தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2
இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். தமிழ் மணங் கமழும் திருநாட்டில் அமைந்து மலையும் ஆறும் தமிழ்க் கவிகள் மனத்தில் தமிழ்மயமாகவே விளங்கித் தோன்றுகின்றன. ‘என்றுமுள தென்தமிழை இயம்பி இசைகொண்ட’ திருமுனிவன் வாழும் பொதியமலை தமிழ் மலையாகவே திகழ்கின்றது. வட திசையினின்றும் இலங்கையை நாடிச் சென்ற வானர வீரரை நோக்கி, “தென் தமிழ் நாட்டில் அமைந்த அகன்ற பொதியமலையில் அகத்திய முனிவன் அமர்ந்திருக்கின்றான். அம் முனிவன் அமிழ்தினு மினிய தமிழ்மொழியை ஆதரித்து வளர்க்குமிடம் அதுவாதலின், வானரங்காள்! அம் மலையை வணங்கி அப்பாற் செல்க” என்று கம்பர் கூறும் மொழிகளில் தமிழ் அன்பு கலந்து இலங்குகின்றது. இன்னும், அப் பொதிய மலையிற் பிறந்து, திருநெல்வேலி வழியாய்ச் சென்று, அந் நாட்டை ஊட்டி வளர்க்கும் பொருநை என்னும் தமிழ் ஆற்றை, “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி” என்று கம்பர் போற்றிப் புகழ்ந்தார்.
இத் தகைய தலையாய அன்பு, பிற்காலத்துப் புலவரிடமும் பொருந்தித் திகழக் காணாலாம். செந்தமிழின் சுவை தேர்ந்து செஞ்சொற்கவி செய்த பாரதியார், தமிழ் மொழி வழங்கும் திருநாட்டைப் போற்றிப் புகழும் மொழிகள், புதியதோர் ஊக்கம் அளிப்பனவாம்.
“செந்மிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்று கவிஞர் அழகாக எடுத்துரைத்தார். செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத் தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ?
(தொடரும்)
– சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)
Leave a Reply