தலைப்பு-தமிழ்ப்பொழிலில்கலைச்சொல்லாக்கம் :thalaippu_thamizhpozhil_puranachanthiran

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்

  மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த முடியாது.

  இந்த நிலையில்தான் தமிழ் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபட நேர்ந்தது. இத்தகைய விழிப்பு காலம் கடந்தே ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சென்ற நூற்றாண்டிலேயே அது ஏற்பட்டிருந்தால், மிக எளிதாக இந்த நூற்றாண்டில் புதிய கருத்துகளை நாம் உள்வாங்கிச் செரித்துக் கொண்டிருக்க முடியும்.

  இதற்குமுன் ஒரு சிறிய செய்தியைச் சொல்லவேண்டும். தமிழில் கலைச்சொற்கள் அவசியமா என்று பலர் கேட்கிறார்கள். முதலில் கல்லூரி அளவில் இல்லாவிட்டாலும் பள்ளி வகுப்புகள் வரையிலேனும் தமிழ் வழிக்கல்வி இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிலேனும் கலைச்சொற்களை உருவாக்கித்தான் தீரவேண்டும். அது நம் கடமை. அந்தந்த மக்கள் அவரவர் தாய்மொழியில் பயிலாவிட்டால் புரிந்துகொண்டு அறிவைப் பெருக்குதலோ புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தலோ இயலாது என்பதை உளவியலார் எத்தனையோ பேர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

  இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தமிழில் கலைச்சொற்கள் வேண்டும் என்ற விழிப்பு ஏற்பட்டது. அதற்கு இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கல்விப் பெருக்கம் ஒரு காரணமாக அமைந்தது. தமிழ்ப்பொழில் இதழும் இருபதாம் நு£ற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தோன்றியது. எனவே அதில் கலைச்சொல்லாக்கம் பற்றிய புதிய உணர்ச்சி வெளிப்பட்டதில் வியப்பில்லை.

  தமிழ்ப்பொழிலில் கலைச்சொல்லாக்க முறைகள்பற்றித் தனியே கட்டுரைகள் வரையப்படவில்லை. கலைச்சொல்லாக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்டுரைகள் உண்டு. கலைச்சொல்லாக்கப் பகுதிகளும் உண்டு. நேரடியாகக் கலைச் சொல்லாக்க முறை பற்றி எவரும் கருத்துகள் தெரிவிக்காவிட்டாலும், பொழிலாசிரியர்களின் முன்னுரைகள், அவர்கள் வெளியிட்ட கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றிலிருந்து அவர்கள் எவ்வித முறைகளைக் கையாளுவதை ஆதரித்தார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

அ.) சாமி. வேலாயுதம் பிள்ளை, ‘கலைச்சொற்கள்’ என்ற தலைப்பில் அறிவியல் தொடர்பான சொற்களை அவ்வப்போது வெளியிட்டார்.1 இவற்றில் கணிதம் முதலிடம் பெற்றது. அவர் கணித ஆசிரியராக இருந்தமை இதற்கு ஒரு காரணம் ஆகலாம். (இவரது கலைச்சொற்கள் வெளியான ஐம்பது பக்கங்களில் ஏறத்தாழ இருபத்தைந்து பக்கங்கள் கணிதத்திற்கே ஒதுக்கப்பட்டன.)

ஆ.) ‘ஆங்காங்கே’ என்ற தலைப்பில் கோ. தியாகராசன் என்பவர் ஒரு நீண்ட கலைச்சொற் பட்டியல் வெளியிட்டார்.2

இ.) பொழிலாசிரியர், ‘தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு கூறு’ என்ற தலைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டார்.3

  இவற்றில் சாமி. வேலாயுதம்பிள்ளையின் முயற்சி 1941-44 ஆண்டுகளிலும், கோ. தியாகராசனின் முயற்சி 1950-53 ஆண்டுகளிலும், பொழிலாசிரியரின் முயற்சி 1972-73 ஆண்டுகளிலும் நடைபெற்றது. முதல் முயற்சி அறிவியற் சொற்களை மட்டும் உருவாக்கியது. பின்னர் நிகழ்ந்த இரு முயற்சிகளும் பொதுப் பயன்பாட்டிற்கென – பல்துறை அறிவுக்கென – நிகழ்ந்தவை.

