தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்

 

  மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!

  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.

  நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா மொழிகளிலும் சென்னை என அழைக்கப்பெற்றது(1996), ஆகியன திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு நிலையாகப் பெருமை சேர்ப்பனவாகும். அன்றைய மூவேந்தர்கள், வள்ளல்கள்போல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்  மொழிவளர்ச்சியிலும் கலைஞர்கள் நலனிலும் கருத்துசெலுத்துகின்றன. தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் வழங்கியும் சிறந்த நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கியும்   உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும்  பல்வேறு கருத்தரங்கங்கள் நடத்தியும் எழுச்சியையும் படைப்புத்திறன் வளர்ச்சியையும் புதிய படைப்பாளிகளையும் உருவாக்குகின்றனர்.

 அரசு அலுவலகங்களுக்கு  அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் வழங்குதல், மின் காட்சியுரை மூலம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு  செய்துவருவதன் மூலம் பிழையற்ற நல்ல நடையில் அரசின் கோப்புகள் உருவாக வழி வகுக்கப்பட்டுள்ளது

    ’திருக்குறள் முற்றோதல்’ பாராட்டுப் பரிசு, பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதி வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கான பரிசுகள், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, சொல்வங்கித் திட்டம், தமிழ் கலைக்கழகம் (அகாதமி) அமைத்தல். வேர்ச்சொல் சுவடி வெளியிடுதல். ஆகியவற்றின் மூலம் கலப்பற்ற தூய தமிழ்நடையை மாணாக்கரிடமும் இளைஞர்களிடமும் மற்ற பொதுமக்களிடமும் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகிறது.

   இந்த ஆண்டு மொரிசியசில் தமிழ் கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில்,  தமிழறியாமலே தமிழர்கள் மிகுதியாக வாழும்  இலரீயூனியன்(Re Union), பருமா,முதலான நாடுகளுக்கும் தமிழ்க்கல்வி பரவும்.

   உலகத்  தமிழ்ச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு  உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்குதல்,  அவர்களின் படைப்புகள் வெளியிடல், ஆய்வரங்கம் நடத்தல்  முதலானவற்றிற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உலக அறிஞர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையேயும் பிணைப்பு  ஏற்படும்.   பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கவும் பிற மாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்கும் அரசு நிதி வழங்குகிறது

  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இயக்ககம்,  12000 பக்கங்கள் கொண்ட  அகராதித் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது(1974-2011). வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை

  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், தொல்காப்பியர் ஆய்விருக்கை, திருக்குறள் ஓவியக்காட்சிக் கூடம், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு-தகவல் மையம், மொழியியல் ஆய்வுக்கூடம், சுவடிகள் பாதுகாப்பு மையம்  ஆகியவற்றைத் தமிழக அரசு அமைத்து வருகிறது. இவற்றின் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களும் வாழ்வியல் முறைகளும் வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து பரப்பப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.

  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கியும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை. அளித்தும் அவர்கள் நலன் பேணுவதில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

  கொரிய மொழி, சீனம் – அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், ஆத்திச்சூடி மொழிபெயர்ப்பு எனத் .தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதுடன் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

 ஆண்டுதோறும் 32 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ‘தமிழ்த்தாய் விருது’(2012), மகளிருக்கு‘அம்மா இலக்கிய  விருது’(2016), திருவள்ளுவர் விருது  முதலான 14 அறிஞர்கள் ஆன்றோர்களின் பெயரில் விருதுகள்,  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2014) என விருதுகள் வழங்கி, அரசு தமிழ்அறிஞர்களையும் ஆன்றோர்களையும் தமிழ்அமைப்புகளையும் சிறப்பிக்கிறது.

  நாம் சாதனைகளாகக் கூறுவனவே, வேதனைகளாக உள்ள கொடுமைகளும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் உள்ளன.

  தமிழ் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் ஆணையும் அப்படிப்பட்ட வேதனைதான். அரசாணையின்படி பத்து வேலையிடங்கள் இருந்தால் தமிழ் படித்தவர்களை முதலில் எடுக்க மாட்டார்கள். 200 வேலையிடங்களை நிரப்ப வேண்டும் என்றால்,   இட ஒதுக்கீட்டின்படி, 18, 19, 23, 26, 150, 166, 188 ஆவது இடங்கள்தாம் தமிழில் படித்தவருக்கு அளிக்கப்படும். சமூக நீதி வழங்குவதுபோல் காட்டப்பட்டுத் தமிழுக்கான சமநீதி மறுக்கப்பட்டுள்ளதே!

           ஊர்திகளில் தமிழ் எண்களைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்தார்கள்.  இந்த ஆணையும் முழுமையாக இல்லை. இப்படியாகப் பொதுவாக அரை குறை ஆணைகளைப் போட்டுவிட்டுப் பெருமை பேசுவதால் தமிழ் வளர்ந்து விடுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 அரசாணை நிலை எண்: 117 நாள்: 29.01.1982 இன்படிப் பெயர்ப்பலகைகள் தமிழ், ஆங்கிலம், பிற மொழிகளில்  5; 3: 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

  அரசாணை நிலை எண்: 24 நாள்: 06.01.1982 என்பதன்படித் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தாத பணியாளர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  .

 அரசாணை நிலை கல்வித்(த.வ.)துறை எண் 1134 நாள் 21.06.1978 இன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில்தான் கையொப்பமிடவேண்டும்.

