fort_st.george01_thalaimaicheyalakam01

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்

“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”

என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்

வாசிக்கப் பெற்ற கட்டுரை.]

ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-

            வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது. எனவேதான் குறுகிய எல்லையான தமிழ்நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் செய்திகளில் மட்டும் ‘ஆகாசவாணி’ இடம்பெறவில்லை. மாறாகத் தமிழ் அல்ல – ஆங்கிலம்தான் இங்கு இடம்பெறுகிறது. ஏனெனில் நம்நோக்கம் எதையாவது எதிர்ப்பதே தவிரத் தமிழைக் காப்பதல்ல என நடுவனரசிற்குத் தெரியும். என்வேதான் இன்றுவரை உலகெங்கும் ஒலிபரப்பாகும் புதுதில்லி வானொலித் தமிழ்ச் செய்தியில் – தமிழகமெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பாகும் தில்லிச் செய்தியில் – ஆகாசவாணிதான் இடம் பெறுகிறது.

           தில்லியில் யார் ஆட்சி செய்தாலும் இந்தியின் ஆட்சி என்பது மாறாது. தமிழ் நாட்டிலே ஆள்வோருக்கேற்ப மொழி உணர்வுகள் வெளிப்படுகின்றன. இல்லையென்றால் நெருக்கடிக் காலத்தில் ‘தமிழரசு’ இதழில் ‘திரு’ எனக் குறிப்பிடுவதை நிறுத்தி ‘ஸ்ரீ’ என்று குறித்திருப்பார்களா? கட்டாயப்பாடுத்தியதால் இவ்வாறு குறிப்பிட்டோம் என உரியவர்கள் கூறினார்கள் எனில் கட்டாயப்படுத்தியாவதும் தம்ழி மண்ணில் வாழ்பவன் தானே.

            நம்மைப் பொருத்தவர் ‘தினவெடுத்த தோள்களுக்கு’ வேலை கொடுத்தாயிற்று. அதுபோதும், தொடர்ச்சியான செயற்பாடு நமக்கெதற்கு? ‘ஆகாசவாணி’ என்று இன்றும் கூறப்படுவதை யார் பொருட்படுத்தப்போகிறார்கள். ஆகாசவாணியை அகற்றியதாக வீறு கொண்டு வீரம் பேசுகையில் அவை அடங்கிவிடவா?.

தலைமைச் செயலகம்:-

            தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில் சட்டம், நிதி, சட்டமன்றத் துறைகள் நீங்களாகப் பிறவற்றில் 01.05.1966 முதல் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்க-முதல்நிலை நிறைவேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. 01.04.1970 முதல் நிதி, சட்டத்துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்க முதல் நிலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. 31.10.1986 முதல் தலைமைச் செயலகத் துறைகள் அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், கூட்டுறவு இணையங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களிலும் உடனடி நடைமுறைக்கு முழுமையாக நிறைவேற்றிக் கொண்டுவரப்படுவதாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

            ஆட்சி மொழிச் சட்டம் வந்ததற்கும் செயலகத்தில் நிறைவேற்றுவதற்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்க வேண்டாம் இவ்விடைவெளிக்குப் பின்னராவது நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படுகின்ற விடுமுறைப் பட்டியல் கூடத் தமிழில் வருவதில்லை: ஆண்டிற்கு இருமுறை பிறப்பிக்கப்படும், அகவிலைப்படி உயர்வு ஆணைகள், காலமுறையில் பிறப்பிக்கப்படுகின்ற ஊதிய ஆணைக்குழு அறிக்கைகள் என வாலாயமாக ஒரே வகையில் அமையக்கூடியவை கூடத் தமிழில் வருவதில்லை. அரசாணை நிலை எண் 182 தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை நாள் 27.06.1989 இன் படி ஆங்கிலத்தில் வெளியிடும் நேர்வுகளில் இனித் தமிழிலும் ஆணைகள் வெளியிட வேண்டும் என ஆணை பிறப்பித்தும் தமிழில் வருவதில்லை. அரசாணைகளைப் பிறப்பிப்போரே அவற்றை மீறும்பொழுது யாரை நொந்து என்ன பயன்?. ஆட்சி மொழிச் செயலாக்கம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளதாக எண்ணி ஏமாறுவோரைக் கண்டுதான் வருத்தப்படவேண்டியுள்ளது. இத்தகைய கற்பனை மயக்கத்தில் நாம் வாழும்போது தமிழ் எங்கே ஆளும்?.

            மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதைப் பிற மாநிலத்தவர் அனைவரும் தம் மொழிக்கிக் கிடைத்த உரிமை நாளாக மகிழ்ந்து இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இந்நிலை இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு இன்னுமும், ‘ஆர்யத்தாக்கமுடைய திராவிட நாடாக’ உள்ளது தான். சென்னைப் பெருநிலம் சென்னை மாநிலமாகச் சுருங்கிய பொழுது தமிழ் வழங்கும் பகுதிகளை நாம் இழந்தோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறைந்தது அன்றைக்கு அயல் மாநில இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்களை அவரவர் மாநிலத்திற்குத் திருப்பி அனுப்பி நம் மாநிலத்தவரைப் பிற மாநிலத்திலிருந்து வரவழைத்திருந்தோம் என்றால் தமிழ்நாட்டிலும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கும். பரம்பரை பரம்பரையாக அயல் மொழி உயர் அலுவலர்கள் வல்லாண்மை செலுத்தும் நிலையும் ஏற்பட்டிருக்காது. ஒரு சிலரை விதிவிலக்காகக் கொண்டு பார்த்தால் தலைமைச் செயலகத்தில் இதுவரை தமிழ் இடம் பெறத் தடையாக இருந்து, இதன் மூலம் தமிழகமெங்கும் தடைக்கற்களாக விளங்கியவர்கள், விளங்குபவர்கள், தாய்மொழிப் பற்றையும் மறந்து, வாழ்வளிக்கும் தமிழையும் துறந்து ஆங்கில மக்களாகத் திகழும் இத்தகைய அலுவலர்களே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சொல்லாமல் புரியும்

            இன்னும் கடந்த காலத்தைப் பற்றியே கூறுவானேன்! நிகழ்காலத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா? கடந்த கால அவலம் நாம் அறிந்த ஒன்றுதான். என்றாலும் ஏட்டுச்சுரக்காயைக் கொண்டே வெற்றி விருந்து அளித்ததாய் நம்ப வைக்கும் போக்கைப் புரிந்து கொண்டால்தான் நிகழ்கால ஏமாற்றங்களும் தொடர்கதையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும். ஏறத்தாழ 40 ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆணைகளில் ஒரு சிலவற்றைப்பற்றித்தான் நாம் பார்த்துள்ளோம். இவை போன்றுதாம் பிறவற்றின் நிலையும் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும்.

தமிழைத் துரத்தும் தமிழ்வளர்ச்சித் துறை

            “ஆனால் இவற்றிற்கெல்லாம் தக்க நடவடிக்கைகளைத் தொடராத்து தமிழ் வளர்ச்சித்துறைதானே! தமிழறிவும் தமிழுணர்வும் மண்டிக் கிடக்கும் துறைதானே இத்துறை. எனவேதானே தமிழ்வளர்ச்சித்துறைக்குத் தமிழறிவு தேவையில்லை என்று வழக்காடிக்கொண்டு இருக்கிறார்கள். சம்பளம் வாங்கும் வேலைக்காக மட்டும் ஊதியும் பெறுவோர் நிறந்த துறையிது. இத்துறைக்கு வந்த பின்பும் தமிழறிவையும் தமிழுணர்வையும் வளர்த்துக்கொள்ளாதோர் உள்ளனரே! இத்துறையைக் கலைத்துவிட்டு அனைத்துத்துறைகளில் இருந்தும் தமிழறிவும் துறையறிவும் உடையவர்களைப் பொறுக்கியெடுத்துத் தமிழில் உயர்பட்டங்களைப்பெற்று வெலைநாடுவோருக்கும் வாய்ப்பளித்துத் ‘தமிழ் மேம்பாட்டு ஆணையம்’ என்ற புதிய துறையை உருவாக்கினால், தமிழ் ஆட்சிமொழித் திட்டம் நிறைவேறாதா? ”எனச் சிலர் கேட்பதும் புரிகிறது. தமிழ்வளர்ச்சித்துறைக்குப் புதிய குருதி பாய்ச்ச வேண்டும் என்பதும் செயலகத்தமிழ் வளர்ச்சித்துறையிலும் தமிழ்பட்டம் பெற்றோரையே அமர்த்த வேண்டும் என்பதும் கட்டாயத்தேவைதான். இதனால் துறைதோறும் இடர்நீக்க வழிகாட்ட இயலும். எடுத்துக்காட்டாகப் பொதுப்பணித்துறை உடன்படிக்கைகள், பொருட்பெயர்கள் ஆகியவை தமிழ்ப் படுத்தப்பட்டால், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் முதலிய அனைத்திலும் தமிழ்ப்பயன்பாடு மிகுதியாகும். இவ்வாறு துறைதோறும் புதிய கலைச் சொற்கள் பெருகவும், ஆட்சி மொழிச் செயலாக்கம் விரைவு பெறவும் வாய்ப்பு நலன்கள் ஏற்பட்டு எழுச்சி உண்டாகும். என்றாலும் நாம் எதை ஆட்சி மொழிச் செயலாக்கம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதுதான் நிறைவேறுமே தவிர, உண்மையில் புறச் சிக்கல்கள் களையப்படும்வரை ‘ தமிழ்நாட்டில் தமிழ்’ என்பது கானல் நீரே!. முதலில் தெரிவித்தவாறு கல்விமொழி, இறைமொழி, பணிமொழி, வணிகமொழி என எல்லா நிலையிலும் தமிழ் இருந்தால்தான் ஆட்சி மொழிச்செயலாக்கம் தானாகவே நிறைவேறும். இதற்கான வாய்ப்புக் கண்ணுக்கு எட்டும் தொலைவில் தென்படவில்லை. இதனை வேறு கோணத்தில் பார்ப்போம்.

(இனியும் காண்போம்)

–  இலக்குவனார் திருவள்ளுவன்

kanavukal-aatchimozhi