தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!

  சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துகளைச் சிதைக்கும் முயற்சிகளில் காலந்தோறும் யாரேனும்  ஈடுபட்டுவருகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் தலைமை நயனாளர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிமாண்பமை இந்திரா(பானர்சி) அம்மையார் மாண்பமை நீதிபதி செ.நிசாபானு அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 தமிழ்க்காப்புப் பணிகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு அருமையான தீர்ப்பு வழங்கியுள்ள அம்மையார் இருவரையும் தமிழுலகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். பிற நயனாளர்களும் இதுபோல் உணர்வுடன் செயல்பட்டுத் தீர்ப்பு வழங்கவும் வேண்டுகிறோம்.

 மதுரையில் எழுத்துச் சிதைவாளர் ஒருவர்  பொதுநல மனு என்ற பெயரில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் எழுத்துச் சிதைவிற்கான உயர்நிலைக்குழு அமைக்கக் கருதிப்பார்க்க அரசிற்கு ஆணையிடுமாறு வழக்கு தொடுத்திருந்தார்.

“தமிழ் உலகமொழி யாதலின் தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் அல்லது சிலரின் முடிவிற்கிணங்கத் தமிழ்தொடர்பான நிலைப்பாட்டை வரையறுக்கக்கூடாது. இதனை எப்பொழுதும் நினைவில்கொண்டு உலகளாவிய  கருத்துகளையே பெற வேண்டும்.”  என்னும் நம் கருத்தை அரசு ஏற்றுக்கொண்டதுபோல் நயனாளர்களும் – நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வழக்கில் மாண்பமை நீதியாளர்கள் இருவரும்,

“தமிழ்,  பாரம்பரியமிக்க பழமையான மொழி. வெளிநாடுகளில், குறிப்பாகச் சிங்கப்பூரில், தேசிய மொழியாக உள்ள, ஒரே இந்திய மொழி தமிழ். அத்தகைய மொழியில் மாற்றம் கொண்டு வர, உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில், மனுதாரர், தேவையின்றி மனு செய்துள்ளார். அவருக்குத் தண்டம்(அபராதம்) விதிக்கலாம். ஆனால் விதிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்கு எதையும் தொடுக்கக் கூடாது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். (தினமலர்)

 “உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்?” எனத் தமிழ்ப்போராளி இலக்குவனார் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கிணங்க, தமிழ் மொழிக்கான உடலாம் தமிழெழுத்தைக் காத்த மாண்பமை நயனாளர்களுக்கு – நீதிபதிகளுக்கு நம் வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகுக!

  மேலும், நீதிபதிகள் வழக்குகளை விரைவாக  உசாவித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தி வருகிறார் .

”நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை நீண்ட நாள் நிலுவையில் வைக்காமல், உடனுக்குடன் அவற்றை உசாவி  நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்; ’தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ எனக் கூறுவதுபோல், அவசர கதியில் வழங்கப்படும் நீதி புதைக்கப்பட்ட நீதியாகும். அதனால், தீர விசாரித்து சரியான நீதி வழங்க வேண்டும்;”  எனவும் கடலூரில் மாவட்டக்  குற்றவியல் நீதிமன்றக் கட்டட திறப்பு விழாவின் பொழுது அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றம் தெரிவித்தவாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் மார்ச்சு 2018 இற்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 காலத்தாழ்ச்சிகளால் நீதிமன்றங்களே நீதியைப் புதைகுழிக்குள் தள்ளும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி இடும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் மாண்பமை தலைமை  நீதிபதி அவர்களைப் பாராட்டுகிறோம். இது குறித்துப் பின்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரசுப்பணியாளர் வழக்குகள் நீதிமன்றங்களில் தூங்கிக் கொண்டுள்ளன. ஓய்விற்குப் பின்பும் பணி வரன்முறை செய்யப் பெறாதவர்கள், ஓய்வுஊதியம் பெறாதவர்கள், உரிய ஓய்வுப்பயனை அடையாதவர்கள் எனப் பலர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டிக் கொண்டு அவை திறக்கப்படாமையால் அல்லலுறுகின்றனர்.  அனைத்து அரசுப்பணியாளர் தொடர்பான வழக்குகளையும் மக்கள்நீதிமன்றம் போல்  வாரம் ஒரு முறை உயர்நீதிமன்றங்ள் உசாவித் தீர்க்கச்செய்ய வேண்டும்.