  கலைச்சொல்லாக்கம்பற்றிய கருத்துரைகள் தமிழ்ப்பொழில் இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டன. அவற்றுள் பின்வருவன அடங்கும்.

 1. ‘கலைச்சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் பொழிலாசிரியர் வரைந்த முன்னுரைக் கட்டுரை (ஆசிரியவுரை)-துணர் 16 பக். 116-17, 248-50, 278-79, 285-87, 353-57,
 2. சொல்லாக்கக் குழுபற்றிக் கல்விச் செயலர்க்கு வரைந்த கடிதங்கள் (ஆங்கிலத் திலும், தமிழிலும்)-துணர் 16 பக். 283-88
 3. ‘கலைச்சொல்லாக்கம்’ (கட்டுரை)-அ. இராமசாமி கவுண்டர், துணர் 19 பக்.169-72, 223-36
 4. ‘கலைச்சொல்லாக்கம்’-கோ. தியாகராசன், துணர் 23 பக்.231-36
 5. ‘கலைச்சொல்லாக்கம்’ (அறிக்கை)-வா. பொ. பழனிவேலன், துணர் 29 பக்.141-42
 6. ‘கலைச்சொற்களின் சீர்கேடு’ -ச. இராசகோபாலாச்சாரியார் (இராசாசி)-துணர் 22 பக்.238-43
 7. ‘தமிழில் கலைச்சொற்கள்’ -இராசா சர். அ. முத்தையா செட்டியார், துணர் 22 பக். 200, 217-19
 8. தமிழுக்கு வடசொல்லடியாகப் பிறந்த கலைச்சொற்களா?-தமிழ் அறிஞர் கழகம் வேண்டுகோள், துணர் 22 பக்.195-99

  இவை தவிர துணர் 22இல் மிகுதியான வேண்டுகோள்கள், அறிக்கைகள், உரைகள் முதலியன இடம் பெற்றன. இவற்றை நோக்கும்போது துணர் 16 முதல் 22 வரை (1938-48) இப்படிப்பட்ட செய்தி கள் இடம் பெற்றுள்ளமை தெரிகிறது. இதற்கான காரணத்தை நோக்கலாம்.

  அப்போதைய தமிழ்மாகாண முதலமைச்சராக இருந்த இராசாசி ஆதரவினால் 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்பட்டது.. இதன் முதல் மாநில மாநாடு 1934 சூன் 10, 11இல் சென்னையில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிக் கல்வியைத் தமிழ்வழி பயிற்ற ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பெற்றது. இத்தீர்மானத்தின்படி 1934 அக்டோபர் 14 அன்று இச்சங்கத்தின் சார்பில், சொல்லாக்கக் கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. இக்கழகத்தினரின் உழைப்பினால், ஒன்பது துறைகளில், பத்தாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு ஒன்று, கலைச்சொற்கள் என்ற தலைப்பிலேயே 1938இல் வெளியிடப் பெற்றது.

  இக்குழுவினர் உருவாக்கிய கலைச்சொற்கள், தமிழ் அடிப்படையில் சிறந்த முறையில், ஓர் எடுத்துக்காட்டு அளவில் அமைந்திருந்தன. எளிதில் புரியக்கூடியவையாகவும் இருந்தன. கூடியவரை நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே இவர்கள் அமைத்தனர். சாமி. வேலாயுதம் பிள்ளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்ட கலைச்சொற்கள், இதன் ஒருபகுதியே ஆகும். அவர் சொல்லாக்கக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது மனம்கொள்ளத்தக்கது.

  1940 சூன் 8ஆம் நாள் சீனிவாச சாத்திரியார் என்பவர் தலைமையில் ஒரு கலைச் சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டது.4 ஆட்சிச்சொற்களையும் கலைச்சொற்களையும் உருவாக்குவது இக்குழுவின் நோக்கம். ஆனால் இக்குழுவினரில் பலர் வடமொழிச் சார்பாளராக இருந்தனர்.5 இவர்கள் கலைச்சொல்லாக்கம் என்ற பெயரால் வடமொழியாக்கம் செய்தனர். சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

disinfectant – பூதிநாசினி

electrolysis – வித்யுத் வியோகம்

basic (chem) – க்ஷாரமான

triangle – திரிபுஜை

similar – ஸஜாதீய

  இம்மாதிரியான கலைச்சொற்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்களுக்கு எரிச்சல் ஊட்டியதில் வியப்பில்லை.6

