தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர் – அ.இராகவன்
சிந்துத்தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர்.
ஆரியர்கள் தமிழ் இந்தியாவில் கி.மு.1000 ஆண்டிலிருந்து கி.மு.1500ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் அடிஎடுத்து வைத்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தபொழுது ஆடு மேய்க்கும் நாடோடி மக்களாக வந்தனர். அவர்களுக்கு உயர்ந்த வளர்ச்சிபெற்ற பண்பாடும், நெறியும், நாகரிகமும் இல்லை. மொழிகூட செம்மையான வளர்ச்சி பெற்றதாக இல்லை. அவர்கள் எழுத்து இன்னதென அறியார்கள். வரிவடிவம் என்பது ஒன்று உண்டென்று சிறிதும் உணரார்கள். அவர்கள் இந்தியாவில் வந்தபொழுது சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதாரோ போன்ற நனிச்சிறந்த நாகரிகச் சிறப்புவாய்ந்த நகரங்களும், அரண்களும், பண்பாடும், நெறியும், மொழியும், இசையும், நாகரிகமும் உயர்ந்து விளங்கின. இந்தியாவில் உள்ள சிந்து ஆற்றங்கரையில் சிறப்புற்றோங்கிய சீரிய தமிழ்ப் பண்பாட்டினின்றே ஆரியர்கள் தங்கள் பண்பாட்டைப் பாங்குற அமைத்தனர். அதை அமைத்துத் தங்கள் உளப்பாங்கிற்கேற்ப வளர்த்தனர். இதை இன்று வடஇந்தியாவில் வாழும் கலப்பற்ற ஆரியர்கள் என்று கூறிக்கொள்ளும் அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்(திராவிட) இசையினின்று ஆரியர்கள் நுண்ணிய பொருள்களைக் கவர்ந்து வடமொழிப் பெயர் அளித்து ஆரிய இசை என்றும் இருக்கு முறையில் இதற்குச் சான்று உண்டு என்றும் அஞ்சாது கூறிக்கொண்டனர்.
தமிழர்ஏழிசையினின்று பன்னீராயிரம் பண்கள் கண்டனர். ஆரியர்களோ தாங்கள் பன்னிரண்டு “இலட்சம்” இசைகளைக் கண்டுள்ளோம் என்று கூறிக்கொண்டனர். இதன் உண்மையை வடஇந்திய இசை அறிஞர், பிரச்சினானந்த அடிகள் “இந்திய இசையின் வரலாற்று முறையான வளர்ச்சி” என்ற நூலில், மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். அதில் ஆதியில் ஆரியர்கள் பிற இசையினின்று பல அரிய பொருள்களைக் கவர்ந்து ஆயிரக்கணக்கான பண்களை (இராகங்களை)க் கண்டதாகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். (The Historical Development of Indian Music Swami Prajanandana, 1960)
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன்:
இசையும் யாழும் : பக்கம் 37-38
Leave a Reply