( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) தொடர்ச்சி )

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)

   ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான  போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க  வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச்  செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்!  தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு எதிரான போர்!  சங்கத்தமிழின் மங்காச் சிறப்பை மறைப்போருக்கு எதிரான போர்! இதழ்களில் தமிழ் இலங்க @வண்டும் என்பதற்கான போர்! கலப்பு நடையைக் கலங்க வைப்பதற்கான போர்! தமிழ்ப்பயிற்றுமொழிச்  செயலாக்கத்திற்கான போர்! ஒல்காப் புகழ்த் தொல்காப்பிய இடைச்  செருகல்களுக்கு எதிரானபோர்! குறள்நெறிக் காப்பிற்கான போர்! தமிழர் இனநலங் காக்கப் போர்!  தேமதுரத் தமிழோசையை உலகெங்கும் பரவச் செய்வதற்கு எதிரான தடைகளை எதிர்த்துப் போர்! தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்ற நிலையை மாற்றுவதற்கான போர்! எனத் தம் வாழ்க்கையையே தமிழ்க் காப்புக்கான  போர்க்களமாக ஆக்கிக் கொண்டவர் தமிழ்க்காப்புத்தலைவர்  பேராசிரியர் சி.இலக்குவனார். தமிழ்த் @தசியம்பற்றியும் கூட்டாட்சிபற்றியும் தமிழாட்சி பற்றியும் இன்றைக்குப்  பேசுவனவற்றை அன்றைக்கே தமிழ்க்காப்புத்தலைவர்  பேராசிரியர் சி.இலக்குவனார் எண்ணிச்  செயல்பட்டதுதான் அவருக்குரிய பெருஞ்சிறப்பு.(பன்னாட்டுத் தமிழ் நடுவம் இரண்டாவது தமிழ் மாநாட்டு மலர் 2003:பக்கம் 130)

 நாம் பேராசிரியர்  போல்  போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ  வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியர் இலக்குவனாரின் பின் வரும் அறிவுரைகளை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக  வேண்டும்:

மொழியைக் காத்தவர் விழியைக் காத்தவர்!

மொழியைச் சிதைத்தவர் விழியைச் சிதைத்தவர்!

மொழிக்கும் விழிக்கும் வேற்றுமை இல்லை!

மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள்.

தமிழ் எங்கள் உயிருக்கு  நேர் என்று அறைகூவுங்கள்.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!

தமிழ் ஓங்குக! தமிழ் உயர்க!

என்று வாழ்த்துங்கள்

தமிழில் எழுதுக! தமிழில் பேசுக!

தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!

என்று முழங்குங்கள்.

மொழி வாழ்வுக்கு முயற்சி  செய்யுங்கள்.

உங்கள் முயற்சி வாழ்க!

தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!

தமிழர் வாழ்ந்தால்தமிழ்நாடு வாழும்!

தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு!

(தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37:

 செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் )

நாம் ஒவ்வொருவருமே  மொழி நலம், இன நலம் காக்கப் பின்வரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பாடலை அன்புக் கட்டளையாக ஏற்றுப் பின்பற்றுவோமாக!

இன்றமிழ் காமின்!

பொன்னும் பொருளும் புவியும் புகழும்

பன்னுறு  செல்வம் அனைத்தும் பாரில்

பெற்றுள தமிழர்  சற்றும் தமிழினை

எண்ணிப்  போற்றா திருப்பரேல் எல்லாம்

கொன்னே கழிய கூற்றுக் கொருநாள்

நல்லிரை யாகி நடுங்கி மறைவர்.

இன்தமிழ் எம்மொழி என்னும் நினைப்பால்

உள்ளம் மகிழார் உயிருடை யரேனும்

நடைப்பிணமாக நாளைக் கழிப்பரே.

ஆதலின்

நற்றமிழ் மாந்தரே நாடு வணங்கிட

தமிழ்ப் புகழ் பரப்புமின் தந்நலம் அகற்றுமின்

பிறரைக் கெடுக்கும் பேதைமை ஒழிமின்

வளவிய வான்பெருஞ்  செல்வமும் பதவியும்

நில்லா வென்பதை நினைவில் கொண்மின்

அஞ்சி வாழும் அவலம் போக்குமின்

கரந்த வாழ்வு கடவுள் முனின்றென

எல்லாம் அளித்தும் இன்தமிழ் காமின்!

  தமிழ்த்தாயைப் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இலக்குவனார் படத்தைக் காட்டலாம்.  இலக்குவனாரை மனத்தில் வைத்து வரைந்தால்தான் தமிழ்த்தாய்ப்படம் வரைய முடியும்.  இலக்குவனாரே தமிழ்! தமிழே இலக்குவனார்! என்கிறார் பேரா.கண.சிற்சபேசன்(ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற உரை,  நட்பு இணைய இதழ்). தமிழாய் வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாரின் எஞ்சிய கனவுகளை நனவாக்கவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வோம்.

இலக்குவனார் வழி நின்று இன்தமிழ் காப்போம்!

போராளி இலக்குவனாரைப் போற்றி வணங்குவோம்!

 

(நிறைவு)

– இலக்குவனார் திருவள்ளுவன்