  இவை யாவும் ஏட்டளவு ஆணைதான்.

  அரசாணை நிலை  த.வ.ப.அ.துறை எண்: 431 நாள்: 16.09.1998 இன்படி நம் பெயருக்கு முன் அமையும் முதல் எழுத்துகளை எல்லா இடங்களிலும் தமிழில்தான் குறிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது தமிழ்ஆட்சி மொழித்துறையைப் பார்க்கும் அமைச்சரின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது.

  அரசாணை நிலை  பொது(த.வ.)துறை எண்: 1609 நாள்: 02.08.1968 இன்படித் தலைமைச் செயலகத்தில் நிதி, சட்டம்,  சட்ட மன்றம் ஆகிய துறைகள் நீங்கலாக அனைத்துத்துறைகளிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும். இப்பொழுதும்  பல  துறைகளிலிருந்து ஆங்கிலத்தில்தான் மடல்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு ஆங்கிலக்காவலர்போல் செயல்பட்டு ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்தி வருகிறது.

  இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழ்வளர்ச்சிச் செயலகத்திடம் முறையிட்டால் தொடர்பான ஆணைகளை இணைத்து இவற்றின்படிச் செயல்படுங்கள் எனப் பொதுவாக மட்டும் கூறி அமைதி காக்கிறது.

 திராவிடக்கட்சிகள் ஐம்பது ஆண்டுக்காலத்தில் தமிழுக்குத் செய்தனவாக பெரும்  பட்டியல் இடும் அளவு அருவினை புரிந்துள்ளார்கள் – சாதனை செய்துள்ளார்கள்.

     முந்தைய   பேராயக்கட்சியான காங்கிரசு தொடர்ந்திருந்தாலோ, இந்தியக் கட்சி எதுவும் ஆட்சிக்கு வந்திருந்தாலோ தமிழ்நாடு,  இந்தி நாடாக மாறியிருக்கும். இருப்பினும் திராவிடக்கட்சிகள் வசைக்கு ஆளாவதன் காரணம் என்ன?

 பேரறிஞர்  அண்ணா முதல்வராக இருக்கும்பொழுது ஐந்தாண்டிற்குள் முழுமையும் தமிழை ஆட்சிமொழியாகச் செயல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், பத்து x  5 ஆண்டுகள் ஆன பின்னும் அத்திட்டம் முழுமையாகவில்லையே!

  பேராயக்கட்சி/காங்கிரசு ஆட்சியில் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி இருந்தது. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட போராட்ட முயற்சிகளால் ஆங்கில வழிக்கல்வி இருந்த கல்லூரிகள் தமிழுக்கு மாறத் தொடங்கிற்று.  ஆனால் தமிழாகக் காட்சியளித்த திராவிடக் கட்சிகள் ஆட்சியில், பள்ளிகளிலும்   – அதுவும் மழலைக்கல்வியிலும் – ஆங்கிலம் குடிபுகுந்தது.

  இந்தித் தீயிலிருந்து தமிழ்ப்பயிரைக் காப்பதற்காக ஆங்கிலத் தண்ணீரை ஊற்றி ஓரளவு காப்பாற்றியவர்கள்ஆங்கில நீரில் தமிழ்ப்பயிர் அழுகிப் போகச் செய்துவிட்டார்களே!

 தமிழே அறியாமல் இரண்டு தலைமுறைகள் வளர்ந்துவிட்ட அவலம் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தானே வந்துள்ளது?

  தமிழ் தொடர்பான துறை என்றால்,  தமிழ்ப்புலமையல்லாதவர் அல்லது தமிழரல்லாதவர்களையே பொறுப்பில் அமர்த்துவதே திராவிடக்கட்சிகளின் வழக்கம். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தமிழில் புலமை பெற்றிருக்கத் தேவையில்லை என்னும் பொழுது பிற இடங்களில் மட்டும் தமிழ் படித்தவர்களுக்கு வேலையா கிட்டும்?

 ஒருமுறை மாநிலத்தீர்ப்பாய நீதிபதி ஒருவர், “தமிழ் படித்தவர்களுக்குத்  தமிழ்வளர்ச்சித் துறையில் என்ன வேலை? வேறு எங்காவது போக வேண்டியதுதானே” என்று கேட்டார். தமிழ் படித்தவர்கள் பிச்சை எடுக்கப்போக வேண்டும் என்று கருதினார் போலும்! என்றாலும் இப்போது அந்த நிலை மாறி வருகிறது.

  பொதுவாக நாம்   அரசை மட்டும் கூறிப்பயனில்லைதான். செயல்படுத்தும் நிலையில் இருக்கும் நம்மைப் பொருத்துத்தான் சாதனையும் வேதனையும்.  நாமும் அவரவர் நிலையில் தமிழைப் பயன்பாட்டுமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களுடன் தமிழில் பேசவும் தமிழர்களிடையே தமிழில் எழுதவும் தமிழ்ப்பெயர்களிட்டும் தமிழில் வழிபட்டும் தமிழோடு இணைந்து இருக்க வேண்டும்.

அரசு .இனியேனும் விழிக்கட்டும்! தமிழை என்றும் உள்ள மொழியாக்கட்டும்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

– நக்கீரன் தொகுதி 29:  வெளியீடு 122 நாள் ஏப்.17-19, 2017

பக்கங்கள் 26-28

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=452