(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 தொடர்ச்சி)

தலைப்பு-தமிழ்நூல்கள் எவ்வாறு அழிந்தன?-மயிலை சீனி. ; thaliappu_marainthupona_thamizhnuulgal_mayilaiseeni

மறைந்துபோன தமிழ் நூல்கள்

4/4

அயலார் படையெடுப்பு

 அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள்.

  தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர் செய்து அரசைக் கைப்பற்றிய காலத்தில், தமிழ் நூல் நிலையங்கள் கவனிக்கப் படாமல் மறைந்தன. விசயநகர அரசரால் அனுப்பப்பட்டு, தமிழ் நாட்டைப் பிற்காலத்தில் அரசாண்ட நாயக்க மன்னர்கள், பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் அரசாண்டனர், அவர்கள், சமயங்களையும் சமயப் புலவர்களையும் போற்றினார்களே தவிர, தமிழ் மொழிப் புலவரைப் போற்றவில்லை; பழைய தமிழ் நூல்நிலையங்களையும் போற்றவில்லை. பாண்டிய சோழ அரசர்களின் புத்தக நிலையங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.

  பிற்காலத்தில் தஞ்சாவூரை அரசாண்ட மராட்டிய அரசர்களும் பழந்தமிழ் நூல்களைப் போற்றினார்கள் என்று கூறமுடியாது. சரசுவதி மகால் புத்தகசாலையில் சில தமிழ் நூல்களும் இருந்தன என்றாலும், முதன்மையான சிறந்த தமிழ் நூல்கள் அங்கு இருந்ததாகத் தெரிய வில்லை.

  இலங்கையில், யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தமிழர்கள்: அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடையவர்கள். யாழ்ப்பாணத்தில் இவ் வரசர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள்; சரசுவதி மகாலயம் என்னும் புத்தகசாலையையும் வைத்திருந் தார்கள். பிற் காலத்தில் சிங்கள மன்னன் இம் மன்னர்களுடன் போர் செய்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்த இந்தப் புத்தகசாலையை அழித்துவிட்டான். அவன் தமிழனல்லாத சிங்களவன்: ஆகையால், தமிழ் நூல்களை அழிப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை.

  சேரநாடு பிற்காலத்தில், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மலையாள மொழியுள்ள நாடாக மாறிற்று. தமிழ் நூல்களைப் பற்றி மலையாளிகளில் பெரும்பான்மையோர் கவலைப்படவில்லை, அந்தச் சேரநாட்டுத் தமிழ் நூல்கள் போற்றுவார் அற்றுப்பையப்பைய மறைந்துபோயின.

  அந்நூல்களில் சில, மலையாள எழுத்தினால் எழுதப்பட்டுப் போற்றப்பட்டுவந்தன. வலைவீசு புராணம், பொன்னி புத்தான கதை முதலியவை அவற்றைச் சேர்ந்தவை. இவ்விரண்டு நூல்களும் மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் அறியாதவர்களால் பதிப்பிக்கப்பட்டபடியால் அவற்றில் பல செய்யுள்களின் சரியான உருவம் தெரியாமல் சிதைந்து காணப்படு கின்றன.

  மலையாள எழுத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் நூல்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மறைந்துபோகின்றன. மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருப்பதனால், அந்த எழுத்தை அறியாத தமிழர் அவை இன்ன நூலென்றும் அறிவதில்லை, மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி தமிழாக இருப்பதனால், தமிழ் அறியாத மலையாளிகள் அந்நூல்களைப் போற்றுவதில்லை: இவ்வாறு மலையாள எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் மறைந்துபோகின்றன.

  தமிழ் நாட்டிலே கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், அரசியல் நிலை மிக மோசமாய்விட்டது. மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் வேற்று மொழிக்காரர்களும் நமது நாட்டிலே வந்து, அரசியற் குழப்பங் களையும் போர்களையும் உண்டாக்கி, நாட்டின் அமைதியைக் கெடுத்துப் பாதுகாப்பை அழித்தனர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், முகம்மதியர்களும், மராட்டியரும் அந்த நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்த்திய அட்டூழியங்கள் சொல்லிமுடியா. பெரிய நகரங்கள் முதல் சிறிய பட்டி தொட்டிகள் வரையில் அவர்களின் அட்டூழியம் மக்களைத் தாக்கியது. குழப்பங்களும், கொலையும், கொள்ளையும், போர்களும், கலங்களும், படையெடுப்புகளும் தென் இந்தியா முழுவதும் நிகழ்ந்தன.

  அந்தக் காலத்தில்தான் பெரும்பான்மையான பழைய நூல்கள் அழிந்து மறைந்தன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த மக்கள், நூல்களைப் போற்றிவைப்பதில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? சமயப் பகைமைகளுக்கும் செல்லுக்கும் சிதலுக்கும் உயிர் தப்பி எஞ்சியிருந்த அருமையான சில நூல்கள், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அரசியற் குழப்பத்திலே பெரிதும் மறைந்து விட்டன.

  இவ்வாறு சில முதன்மைக் காரணங்களினாலே பல தமிழ் நூல்கள் மறைந்துபோயின. எத்தனை நூல்கள் மறைந்து போயின என்பதைக் கணக்கிட முடியாது. உரையாசிரியர்களும், நூலாசிரியர்களும், சாசனங்களும், குறிப்பிட்டுள்ள மறைந்துபோன நூல்களைப்பற்றிதான் அறிய முடியும்; குறிப்பிடப்படாமல் மறைந்துபோன நூல்களை நாம் அறிவதற்கு வழியில்லை.

  இப்பொழுதுங்கூடச் சில நூல்கள் ஏட்டுப் படிகளாகவே உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து விரைவில் அச்சிட்டு வெளிப்படுத்தா விட்டால், அவையும் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியாளரும் நாட்டவரும் இதில் கருத்துச் செலுத்தி ஆவன செய்வார்களாக.

மயிலை சீனி வேங்கடசாமி :mayilaiseenivenkadasamy

மயிலை சீனி.வேங்கடசாமி: மறைந்துபோன தமிழ்நூல்கள்