தலைப்பு-எப்படித்தான்தமிழ்வாழும்-திரு :thalaippu_eppadirthaanthamizh_vaazhum_thiru

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்?

  எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து  கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை.

  நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால்  தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம் தமிழை எதிர்பார்ப்பது தவறுதான். என் செய்வது? இவர்களே தமிழைப் பயன்படுத்தாவிட்டால் வேறு யார்தான் பயன்படுத்துவர்?

  தனித்தமிழ் வளர்ச்சிக்கென அமைப்பு நடத்துவோரில் விரல் விட்டு எண்ணப்படுவோர் அழைப்பிதழ்களில் நல்ல தமிழைக் காண முடிகின்றது. அவர்களால் தத்தம் பகுதிகளில் மட்டும்தானே  விழிப்புணர்வை உண்டாக்க முடிகின்றது. இத்தகைய தமிழ்ப்பணி நாடு முழுவதும் பரவலாக இருந்தால்தானே தமிழுணர்வு நாடுமுழுவதும் இருக்கும். தனித்தமிழ் பரப்புவதாகக் கூறி அமைப்பு நடத்துவோர் அழைப்பிதழ்களிலும்  அமைப்பிற்கு உதவுபவர்கள் பெயர்கள் என்று கூறிக் கிரந்த எழுத்துகளுடனும் ஆங்கில முதல் எழுத்துகளுடனும் பெயர்கள் இடம் பெறுகின்றன.

  வரும் ஞாயிறு(ஆனி 26, 2047 / சூலை 10, 2016) குமரி மாவட்டத்தில் காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியர் சிலை  திறந்து வைக்கப்படுகிறது. மகிழ்ச்சியான செய்தி என்று அழைப்பிதழைப் பார்த்தால் மகிழ்ச்சி ஓடி விட்டது.

  தமிழ்க்காப்பிற்காக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பெற்ற மூவாத்தமிழுக்கான இலக்கண நூல் அல்லவா தொல்காப்பியம்! அத்தகு சிறப்பு மிக்க ஒல்காப்புகழ்த் தொல்காப்பியத்தை இயற்றிய ஆசான் தொல்காப்பியர் படிமத்திற்கான அழைப்பிதழ் தமிழில்தானே இருக்க வேண்டும். ஆனால், கிரந்தக்கலப்புடன் அழைப்பிதழ் உள்ளது.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!

எனத் தொல்காப்பியம்  வழியாகத் தொல்காப்பியர் தமிழைக்காக்கும் வழியைக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கான விழாவிலாவது அவர்தந்த  நெறியுரையைப் பின்பற்ற வேண்டுமல்லவா?

  தமிழ்காக்க நல்லிலணக்க நூல் தந்த தொல்காப்பியர்  படிமத்தை நிறுவுவதற்கான தொடக்கவிழாவில் ஆரியப்  பூசை செய்தமையால், ஆரியஒலிகளைக் கலப்பது  குறித்து மனம் கவலைப்படவில்லை போலும்!  அல்லது எதற்கெடுத்தாலும்  தவற்றினை மறக்காமல் அப்புறம்  சரிசெய்து கொள்ளலாம் என்னும் ஆயத்த விடை இருப்பதால் வருந்த வில்லை போலும்!

  தமிழ்ப்பணிகள் ஆற்றி் வரும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளே இவ்வாறு செய்தால் வேறுயார்தான் தமிழைத் தமிழாகவே  பயன்படுத்துவர்?

  தமிழ் ஆண்டைக் குறிப்பிடுதல், பிற சொற்கள் கலப்பின்றிப் பயன்படுத்தல், முதலெழுத்துகளையும் பட்டங்களையும் தமிழில் குறிப்பிடல்,  அயலெழுத்துகள் நீக்கித் தமிழிலேயே எழுதுதல் ஆகிய உறுதிப்பாடுகைள மேற்கொள்ளாதவர் யாரும் தமிழ் அமைப்புகள் நடத்த வேண்டா! இவர்கள் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என யார் அழுதார்கள்?   தமிழ்க்கொலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தாவிட்டால் தமிழன்னை மகிழ்வாள் அல்லவா?

 தமிழில் பட்டங்கள்  வாங்கி ஊதியம் பெற்று அரசு அல்லது துறை சார்பிலான விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் தமிழ்க்கொலை புரிகின்றனரே! அவர்களை என் செய்வது? அவர்கள் நரகத்தில்  வீழட்டும் என்று சொல்வதைத் தவிர வேறு சொல்ல முடியவில்லை.

  தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்புலவர்கள் அல்லது தமிழறிஞர்கள் பெயர்களிலான தமிழ் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/பள்ளிகளில் உள்ள தமிழ்த்துறையினர், அரசின் தமிழ் நிறுவனங்கள் தூய தமிழைப் பேணுவதைபும் பரப்புவதையுமே தத்தம் கடமையாகக்கொள்ள வேண்டும்.  பொழுதுபோக்கிற்காகவோ விளம்பரத்திற்காகவோ நன்கொடை திரட்டுவதற்காகவோ வேண்டுமெனில் வேறு அமைப்புகளை நடத்திக் கொள்ளட்டும்!

  தமிழ்காக்கும் பொறுப்பு  நம் கைகளில் உள்ளது என்ற பொறுப்புணர்வுடன் இனியேனும் தமிழமைப்புகள் தமிழையே பயன்படுத்துவார்களாக!

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.  (திருவள்ளுவர், திருக்குறள் 655)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 141, ஆனி 19, 2047 / சூலை 03, 2016