  இக்குழுவினர் சிலரையும், பிற சிலரையும் சேர்த்து 1947இல் சென்னை அரசாங்கம் ஒரு கலைச்சொல்லாக்கக் குழு அமைத்தது. இக்குழு வெளியிட்ட கலைச் சொற்கள் சீனிவாச சாத்திரியார் குழு வெளியிட்டவற்றையும் விஞ்சுவனவாக அமைந்தன. இவை வேடிக்கையும் வேதனையும் ஒருங்கே தருவனவாக அமைந்திருந்தன என்று சொல்லத் தோன்றுகிறது. சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

hydrogen – அப்னகம்

protein  – ஓஜஸ் திரவியம்

spinal chord – கசேரு லதை

berry – பூர்ண புஷ்டம்

undetermined – அநிஷ்கர்ஷி

census – குலஸ்த்ரீ புருபால விருத்த ஆயவ்யய பரிமாணம்

rotate – சக்ராக்ருதி

evaporation – பரிசோணம்

carpel – கர்ப்ப பத்ரம்

  இக்குழுவின் மொழிபெயர்ப்புத் திறனைக் காட்டுவதற்கு மேற்கண்ட எடுத்துக் காட்டுகள் போதுமானவை எனக் கருதலாம். இராசாசி காலத்தில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களில் தமிழ் முப்பது விழுக்காடும், வட மொழிச் சொற்கள் பத்து விழுக்காடும், மணிப்பிரவாளச் சொற்கள் அறுபது விழுக்காடுமாக அமைந்த தொகுதி ஆயிற்று இது. எனவே இக்குழுவின் முயற்சிகள், தமிழறிஞர் குழுக்கள், மாவட்டப் புலவர் கழகங்கள், சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம், பிற தமிழ்ச்சங்கங்கள் அனைத்தின் எதிர்ப்புக்கும் உள்ளாயின. இந்த எதிர்ப்புகளைத் தமிழ்ப் பொழில் அவ்வப்போது வெளியிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கமும் இது குறித்துக் கூட்டங்கள் நடத்தின் தன் எதிர்ப்புகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டது.7 இதன் விளைவாக, சீனிவாச சாத்திரியார் குழுவின் கலைச்சொற்களைத் திருத்தியமைக்க இரா.பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, அ. முத்தையா ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.8 இதுதான் இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ்ப்பொழிலில் மிகுதியாகக் கலைச் சொற்கள் பற்றிய வேண்டுகோள்களும் கட்டுரைகளும் வெளிவந்த காரணம். (இதற்கு விதிவிலக்கு, துணர் 45இல் வெளியான கலைச்சொல்லாக்கம் என்ற கட்டுரை).

  கலைச்சொல்லாக்கத்தைக் குறித்துப் பொழிலாசிரியர் கருத்து பின்வருமாறு: “அறிவியல்துறையில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்ற பொருள்களுக்கு வேறு வழியின்றித் தொடக்கத்தில் வேற்றுமொழிச் சொற்களைக் கடன்வாங்கினாலும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதே தக்கது. இன்றியமையாத பிறமொழிச் சொற்களைத் தேவைப்படும் காலத்திற்குப் பயன்படுத்தலாம்….(அவற்றையும்) கூடியவரையில் தமிழ்மொழியில் தன் வயப்படுத்திய சொற்களாகவே அமைத்துக் கொள்ளவேண்டும்.”9 சுருக்கமாகச் சொன்னால், மொழிபெயர்ப்பையும் சொற்பெயர்ப்பையும் தேவைக் கேற்றவாறு பயன்படுத்தலாம் என்பது தமிழ்ப்பொழிலின் கருத்து. ஆனால் சொற் பெயர்ப்பு, தமிழ் ஒலியமைதிக் கேற்றவாறு அமைதல் வேண்டும். தக்க சொல் கிடைத்தவுடன் அதை நீக்கிவிடவேண்டும் என்பதும் இந்த இதழின் கருத்து எனக்கூறலாம்.

