியைச் சிதைத்து வருகின்றனர். வழக்கு மொழி என்பது இலக்கணம் அற்றது அன்று. அதுவும் திருத்தமுடையதாகவே இருக்க வேண்டும் என்பது தொல்காப்பியர் கொள்கை. அன்றியும் பேசுவதுபோல் எழுத வேண்டுமா எழுதுவதுபோல் பேசவேண்டுமா என்ற ஆராய்ச்சியும் இன்று நிலவுகின்றது. பேச்சு வழக்கு வேறு எழுத்து வழக்கு வேறு என்றாலும் இரண்டும் இலக்கண நெறிக்குக் கட்டுப்பட்டன என்பதே தொல்காப்பியர் கூற்று. மொழியை உருவாக்குவதில் கற்றோர்க்கும் கல்லார்க்கும் பங்குண்டு. கற்றவர்கள் தொகை குறைவு. கல்லாதவர் தொகை மிகுதி. இது பெரும்பான்மையோர் காலம். ஆதலின் கல்லாரைப் பின்பற்றிக் கற்றார் மொழியை வளர்த்தல் வேண்டும் என்பர் சிலர். ஆனால், தொல்காப்பியர் கருத்தோ அற்றன்று. எல்லாத்துறைகளிலும் கற்றோர் வழியே மற்றையோர் செல்ல வேண்டும் என்பது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. நிகழ்ச்சி அவர்கட்டாகலான என்று கூறியுள்ளார். கற்றோர் கையாளும் நூன்மொழிதான், இனிமை, தூய்மை, வளமை, செம்மை, ஒண்மை, நுண்மை முதலிய பண்புகளைக் கொள்ள முடியும். செந்தமிழ் என்னும் பெயரே சான்று பகரும். எழுத்துமொழிதான் பேச்சு மொழியைத் திருத்திச் செம்மைப்படுத்தி இனிமையாக்கி வளமுறச் செய்து நிலைக்கச் செய்யும்.” (பேச்சுமொழியும் எழுத்து மொழியும் : குறள்நெறி 1.8.68)
ஊடகங்கள் வாயிலாகத் தமிழ்க் கொலை நடைபெற்று வரும் இக்காலக்கட்டத்திலாவது, நாம் விழித்தெழுந்து எழுத்து நடையைப்போற்றித் தமிழை வாழ வைக்க வேண்டும். கலப்பும் சிதைவும் அற்ற தமிழ்நடை குறித்துப் பேராசிரியர் இலக்குவனார் (கையெழுத்தில் அமைந்த) தம் வாழ்க்கைப் பாவியத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“தலைநகர் சென்னையில் தமிழின் வாழ்வு
கற்றோ ராலும் கல்லா ராலும்
சிதைவுற்றதுவே;செந்தமிழ் மொழியில்
அயல்சொல் கலந்தே அளவளாவுதல்
கற்றவர் என்பவர் நற்றொழிலாயது.
சொற்களைச் சிதைத்துச் சொல்லாடுதலைக்
கல்லார் இயல்பாய்க் கைக் கொண்டனரே
அன்றியும்
மறுமலர்ச்சிதனை வண்டமிழ்க் களித்திட
முனைவோர் போன்று முத்தமிழ் மொழியில்
வேற்றுமொழியின் வேண்டாச் சொற்களை
நூலறிவில்லார் நுவலும் கொச்சையைப்
புகுத்தி எழுதி புதுமை படைத்தனர்
இலக்கணம் எதற்கு எழுத்தாளர்க்கு
இலக்கணம் அறிந்தோர் எழுத்தாளராகார்
என்று செம்மாந்தெங்கும் இருந்தனர்.
மரபு நெறியில் வளர்வதே செம்மொழி
இன்றும் தமிழ்மொழி நின்று நிலவுதல்
தொல்காப்பிய நெறி தொடர்ந்து செல்வதே
ஆதலின் அந்நெறி அனைவரும் போற்ற
நற்றமிழ் மரபில் நன்னூல் பெருக்கிட
புலவர்கள் படையைப்பெருக்கிடச்செய்”க
என்பதே பேராசிரியர் இலக்குவனார் வேண்டுகோள். அழிவிலிருந்து தமிழன்னையை மீட்டெடுக்க நாம் ஒவ்வொருவரும் இலக்குவனார் கூறும் வழியில் தமிழ்நெறி காக்கும் படைஞராக மாற வேண்டும்! தமிழ் மொழியையும் தமிழினத்தையும் தமிழுலகையும் காக்க வேண்டும்!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply