தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!
தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத்
தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில்
அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்!
(ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)
தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம்.
அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948-இல் த.செ.சேனநாயக்கா கொண்டு வந்த 18-ஆம் இலக்கக் குடியுரிமைச் சட்டம் இலங்கை விடுதலை பெற்று 285 நாட்களுக்குள் (ஆகத்து 20, 1948) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதனைத் தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். எதிர்த்துப் பேசியதோடு நில்லாமல் எதிர்த்து வாக்களித்தவர்.
இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தினால் மலையகத் தமிழர்கள் எண்ணூறாயிரம் (8,00,000) பேர் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். 1946-ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி மலையகத் தமிழர்கள் எண்ணிக்கை 7,80,600 (11.73 விழுக்காடு), இலங்கைத் தமிழர்கள் எண்ணிக்கை 7,33,700 (11.02%), ஆக மொத்தம் 15,24,300 (22.75 விழுக்காடு). 2012-இல் மலையகத் தமிழரின் எண்ணிக்கை 8,42,323 (4.16 விழுக்காடு) இலங்கைத் தமிழர் 22,70,924 (11.21%). இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.
மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இலங்கைக் குடியுரிமைச் சட்டம் புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசியவியலாளர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். அதாவது, இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப்பட்டுக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்கள் பல நூறாயிரக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கி நட்டாற்றில் விட்டதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
சோல்பரி யாப்பு (சோல்பரி சட்டம்) இயற்றப்பட்டபொழுது இலங்கையின் குடியுரிமைபற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. பெரிய சேனநாயக்கா சூழ்ச்சியாக, குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று சோல்பரி அவர்களிடம் சொல்லி விட்டார். தமிழர் தரப்பும் அதனை வலியுறுத்தவில்லை.
1948-இல் தந்தை செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அதன் தலைவர் க.கா.பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால், எதிர்த்து வாக்களித்திருந்தார். மேலே குறிப்பிட்டவாறு குடியுரிமைச் சட்டம் நவம்பர் 15-இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதற்கு முன்னரே செட்டம்பர் 03-ஆம் நாள் பொன்னம்பலம் பெரிய சேனநாயக்காவின் அமைச்சரவையில் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இது, குடியுரிமைச் சட்டம்பற்றி நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தபொழுதே பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்குப் பெரிய சேனநாயக்காவுடன் பேரம் பேசத் தொடங்கிவிட்டார் என்பதைக் காட்டியது.
பொன்னம்பலம் 1947-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,100 கூடுதல் வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றார். “கந்தசாமியைக் கொன்ற இரண்டகன் (துரோகி) மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. காரணம், த.செ.சேனநாயக்காவின் அமைச்சரவையில் மகாதேவா உள்நாட்டு அமைச்சராக இருந்தார். காவல் திணைக்களம் அவரது அமைச்சின் கீழ் இருந்தது. ஊர்வலமாக வந்த வேலை நிறுத்தக்காரர்கள் மீது காவல் திணைக்களத்தினர் சுட்டதில் கந்தசாமி உயிர் துறந்தார்.
மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்குத் துணை நிற்பேன் என்று எழுத்தில் மலையக மக்களின் தலைவர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கையைப் பொன்னம்பலம் மீறினார். குடியுரிமை பறிக்கப்படுவதால் தமிழர்களின் நாடாளுமன்றச் சார்பாண்மை (பிரதிநித்துவம்) பாதியாகக் குறையும் என்பது பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. தமிழர்களது வாக்கு வலிமையைச் சரி பாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய த.செ.சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. அமைச்சர் பதவிக்கு அவாக் கொண்டிருந்த பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்று முழங்கிய திரு.பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு அவாக் கொண்டதன் காரணமாக, “தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!” என்ற நிலைக்குத் தமிழர்களைத் தாழ்த்தினார்.
அடுத்த ஆண்டு 1949-இல் நாடாளுமன்றத் தேர்தல் (திருத்தம்) சட்டத்தில் (Parliamentary Elections (Amendment) Act of 1949) ஒற்றைவரித் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத் தமிழர்களது வாக்குரிமையையும் த.செ.சேனநாயக்கா பறித்தார். ஏற்கெனவே (1948) அமைச்சரவையில் அமைச்சராகச் சேர்ந்து விட்ட பொன்னம்பலம் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் இசைவாக வாக்களித்தார்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் “இன்று மலைநாட்டுத் தமிழர்களது கழுத்துக்குக் கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழி பற்றி முடிவு செய்யும் நேரம் வரும்பொழுது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும்” என்று தொலைநோக்கோடு பேசினார். 1956-ஆம் ஆண்டில் திரு.பண்டாரநாயக்கா ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபொழுது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தொலைநோக்கு உண்மையாகியது. பதவி அவாக் காரணமாகப் பொன்னம்பலத்துக்கு இந்தத் தொலைநோக்கு அடியோடு இருக்கவில்லை.
மலையகத் தமிழரை சிங்கள ஆளும் இனத்திற்குக் காட்டிக் கொடுத்த பொன்னம்பலத்தின் நேரத்திற்கேற்ற தன்னல அரசியலை எதிர்க்கும் முகமாகத் தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறினார். வெளியேறி 1949-ஆம் ஆண்டு திசம்பர் 18-ஆம் நாள் ‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். “தமிழ் மக்கள் இனம் ஒரு தேசிய இனம். வட – கிழக்கு (மாகாணங்கள்) அவர்களது வழிவழியான தாயக மண். இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஒழித்து விட்டு இணைப்பாட்சி அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களுக்குத் தன்னாட்சி அரசை நிறுவுவது தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குறிக்கோள்!” என்று அறிவிக்கப்பட்டது. வட – கிழக்கில் சிங்கள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் பாரிய சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதென்பது அந்தக் கட்சியின் அடுத்த முதன்மைக் குறிக்கோளாக இருந்தது.
தமிழ் அரசுக் கட்சியின் கொடியாக யாழ்ப்பாண அரசை ஆண்ட ஆரிய அரசர்களது காளைக் (இடபம்) கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் முதல் கூட்டம் முத்திரைச் சந்தைத் திடலில் நடந்தது. அதில் காளைக் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கலந்து கொண்டது இப்பொழுதும் நினைவு இருக்கிறது. பின்னர், காளைக் கொடி முந்நிறக் கொடியாக மாற்றப்பட்டது.
இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தந்தை செல்வநாயகம்பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் முதன் முதலில் அவரை மேடையில் பார்த்தபொழுது மெல்லிய ஆனால் நெடுத்த உருவம், நேர்க்கோடு வகுத்து வாரிய தலை, சற்றுப் பெரிய காது, கவர்ச்சிகரமான முகம், சந்தன நிறம், பட்டு வேட்டி, பட்டுப்போர்வை, பட்டுச் சட்டை ஆகிவற்றோடு காட்சி அளித்தார். வயது ஐம்பதைத் தாண்டி விட்டாலும் இளமை குன்றாத தோற்றம்.
ஐம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாண முற்றவெளித் திடலில் தமிழரசுக் கட்சி மேடைகளில் தோன்றிய தந்தை செல்வநாயகம் அவர்களின் இந்த மிடுக்கான தோற்றத்தை இளைய தலைமுறைகள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த தலைமுறை இளமை குன்றி, முதுமை எய்தி, நடை மெலிந்து, மேடைகளிலும் சரி, நேரிலும் சரி, ஒவ்வொரு சொல்லாகத் தட்டுத் தடுமாறி மெல்லிய குரலில் பேசும் தந்தை செல்வநாயகம் அவர்களைத்தாம் பலர் பார்த்திருப்பார்கள். அவரைப் பீடித்த நடுக்குவாத நோய்(Parkinson’s disease) அவரது உடல் நிலையையும் நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் வெகுவாகப் பாதித்தது.
இதனால் போலும் தந்தை செல்வநாயகம், தந்தை பெரியாரைத் தமிழ்நாட்டில் சந்தித்தபொழுது தன்னை விட வயது குறைவாக இருந்தும் தன்னை விட மூப்பாகத் தெரிகிறார் என்று பெரியார் சொல்லிக் கவலைப்பட்டார்.
தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948-ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் மலைநாட்டுத் தமிழர்கள் எண்ணூறாயிரம் பேரின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஏற்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுத் தலைவர் பொன்னம்பலத்தோடு அவர் ஒத்துப் போயிருந்தால், அல்லது முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டிருந்தால் தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் தடம் புரண்டு திசை மாறியிருக்கும் என்பதில் இருவித கருத்து இருக்க முடியாது.
தந்தை செல்வநாயகம் பிறந்தது மலேசியாவில். படித்தது யாழ்ப்பாணத்தில். தொழில் பார்த்தது கொழும்பில். மறைந்தது சொந்த ஊரான தெல்லிப்பளையில்.
கொழும்பில் உள்ள புகழ் பெற்ற புனித தாமசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவர்தம் தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால், அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே விலகல் கடிதத்தைக் கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர், கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate) பட்டம் பெற்று வெளியேறினார்.
தந்தை செல்வநாயகம் மிகவும் புகழ் வாய்ந்த உரிமையியல் வழக்கறிஞர்களில் ஒருவராக நீண்ட காலம் விளங்கினார். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களுக்கே உரித்தான அலட்டலோ மேல்தட்டுக்குரிய பகட்டோ இன்றித் தனது கட்சிக்காரர் பக்கம் உள்ள நயன்மைகளைச்(நியாயங்களைச்) சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் முன் எடுத்துக் காட்டுக்களோடு வழக்குரைத்து வழக்குகளை எளிதில் வென்று விடுவார். இந்த ஆற்றல் அவரிடம் மிகுதியாகக் காணப்பட்டது. இதனால் மற்ற வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாமல் நயவர்களும் (நீதிபதிகளும்) அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தார்கள். அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
தந்தை செல்வநாயகம், தான் தோன்றி வழக்காடிய வழக்குகள் பற்றி அவ்வப்பொழுது சொல்வார். ஒரு வழக்கில் அவரது கட்சிக்காரர் அறம்புறமாக வாக்குமூலம் அளித்து விட்டார். தந்தை செல்வநாயகத்தின் உதவி வழக்குரைஞர்(சட்டத்தரணி) பி.நவரத்தினராசா அ.வ.(Q.C..) தன் தலையை மேசைக்குக் கீழே புதைத்துக் கொண்டார். சான்றுரைஞர் கூண்டில் இருந்து இறங்கி வந்த கட்சிக்காரர் தந்தை செல்வநாயகம் அவர்களைப் பார்த்து “எப்படி ஐயா எனது வாக்குமூலம்!” என்று கொஞ்சம் பெருமிதத்தோடு கேட்டார். அவர் முதுகில் தட்டிய தந்தை செல்வநாயகம் “மெத்த நல்லது! நீர் கெட்டிக்காரர்” என்று சொன்னார். எந்த நெருக்கடியிலும் தன்னம்பிக்கையைக் கை விட்டுவிடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தந்தை செல்வநாயகம் இதனை அவரது வீட்டில் வைத்து எமக்குக் கூறினார்.
முப்பதுகளில் நடைமுறைக்கு வந்த தோனமூர் அரசியல் திட்டம் அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரிச் சான்றாண்மை (பிரதிநித்துவ) முறையை ஒழித்து அனைவருக்கும் வாக்குரிமை (Universal suffrage) என்ற அடிப்படையில் சட்டமன்றத்துக்குத் தேர்தல் மூலம் சார்பாளர்களைத்(பிரதிநிதிகளை) தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தியது. அதனை வயவர்(sir) பொன்னம்பலம் இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். “தோனமூர் என்றால் ‘இனி தமிழர் இல்லை’ எனப் பொருள்” (Donoughmore means Tamils No More) என்று குரல் எழுப்பினார். புதிய தேர்தல் முறையில் தமிழரின் சார்பாண்மை வலிமை பெருமளவு குறைந்தது. அமைச்சரவையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு நூற்றுக்கு நூறு சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவானது. தோனமூர் அரசியல் யாப்பின் பின்னரே பெரும்பான்மை சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசியல் ஆளுமை தங்களது கையில் இருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்கள். இந்த வரலாற்றையும் எம்மிடம் சொன்னவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்தாம்.
