தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா?

காப்பதற்கு இல்லையா?

  “தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?” என்ற வினாவை மக்கள் எழுப்புவதே தவறுதான். தமிழக மீனவர்களைக்  காப்பதற்கு மாறாகப் பல வகைகளிலும் தாக்குகின்ற, சுடுகின்ற, அழிக்கின்ற இந்தியக் கடலோரப்படை அல்லது கப்பற் படை அல்லது இவை போன்ற அமைப்பு எப்படி அவர்களைக் காக்க முன்வரும்? தங்கள் பணிகளை இயற்கையே எளிதாக்கிவிட்டது என மகிழத்தானே செய்யும்? அதுதான் இப்பொழுது நடக்கிறதோ என மக்கள் ஐயுறுகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்குக் குமரி மாவட்ட மீனவர்கள் கொடும் புயலால் அல்லலுற்றுள்ளனர். தம் சுற்றத்தார், காணாமல் போயுள்ளனரா?  மடிந்து விட்டனரா? என ஏதும் புரியாமல் மீனவர் குடும்பங்கள்  வேதனையில் மூழ்கியுள்ளனர். ஒரு பக்கம் இல்லங்களும் உடைமைகளும் அழிவு! மறு பக்கம் குடும்பத்தினருக்க ஆதாரமான அன்புச்சுற்றங்கள் கடலில் காணாமல்  போனஅவலம்!

எத்தனையோ  மீனவர்கள்  பிற மாநிலக் கடலோரங்களில் கரை ஒதுங்கியதாக அரசு தெரிவிக்கிறது. அஃது உண்மையெனில், அவர்களைக் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளச் சொல்லலாமே! தாழ்ந்து பறந்து மக்களை ஒடுக்கப் பயன்பட்ட உலங்கூர்திகள்(helecopters)  மீனவர்களைக் கண்டறிய பறக்காதது ஏன் என மக்கள் வினவுவதில் என்ன தவறு?

அரசும் நிழலரசும் துயர் துடைப்புப் பணிகளில் விரைந்து இறங்காமல் மீனவர்களை நட்டாற்றில் விடுவது ஏன்?

மத்திய மாநில அரசுகள் மீனவர்களைக் காப்பாற்றவும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை, திருவாரூர் முதலான புயலால் துன்புற்றுள்ள பிற மாவட்ட மக்களுக்கும் உரிய உதவிகளை விரைந்து செய்ய வேண்டும்.

கடல்கோள்அழிவினாலும் புயல் அழிவினாலும் இடறுற்ற சென்னையைக் காப்பாற்றிய அன்பர்கள், குமரிமக்களைக் காப்பாற்றவும் முன்வரவேண்டும்.

அரசுகள் துயர் துடைப்பு உதவிகளை அதிகரித்தும் உடன் உரிய மக்களுக்குச் சேரவும் உடரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மீனவர்கள் மட்டுமல்ல! குமரி மாவட்ட மக்களே கொடும்புயலால் கடும் அழிவைச் சந்தித்துள்ளனர். புயலால் துன்புறுவோருக்கு விரைந்து உதவி செய்யும் கேரள அரசைப்பார்த்துக் குமரி மாவட்ட மக்கள் தங்களைக் கேரளத்துடன் இணைக்குமாறும் குரல்  கொடுக்கின்றனர். அரசிற்கும் நாட்டிற்கும் பெரும் இழிவல்லவா இது!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், வஞ்சினம் கூறும் பொழுது

என் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது

கொடியன்எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக்

குடிபழி துாற்றும் கோலேன் ஆகுக! (புறநானூறு 72)

என்கிறார்.

”தான் எடுத்த செயலை முடிக்காவிட்டால், ஆட்சி நிழலில் வாழும் மக்கள் ஆட்சியாளன் கொடுமை எனக் கண்ணீர்ப் பெருக்கித் தன்னைத் தூற்றட்டும்” என்கிறார் பாண்டிய வேந்தர் நெடுஞ்செழியன். மக்கள் தமக்கு எதிராகத் தூற்றுவதைப் பெரும் பழியாக்க் கருதினர் அக்கால ஆட்சியாளர்களாகிய பழந்தமிழ் வேந்தர்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அதனை உணர வேண்டும்.

இந்நாட்டைவிட்டு வெளியேறுவோம் என்பவர்கள் வாழ்த்திக்கொண்டா இருப்பர்! பழி தூற்றிக் கொண்டிருக்கமாட்டார்களா? அதனைப் போக்க ஆள்வோர் முயல்க!

பழந்தமிழர் நெறியை உணர்ந்து இன்றைய ஆள்வோரும் குடிமக்கள் பழி தூற்றாமல் வாழ்க!

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல். (திருவள்ளுவர், திருக்குறள் 1021)

 சோர்வு அடையாமல் கடமை ஆற்றுபவர்க்கு இணையற்ற பெருமை கிட்டும் என்கிறார் அல்லவா, தெய்வப்புலவர் திருவள்ளுவர். அத்தகைய பெருமையை அடைய ஆள்வோரும், மக்கள்சார்பாளர்களும், அதிகாரிகளும், தொண்டர்களும்அன்பர்களும் முயல்க!

பாதிப்புற்றோர்களின் துயரங்கள் விலகட்டும்! இன்பம் இணையட்டும்!

-இலக்குவனார் திருவள்ளுவன்