Kanamasivayam01

  வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்?  வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில் ஒரு சிலருக்கு ஒரு சாதாரணத் தமிழ்ப் பண்டிதராகவே காட்சியளித்தார். இதற்குக் காரணம், தமிழ் மண் தொன்று தொட்டுச் செய்யும் தவறுகளில் ஒன்று.

  வள்ளல் கா.நமச்சிவாயர் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் வெள்ளி இரவு 10.30 மணிக்கு, வட ஆர்க்காடு மாவட்டத்திலே காவேரிப் பாக்கம் எனும் ஊரிற் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் இராமசாமி (முதலியார்); தாய் அகிலாண்டவல்லி அம்மை. தந்தை ஒரு திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்தாம். வள்ளல் அவர்கள் தம் தொடக்கக் கல்வியைத் தம் தந்தையாரிடமே பயின்றார். எளிய குடும்பத்தினராகிய இவர் வேலை தேடிச் சென்னைக்கு வந்து முதலில் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக அமர்ந்தார்.

  ஒரு நல்லாசிரியர் மகன் ஒரு சாதாரண ஆசிரியராக இல்லாமல் பேராசிரியராக திகழ வேண்டும் என்ற ஆவல். அத்துடன் அமையாது இயற்கையிலேயே தமிழ்க் கல்வியில் ஆர்வமும் நாட்டமும்  உடையவராய்ப் பல தமிழ் நூல்களை விரும்பிக் கற்றார். ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரை நாடி முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்க ஆவல் மிக்கவராய்த் தேடினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் புலமையில் சிறந்தவராயும் புகழ் வாய்ந்தவராயும் திகழ்ந்த சென்னைத் தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர் நிலைப் பள்ளியில் தமிழ்ப் புலமை நடாத்திய மயிலை மகா வித்துவான் திரு.சண்முகம் (பிள்ளை) அவர்களிடம் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்ப்பயின்று சிறந்த தமிழ்ப் புலவரானார். மகா வித்துவான் திரு.சண்முகம் (பிள்ளை) அவர்களைத் தம் தந்தை போன்றே நினைந்து பத்தி செலுத்தி வழி பட்டார். தந்தைக்கு ஒப்பாகிய திரு.சண்முகம் (பிள்ளை) அவர்கள் உலக வாழ்வினை நீத்தபின் அவர் தம் துணைவியை அவரது விருப்பப்படி தம் தாயைப் போலவே பேணி அன்பு செலுத்தி அவர் தம் இறுதி நாள் வரை  காத்து வந்தார்.

ஆசிரியப் பணி

  1891இல் சென்னை வந்து ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராய் அமர்ந்தார். பின்னர் 1895இல் ஓராண்டுக் காலம் சென்னை உயர் நீதிமன்ற அலுவலகத்தில் பணியாற்றினார். தமிழோடு இணைந்த உள்ளமுடைய இவர் அதனைவிட்டுத் தள்ளிச் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுக் காலமும், பின்னர் நார்த்விக் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும், அதன் பிறகு இப்பொழுது ‘நேசனல் பாங்கு இருக்கும் கட்டடத்தில் இருந்த சிங்க்லர்சு கல்லூரியிலும் தமிழ்ப் புலமை நடாத்தினார். 1902ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டு வரை, சென்னை வேப்பேரி எசு பி.சி.உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராய்ச் சிறக்கப் பணி புரிந்தார், அக்காலத்தில் பல எதிர்ப்புக்களுக்கிடையே பெண்களுக்கு எனத் தோற்றுவித்த ‘இராணி மேரிக் கல்லூரியில்’ தமிழ்ப்புலமை நடாத்தப் பாடம் சொல்லுவதில் பிறவியிலேயே திறம் படைத்த நமச்சிவாயர், திருமதி. டி. (இ)லாகே அவர்களுடன் அரும்பாடுபட்டார். இந்த அம்மையார்தாம் வள்ளல் நமச்சிவாயரின் அறிவு குண நலன் முதலியவற்றைப் பாராட்டி இவர் தம் மணி விழா மலரில் குறிப்பிட்டுள்ளார். திரு.நமச்சிவாயர் ஓய்வு பெறுமுன் சிலகாலம் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் இருந்தார்.

  பேராசிரியர் நமச்சிவாயர் அவர்களின் புலமை நலம் அறிந்த சென்னைப் பல்கலைக் கழகத்தினர் 1917ஆம் ஆண்டு, தமிழ்த் தேர்வுக் குழுவின் தலைமைத் தேர்வாளராய் இருக்கச் செய்தனர். 1920 முதல் 1934ஆம் ஆண்டு வரை அரசினர் தமிழ்க் கல்விக் குழுவின் தலைவராய் இருந்தார். இவர்களது அரிய முயற்சியினாலேயே ‘7 டி’ எனும் தனித் தமிழ் வித்துவான் தேர்வு நிலை உண்டாயிற்று. அன்று அந்த வித்தினை இட்டத்தின் பயனாகத்தான் இன்று பலர் புலவர் பெருமக்களாக விளங்குகின்றனர்; பலவித ஏற்றங்களும் சிறப்புகளும் பெற்றுள்ளனர். தமிழ் வித்துவான் பாட அமைப்புக் குழுவிலும் தேர்வாளர் குழுவிலும் இருந்து சிறந்த பணிகள் ஆற்றினார். அக்குழுக்களில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான ஆக்க நெறிகள் பல கண்டனர். தமிழ் நெறிக்கு மாறாக நடக்க ஒருபோதும் நினைக்க மாட்டார். தமிழ் ஆசிரியர்களின் வருவாய் அதிகமாக வேண்டும் என அயராது பாடுபட்டார்.

  தமிழக வரலாற்றிலே அவர் செய்த மற்றொரு சிறந்த செய்தி ‘திருவள்ளுவர் திருநாள்’ தோற்றுவித்தது. இத்தகைய சான்றோருக்கு – தமிழ்த் திருநாள் தோற்றுவித்த மாவீரருக்கு – ஒரு பேராசிரியருக்கு – ஒரு சிறந்த பதிப்பாசிரியருக்கு – நூலாசிரியருக்கு – பத்திரிகாசிரியருக்கு& இத்துணைக்கும் மேலாக ஒரு வள்ளல் பெருமகனாருக்குத் தமிழர்கள் சிலர் கூடிச் சிலை வைக்க நினைக்கின்றனர். அந்த நினைப்பு ஈடேற மக்கள் மனமுவந்து உதவ முன் வருவார்களாக.

 குறள்நெறி : பங்குனி 2, தி.பி.1995 / 15.03.64