தமிழ் அரசுக் கட்சியின் தொடக்கக் காலத்தில் தந்தை செல்வநாயகத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்களில் மூன்று பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவர் ‘இரும்பு மனிதர்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட மருத்துவர் இ.மு.வி.நாகநாதன். இரண்டாமவர் கோப்பாய்க் கோமான் திரு.கு.வன்னிய சிங்கம். மூன்றாமவர் இளம் வழக்குரைஞர்(சட்டத்தரணி) வி.நவரத்தினம். இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வல, இடக் கைகளாகச் செயல்பட்டார்கள்.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கை நிறைய ஈட்டிய பணத்தைத் தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் ஈட்டலாம் என்ற வழக்கம் இருந்த காலக் கட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தன் செல்வத்தை இழந்தார். தனது உடல் நலத்தை இழந்தார்.
கொழும்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த அவர் கடைசி வரை வாடகை வீடு ஒன்றில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றில்லை ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும்.
கொழும்பு, தமிழர்களுக்கு அயலான இடம். வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரித்தான வாழ்விடம். இது தந்தை செல்வநாயகம் அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர் கடைசி வரை கொழும்பில் வாடகை வீட்டில் இருந்ததற்கு அதுவே காரணமாகும். தம் பிள்ளைகள் தாங்கள் பிறந்த மண்ணின் மணத்தையும் மண்ணுக்குரிய பண்பாடுகளையும் மறக்கக் கூடாது என்பதற்காகப் பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தெல்லிப்பளைக்கு அவர்களை அனுப்பி வைத்து விடுவார்.
தந்தை செல்வநாயகத்திடம், தான் பெரிய தலைவர் என்ற எண்ணமோ, புகழ் பெற்ற அரசியின் வழக்குரைஞர்(Q.C.) என்ற பெருமையோ எள்ளத்தனையும் இருந்ததில்லை. காட்சிக்கு எளியவர் என்று சொல்வோமே? அதற்குத் தந்தை செல்வநாயகம் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பது, சொல்பவர் உருவு கண்டு எள்ளாமை, சொல்பவரை இடை மறித்தல் செய்யாது எல்லாவற்றையும் பொறுமையோடு செவி மடுக்கும் பண்பு அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன. வேறு யாராவது குறுக்கிட்டுச் “சொன்னது போதும்! ஐயாவுக்கு எல்லாம் விளங்கும்” என்று சொன்னாலும் “இல்லை. அவரைப் பேச விடுங்கள்” என்று சொல்லி விடுவார்.
சிலர் சரமாரியாகக் கட்சியில் உள்ள குறைகளை அடுக்கிக் கொண்டு போவார்கள். அவர்களைப் பார்த்துத் தந்தை செல்வநாயகம் கேட்கும் கேள்வி, “சரி, நோயைச் சொல்லி விட்டீர்கள். அதற்குரிய மருந்தையும் சொல்லுங்கள்” என்பதுதான்.
நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காகப் போகாமலோ தொகுதிகளுக்குப் போகாமல் தங்கள் சட்டத் தொழிலைப் பார்ப்பதிலோ காலத்தைப் போக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி முறையிட்டால் அதற்குத் தந்தை செல்வநாயகம் இறுக்கும் விடை – “ஆட்களை இணக்க முடியாது. உள்ளவர்களை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும்”.
தந்தை செல்வநாயகம் அரசியல் மேடைகளிலும் சரி, நீதிமன்றங்களிலும் சரி மிகுதியாகப் பேசுவதில்லை. குறிப்பாக நீதிமன்றங்களில், தேவைக்குக் கூடுதலாக ஒரு சொல்லேனும் பேச மாட்டார். “எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம்! மனிதர் இவ்வளவு சுருக்கமாகப் பேசிவிட்டு உட்கார்ந்து விட்டாரே! வழக்கு வென்ற மாதிரித்தான்” என்று ஏங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.
