(தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி – தொடர்ச்சி)

    புராணம் புகழும் நெல்லை வேணுவனத்தில் வேய்முத்தர்

    திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த காரணத்தால் வேய்முத்தர் என்றும் கூறப் படுவார்.

    பாலிழந்த ஆயன்

    இப் பகுதியில் அமைந்த மூங்கிற்காட்டின் கீழ்த் திசையில் மணப்படை என்றோர் ஊர் இருந்தது. அங்கிருந்த பாண்டியர் குலத்தோன்றலாகிய மன்னன் ஒருவன் இப் பகுதியை ஆண்டு வந்தான். அம்மன்னன் மாளிகைக்கு நாள்தோறும் ஆயன் ஒருவன் மூங்கிற் காட்டைக் கடந்து, குடத்தில் பால் சுமந்து சென்று கொடுத்து வந்தான். ஒரு நாள் காட்டின் நடுவே ஒரு மூங்கில் மரத்தின் பக்கத்தில் வரும்போது, அங்கிருந்த கல்லில் இடறிப் பாற் குடத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டான். ஒரு குடம் பாலும் வீணுயிற்று. ஆயன் மனம் வருந்தி வீடு திரும்பினான்.

    உளமுடைந்த ஆயன்

    மறுநாளும் அவன் பாலைச் சுமந்து நடந்தான். மிகுந்த கவனத்துடன் அவன் நடந்து வந்தும் அதே கல்லில் திரும்பவும் இடறிக் குடத்தைக் கீழே போட்டான். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் கண்ட ஆயன் உள்ளம் உடைந்தான். தன் செலவுக்குத் தடையாக இருக்கும் அக் கல்லை உடைத்துத் தோண்டி எடுத்தெறிந்துவிட வேண்டும் என்று முடிவு கட்டினான். ஒருநாள் இருப்புக் கருவியுடன் புறப்பட்டான். அக்கல்லை உடைப்பதற்காக ஓங்கி அதன் தலையில் வெட்டினன். கல்லில் வெட்டுண்ட இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டெழுந்தது. அதைக் கண்டு அச்சமும் வியப்பும் கொண்டான். இச் செய்தியினை மணப்படை மன்னனிடம் சென்று அறிவித்தான்.

    இலிங்கம் காண்டல்

    ஆயன் கூறிய செய்தியைக் கேட்ட வேந்தன் வேணுவனத்துள் சென்று அக் காட்சியைக் கண்டான். சுற்றிலும் நிலத்தை அகழ்ந்து நோக்கினன். அக் கல் சிவலிங்கமாகக் காட்சியளித்தது. அவ் இடத்திலேயே அரசனும் ஆயனும் சிவபிரான் திருக்கோலத்தைத் தரிசித்தனர். அதனால் அரசன் ‘முழுதுங் கண்ட ராம பாண்டியன்’ எனப் பெயர் பெற்றான் , அவ் ஆயன் ‘முழுதுங் கண்ட ராமக்கோன்’ என்று பாராட்டப் பெற்றான். அன்றிரவே பாண்டியன் கனவில் வேய் முத்தர் தோன்றினர். காட்டை யழித்துக் கடிநகர் அமைக்குமாறு கட்டளையிட்டருளினர். சிவலிங்கம் இருந்தவிடத்தில் திருக்கோவில் எழுப்புமாறு பணித்தார். அவ்வாறே முழுதுங்கண்ட ராம பாண்டியன் மூங்கிற்காட்டை யழித்துப் பாங்கான நெல்லைப் பதியை உருவாக்கினன். சிவலிங்கம் விளங்கிய இடத்தில் திருக்கோவிலையும் கட்டினான்.

    தாருகவனத்தில் கங்காளர்

    இந் நெல்லைப் பகுதியே முன்னை நாளில் தாருக வனமாக விளங்கிற்றாம். இங்கு ஏழு முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நெடுந்தவத்தால் சிறந்து விளங்கிய பெருமுனிவர்கள். அவர்கள் தாருகவன முனிவர்கள் என்று தலைக்கொண்டு போற்றப்பெற்றனர். அவர்கள் தங்கள் தவச்செருக்கால் சிவபெருமானையும் மதிப்பதில்லை. அம் முனிவர்களின் பத்தினியரும் அத்தகைய செருக்குடன் இருந்தனர். அவர்களுடைய தவச்செருக்கை யடக்கி நல்லறிவு கொளுத்த வேண்டுமெனச் சிவபெருமான் நினைத்தருளினான். கங்காள வடிவங் தாங்கிக் காட்டிடையே புகுந்தான். பிச்சாடனக் கோலத்துடன் தாருகவன முனிவர் பத்தினியரின் சித்தத்தைப் பேதுறுத்தினான். அவர்கள் அறிவிழந்து காமத்தால் பிச்சாடனக் கோலங் தாங்கிய பெம்மானைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் தனித் தனியே பிச்சாடனருடன் கூடிக் குலவிக் குழந்தையும் ஈன்றெடுத்தனர். இச் செயலைக் கண்டு தாருகவன முனிவர்கள் சிவபெருமான்மீது தணியாத சினம் கொண்டனர். அப் பெருமானை அழித்துவிடக் கொடிய வேள்விகள் பல செய்தனர். அவர்கள் ஆற்றிய தவத்தாலும் வேள்வியாலும் சிவபெருமானை ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர், அவர்கள் தம் செருக் கொழிந்து, அறியாமையை உணர்ந்து, பெருமான் திருவடி பணிந்தனர்.