அடிக்குறிப்பு:

 1. துணர் 15 பக். 361-64, 404-09, துணர் 16 பக். 102-03, 259-63, 323-26, 358, 376-81, துணர் 17 பக். 139-42, 211-16, 358-61, துணர் 18 பக். 29-32, 121-24, 241-43.
 2. துணர் 25 பக் 189-93, துணர் 26 பக்.41-46, 209-14, 289-94, 393-97 துணர் 27 பக். 41-46, 97-102, 204-08, 281-86, 337-40, 383-88, துணர் 28 பக். 19-24, 57-60, 61-6497-100, 151-56, 179-83, 207-08, துணர் 29 பக். 120-24.
 3. துணர் 45 பக். 3, 4, 67, 68, 99, 100, 130-32, 164, 19, 230, 261, 262, 293, 294, 324-26, 358, 387, 388.
 4. சீனிவாச சாத்திரியார் குழுவில் தமிழறிஞர் ஒருவருமே இல்லை எனச் சென்னைத் தமிழறிஞர் கழகம் கருத்துரை வெளியிட்டது. அது உண்மைதான். இக்குழுவில் இருந்தோர் பின்வருமாறு:

வி.எசு. சீனிவாச சாத்திரியார், தலைவர்

கே. சுவாமிநாதய்யர், ஆங்கிலப் பேராசிரியர், சென்னை

டாக்டர் சி. ஆர். ரெட்டி

ஆர். எம். ஃச்டாத்தம்

எச். சி. ஃச்டோக்கு

ஏ. தேனியல், குண்டூர்

டி. சூரியநாராயணா

வித்வ சி. டி. சோமயாசி

டி. சி. சீநிவாசய்யங்கார் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)

என். வெங்கட்ராமய்யர், கள்ளிக்கோட்டை

வி. இராசகோபாலய்யர், கொள்ளேகால்

டி. ராம பிஃசோரி, மங்களூர்

சி. கே. கௌசல்யா, இராணி மேரிக் கல்லூரி

அனந்த பத்மநாப ராவ், பிச்சாண்டார் கோவில்

மொகமது அப்துல் ஃஅக்கு

 

  தமிழ்க் கலைச் சொல்லாக்கக் குழுவிற்கு ஒரே ஒரு தமிழறிஞர்கூடக் கிடைக்காமல் போயினார் போலும்!

 1. சீனிவாச சாத்திரியார் குழுவைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சரியாக எடையிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், நீ. கந்தசாமிப் பிள்ளை சென்னைக் கல்வித் துறைச் செயலருக்கு ஒரு கடிதம் விடுத்தார். அதில் அவர் கூறியிருந்த சில செய்திகள்:

“8-6-40இல் கலைச்சொல்லாக்கத்திற்கு அமைக்கப்பெற்ற சாத்திரியார் குழு ஒரே போக்குடையது, மிகச் சிறியது, சிறிதும் திறமையற்றது. இச்சாத்திரியார் குழுவிற்குத் தரப்பட்ட ஆய்வுக்கூற்றுகள் குறுகியவை, ஈரெட்டானவை, பிழையுடையவை. இக்குழுவின் தாங்குரைகள், ஒருபோக்குடையன, முரண்பாடுடையன, இயன்முறை யற்றன. தகுதியற்றன, குறுகியநோக்கமுடையன, செயல்முறைக் கொவ்வாதன, வீணான வை, பிடிவாதமுடையன.”

 1. இது பற்றிச் சென்னைத் தமிழறிஞர் கழக அறிக்கையைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 220-22இல் காண்க.
 2. கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டங்கள், அவற்றில் சங்கத்தின் தலைவர் ஆ. யா. அருளானந்தசாமி நாடார் ஆற்றிய உரைகள், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோள், தமிழறிஞர் கழகத் தின் வேண்டுகோள் ஆகியவற்றின் விவரங்களைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 225-28, 229-31, 236-37, 209-12, 167-68, 220-22 ஆகிய பக்கங்களில் காணலாம்.
 3. தமிழ்ப்பொழில் துணர் ப. 230. 9. பொழிலாசிரியர், தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு கூறு, தமிழ்ப்பொழில், துணர் 45, ப.4.

குறிப்பு: தமிழ்ப் பொழில் 1925 முதல் வெளிவந்த இதழ். நான் அதில் முதல் ஐம்பதாண்டு இதழ்களை என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.

க.பூரணச்சந்திரன்