தந்தை செல்வநாயகம் அவருக்கு வாலாயமான தமிழ்ச் சொற்றொடர்கள் சிலவற்றைத் தனது உரையாடலில் அடிக்கடி பயன்படுத்துவார். “அவர்கள் எங்களை அழிக்க நினைப்பது துலாம்பரமாகத் தெரிகிறது”, “எங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது ஒரு இக்கட்டான வேலை”, “சிங்கள மேலாண்மையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து போவோம்”, “வாள் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பன சில சொற்றொடர்கள்.
தந்தை செல்வநாயகம் சமயத்தால் கிறித்துவராக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கருநாடக இசையிலும் சரி, நாதசுர இசையிலும் சரி இரண்டிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நாதசுர இசை நிகழ்ச்சியை மண்டபத்தின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஆடாமல் அசையாமல் மணிக் கணக்கில் கேட்டு மகிழ்வார்.
தமிழ்ப் பண்பாடு காப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. திருமணம் ஆகி நான்காம் நாள் விழாவில் மேலைப் பாணியில் மேசையில் சீனக் களிமண் கோப்பை முள்ளுக் கரண்டி ஆகியவற்றுடன் தம் மாமனார் விருந்து ஏற்பாடு செய்திருந்ததை விரும்பாது தன் புது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். வாழை இலையில் தரையில் உட்கார்ந்து விருந்து சாப்பிட வேண்டும் என்பது மாமனாருக்குத் தந்தை செல்வநாயகம் இட்ட கட்டியம். அதை மாமனார் செய்யவில்லை என்பதுதான் சினத்துக்குக் காரணம்.
தந்தை செல்வநாயகத்தின் இந்தக் கொள்கைப் பிடிப்பு அரசியலிலும் இருந்தது. சூழலுக்கேற்ப மாறுவது, கொள்கையில் விட்டுக் கொடுப்பது என்பவை அவரது அரசியல் அகராதியில் இல்லாதவை. முடிவு மட்டுமில்லை, அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாகும்.
1972-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கையின் புதிய ஒற்றையாட்சி யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தந்தை செல்வநாயகம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளித் தமிழ் மக்கள் ஆதரவு யார் பக்கம் என்பதை எண்பிக்க இடைத் தேர்தல் நடாத்துமாறு ஆட்சியாளருக்கு அறைகூவல் விடுத்தார். மூன்று ஆண்டுகள் காலத்தைக் கடத்திய பின்னர் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரை பதினையாயிரத்துக்கும் கூடுதலான வாக்கு வேறுபாட்டில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். இப்படி இடைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் வி.பொன்னம்பலம் சில ஆண்டுகள் கழித்துத் தமிழீழக் கோரிக்கையை ஏற்று அதனை முற்றாக ஆதரித்தார் என்பது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
பெரும்பான்மைக் குமுகத்தைச் சேர்ந்த அவரது அரசியலாளர்களும் தந்தை செல்வநாயகத்தின் கொள்கையையும் கோட்பாட்டையும் விரும்பாவிட்டாலும் அவரது நேர்மையில் ஒருபொழுதும் ஐயப்பட்டது கிடையாது. தமிழ் மக்கள் அவரை ‘ஈழத்துக் காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள்.
தந்தை செல்வநாயகம் அரசியலுக்கு வந்திராது தான் உண்டு, தனது தொழில் உண்டு, குடும்பம் உண்டு என்று இருந்து பின்னர் தன்னைத் தேடி வந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்று ஓய்வு பெற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு கண்டிப்பாக மீகாமன்(மாலுமி) இல்லாத படகு போலத் திசை மாறிப் போயிருக்கும். தன்னலத் தமிழ்த் தலைவர்களுக்குப் பணம், பதவி, பட்டங்கள் கொடுத்து முழுத் தமிழினத்தையுமே சிங்கள ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கியிருப்பார்கள். அதன் பின் தமிழர்களைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்துக் கழுத்தை அறுத்திருந்திருப்பார்கள். தமிழினம் மீளா அடிமைத் தளையில் கட்டுண்டு அழிந்து போயிருக்கும்.
இதைத் தடுத்தி நிறுத்தி குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்து, சிறை சென்று, உடல் நலம் கெட்ட பொழுதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்! அவர் நினைவு என்றும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் பசுமையாக இருக்கும்!
எழுத்து: நக்கீரன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
நன்றி: தமிழ் 24 செய்தி
Leave a Reply