    நெல்லுக்கு வேலியமைத்த வேய்முத்தர்

    மூங்கிற் காட்டில் முளைத்த வேய்முத்தருக்கு நாள் தோறும் தொண்டு செய்யும் ஆதிசைவ அந்தணாளன் ஒருவன் இருந்தான். அவன் வேதசன்மா என்னும் பெயருடையான். அவன் ஒருநாள் வேய்முத்தருக்குத் திருவமுது படைத்தற்குரிய நெல்லைக், கோவிலின் அருகில் உலரப் போட்டுவிட்டுப் பொருநையாற்றுக்கு நீராடச் சென்றான். அவன் ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும்போது கறுத்த மேகங்கள் இடியிடித்துப் பெருத்த மழை பெய்யத் தொடங்கின. உலரவிட்ட நெல்லை மழைநீர் கொண்டுபோய்விடுமே என்று வேதசன்மா கெஞ்சம் வெதும்பிக் கோவிலுக்கு விரைந்தோடி வந்தான். நிலத்தில் விரித்துச் சென்ற நெல்லைப் பார்த்தான். நெல்லின் மீது ஒருதுளி நீரும் விழவில்லை. அதைச் சுற்றிலும் வேலியிட்டது போன்று மழை பெய்து கொண்டிருந்தது. வேய்முத்தரின் திருவருளைச் சிந்தித்து வியந்தான். நெல்லுக்கு வேலியிட்டுக் காத்தருளிய வேய்முத்தரை நெல்வேலி நாதன் என்று போற்றிப் புகழ்ந்தான். அதனால் இத்தலம் திருநெல்வேலி என்று பெயர்பெற்றது.

    திருநெல்வேலி தென்காஞ்சி

    திருநெல்வேலித் திருக்கோவிலில் பாண்டியர், சோழர் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அவை கி. பி. 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை தென்னகத்தை யாண்ட மன்னர்களால் எழுதப் பெற்றவை. அக் கல்வெட்டுகளில் திருநெல்வேலி அமர்ந்த இறைவன் பெயர் திருநெல்வேலி உடையார், திருநெல்வேலி உடைய நாயனர் என்றும், அம்மன் பெயர் திருக்காமக்கோட்ட முடைய காய்ச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இப் பெயர்கள் எழுந்தமைக்குக் காரணம் கூறுவது போலப் புராணம் ஒரு கதை புகல்கிறது.

    நெல்லைப் பகுதியிலிருந்த வேணுவனத்தின் இடையே கம்பைநதியென ஓராறு ஓடியது. அவ்வாற்றின் கரையில் உமையம்மை சிவபெருமானை அடையத் தவங்கிடந்தார். காஞ்சிமாநகரில் கம்பை நதிக் கரையில் கடுந்தவம் ஆற்றிய காமக்கோட்டத்து நாயகியாரைப் போல, இப் பகுதியிலும் உமையம்மை தவம்புரிந்த காரணத்தால் இந் நகருக்குத் தென்காஞ்சியெனப் பெயர் வழங்கலாயிற்று என்பர். சிவனையடையத் தவம்புரிந்த உமையம்மைக்குப் பெருமான் திருக்கோலம் காட்டித் திருமணம் புரிந்துகொண்டார். அத்திருமணக்கோலத்தை அகத்தியர் முதலான முனிவர்கள் கண்டு தரிசித்துக் கழிபேருவகை யடைந்தனர். அதனாலேயே இந்நகரில் ஐப்பசித் திங்களில் காந்திமதியம்மை திருமணவிழாப் பெருமுழக்குடன் நடைபெறுவதாகும்.

    (தொடரும்)
    அ. க. நவநீத கிருட்டிணன்
    தமிழ் வளர்த்த நகரங்கள்