  குற்ற வழக்குகள், உரிமைவழக்குகள், மேல் முறையீட்டு வழக்குகள், இட்டீடுகள்(disputes),  நிறுவன வழக்குகள், பல்வகை வழக்குகள், பேராணை வழக்குகள்  என்பன போன்று  உள்ள அனைத்து வழக்குகளையும் ஒவ்வொரு நாளில் குறிப்பிட்ட வகை வழக்குகள் என வகைப்படுத்தி, அவற்றையும் விரைவில் முடிக்க வேண்டும்.

 திங்கள் முதல் வியாழன் முடிய வழக்கமான கேட்புகளை (hearings)  எடுத்துக் கொள்ள வேண்டும்; அவசர வழக்குகளை வழக்கம்போல் எந்நாளிலும் உசாவலாம்; 6 மாதங்களுக்குச் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டு, வெள்ளி, சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட வகை வழக்ககுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு  விரைவில் முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

படிக்கும்பொழுது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுபோல் தோன்றலாம். பின்பற்றினால் சிறப்பாக நடைமுறைக்கு வரும்.

ஒரு முன்நிகழ்வைக் குறிப்பது இதற்கு வழிகாட்டியாய் அமையும்.

நான் 1979-84 இல் இளஞ்சிறார் நடுவர் மன்ற(Juvenile Court) நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றினேன்.

எல்லாக் காவல் நிலையங்களில் இருந்தும் நாள்தோறும் சிறுவர் வழக்குகள் வரும். ஆனால், பல்வேறு பணிகளில் உள்ள காவலர்கள்  நாள்தோறும் கேட்பிற்கு வர இயலாமல், வழக்குகள் ஒத்திவைக்கப்படும் சூழல் இருந்தது.  நன்னடத்தை அலுவலர்களும் களப்பணிச்சூழலால் நாள்தோறும் நடுவர் மன்றம் வருவதில் சிக்கல் இருந்தது.

நன்னடத்தை அலுவலர்கள் பணி வரம்பில் சென்னைப் பெருநகரம் 5 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி முடிய முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வட்டத்திற்குரிய வழக்குகள் மட்டும் கேட்பிற்கு வரும் வகையில் வழக்குகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும். அவ்வட்ட வரம்பிற்குரிய காவல்துறையினர் தவறாது அன்று வரவேண்டும். வழக்கு தொடுக்கும்பொழுது முதல் நாளன்று இருவாரக் கணக்கு பார்க்காமல், அடுத்து உரிய வட்டத்திற்குரிய நாளன்று வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். பின்னர் அவ்வழக்குகள் தொடர்ச்சியாக அந்தக் கிழமையில் வருமாறு ஒத்தி வைக்கப்பட  வேண்டும். இதனால் காவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள் ஆகிய இருதரப்பாரும் தங்கள் பணிகளை ஒழுங்கு செய்துகொண்டு உரிய கிழமையில் தவறாமல் வர இயலும என்றேன்.  சிறார்மன்ற நடுவரும் தலைமைப்பெருநகர நடுவரும் ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றும் வகையில் நடைமுறைப்படுத்தினர். பெருமளவிலான வழக்குகள் நிலுவையில்லாமல் முடிவிற்கு வந்தன.

. இதே போன்று குறிப்பிட்ட நாளில் தொடர்புடைய வழக்குகள்மட்டும் வரும் வகையிலும் அரசுத்தரப்பில் மனித நேயத்துடன் அணுகும் முறையிலும் செயல்பட்டால் விரைவில் வழக்குகள் முடிவிற்கு வரும். குடும்ப நீதிமன்றம் போல்  உரிமை வழக்குகளிலும் இரு தரப்பாருக்கும் இடையே இணக்கம் காணும் வகையில் அறிவுரை மன்றம் ஒரு அமைக்கப்டுவதும் உரிமை வழக்குகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வரும்.

எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள் இதுபோல் நடவடிக்கை எடுத்து வழக்குகள் விரைவில் முடிக்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

மற்றொரு முதன்மையான வேண்டுகோள். நமது உயர்நீதிமன்றம்  சென்னை உயர்நீதிமன்றம் அல்ல! எனவே, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு-புதுச்சேரி நீதி மன்றம் என்றும் மதுரைக் கிளை தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை என்றும் அழைக்கப்பெற ஆவன செய்யவும் வேண்டுகிறோம்.

வெல்க தலைமை நீதிபதியின்  பணிகளும் தொண்டுகளும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 216, கார்த்திகை 24 –மார்கழி 01,  2048 /   திசம்பர் 10  – திசம்பர் 16,  2017

நீதிபதி நிசாபானு