(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தொடர்ச்சி)

 

தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) 

5. ஞாலப் போராளி

தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய  பேராசிரியரே  ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப்  போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம் 9:  செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)  பேராசிரியர்  இலக்குவனார் தம் பெயருக்கேற்ப‌ே வாழ்நாளெல்லாம் வாழ்ந்தார் என்றும் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்: “குறிக்கோளைப் பெயராகக் கொண்ட பெருமகனார், தம் வாழ்வாகவே அதனைக் கொண்டமைக்கு, அவர் புரிவு தெரிந்த நாள் முதல் பிரிவு நேர்ந்த நாள் முடிய உள்ள வரலாற்றின் எவ்வொரு பகுதியும் சான்றாக விளங்குதல் கண்கூடு.” (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)

 “வாழ்க்கைப் போர் இல்லாமை, இலக்குவனார் வாழ்வில் ஊடே ஊடே இருந்த காலமும் உண்டு. ஆனால்,மொழிப் போர் இல்லா நாள் அவர் வாழ்வில் இருந்ததே இல்லை!” என்று கூறும் முதுமுனைவர் இரா.இளங்குமரன், “மெய்யான மொழிப் போராளி ஒருவர் எப்படி இருப்பார் என்பதை வரைந்து காட்ட வேண்டும் என்றால்,அவர் இலக்குவனார் வரைவாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. அவரை அறிந்தார் அவரோடு பழகினார் எவரும் இதனை மெய்யாக அறிவர்.” என அறுதியிட்டு உரைக்கின்றார். (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்).

படிப்பது அறிவு வளர்ச்சிக்காக என்று சிலரும் பணியில் அமருவதற்காக எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், பேராசிரியர் இலக்குவனாரோ படிப்பின் பயன் உரிமைகாக்கும்  போராளியாகத் திகழ்வது என்று கூறியுள்ளார்.

“தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறுகடனாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இஃதேயாம்”

என்று பேராசிரியர் இலக்குவனார் தம் வாழ்க்கைப்  போர் நூலில் குறிப்பிடுகின்றார். எனவே,  பேராசிரியர் இலக்குவனாரிடம்  இயல்பாக இருந்த குறை களையும் பண்பும் தீங்கினை எதிர்க்கும் உணர்வும் புலவர் படிப்பால் அவரைப்  போராளியாக்கியது எனலாம்.

பேராசிரியர்  இலக்குவனார் எண்ணம், செயல் யாவும் தமிழர் நலன் சார்ந்ததே. எனவேதான், தாம் எழுதிய ‘கருமவீரர் காமராசர்’ நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறித்துள்ளார்:

“தமிழ் எமது உயிர்; தமிழன் உயர்வே தமிழ்நாட்டின் உயர்வு. தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் உயர்வு உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள்  போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். குலமும் குடியும் ஒன்றே, வழிபடும் கடவுளும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர். குறள் நெறியோங்கினால் குடியர சோங்கும். என்ற கொள்கைகளே எம் வாழ்வை இயக்குவன. யாம் ஒரு புலவர் எழுத்தாளர் ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ வெறுப்போ கொள்ளவேண்டிய நிலையில் இல்லோம், ஆனால், தமிழ்ப்பகைவர் எமது பகைவராவர். தமிழ் நண்பர் எமது நண்பராவர்.”

  பிற  போராளிகள் வாழ்வில் குறிப்பிட்ட களத்தில் நின்று மக்கள் நலம் காத்தார்கள். ஆனால்,  பேராசிரியர்  இலக்குவனார் சந்தித்த  போர்க்களங்கள் மிகுதி. இவரைப்போல் வேறு யாரும் இத்தனைப்  போர்க்களங்களைச்  சந்தித்ததில்லை எனத் தமிழாய்வாளர்கள் கூறுவது சரிதானே!

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்