தமிழ் வளர்த்த நகரங்கள் 17 – அ. க. நவநீத கிருட்டிணன்: தில்லையின் சிறப்பு
(தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை-தொடர்ச்சி)
தில்லை மாநகரம்
11. தில்லையின் சிறப்பு
தில்லைச் சிதம்பரம்
சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்குச் சிறப்பு வாய்ந்த தெய்வத்தலம் தில்லையாகும். அதனால் சைவர்கள் இத் தலத்தினைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம் இதுவாகும். ஆதலின் இத் தலத்தைப் ‘பூலோகக் கயிலாயம்’ என்றும் போற்றுவர். ஐம்பெரும் பூதங்களின் வடிவாக இறைவன் விளங்குகிறான் என்ற உண்மையை விளக்கும் தலங்களுள் இது வான் வடிவாக விளங்கும் உண்மையை விளக்குவது. அதனாலயே இத் தலத்திற்குச் ‘சிதம்பரம்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. சிதம்பரம் என்ற சொல்லுக்கு ஞானவெளி என்பது பொருளாகும்.
தலத்தின் பிற பெயர்கள்
இத் தலம் அமைந்துள்ள நிலப்பகுதி, ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த பெருங்காடாக இருந்தமையால் தில்லையெனப் பெயர்பெற்றது. புலிக் கால் முனிவராகிய வியாக்கிரபாதர் தவங்கிடந்து இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்த தலமாதலின் புலியூர் என்றும், பெரும்பற்றப் புலியூர் என்றும் வழங்கலுற்றது. உலக உதயமும் ஆன்மாக்களின் இதயமும் இத் தலத்தில் உள்ளன என்று ஆன்றோர் கருதுவதால் இதனைப் பொது, சிற்றம்பலம், புண்டரிக புரம், தனியூர் என்ற பெயர்களால் குறிப்பதுண்டு.
சைவர்களின் தெய்வக்கோயில்
இந்நகர் கோயில் என்ற சிறப்பான பெயரால் குறிக்கப்பெற்றதற்கேற்ப எங்கணும் கோயில்களே நிறைந்து காணப்படும். பிள்ளையார் கோயில்கள்தாம் எத்தனை ! வேடன்பிள்ளையார், செங்கழுநீர்ப்பிள்ளையார், தேரடிப்பிள்ளையார், கூத்தாடும்பிள்ளையார், நரமுகப்பிள்ளையார், முக்குறுணிப்பிள்ளையார், சேத்திர பாலப்பிள்ளையார் இன்னும் பல பிள்ளையார் கோயில்கள் இந்நகருள் உள்ளன. காளியம்மன், மாரியம்மன், தில்லைக்காளியம்மன் போன்ற பல அம்மன்களின் திருக் கோவில்கள் காணப்படுகின்றன. திருப்புலிச்சரம், அனந்தீச்சரம், கமலிச்சரம் போன்ற பெருங்கோவில்களும் உள்ளன. சிவகங்கை முதலான பல தீர்த்தங்களாலும் இத்தலம் சிறப்புற்று விளங்குகிறது.
தில்லையைப்பற்றிய நூல்கள்
தில்லைத்தலத்தின் சிறப்பை விளக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பல உள்ளன. தமிழிலுள்ள கோயிற் புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம், புலியூர்ப் புராணம், தில்லைத் திரு வாயிரம், சிதம்பரச் செய்யுட் கோவை, மும்மணிக் கோவை, சிதம்பர மான்மியம், தில்லைவன மான்மியம், சிதம்பர விலாசம், சிதம்பர ரகசியம், தில்லைக் கலம்பகம், தில்லையுலா, திருக்கோவையார் முதலான நூல்கள் தில்லைச் சிறப்பைத் தெள்ளிதின் சொல்லு வனவாகும். மூவர் பாடிய தேவாரப் பாக்களிலும், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும், திருமூலர் திருமந்திரத்திலும் இத் தலத்தின் பெருமை பேசப் படுகிறது.
வடமொழியில் உள்ள சாந்தோக்யம், கைவல்யம் என்னும் உபநிடதங்களும், சிவரகசிய குதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், ஏமசபா மான்மியம் முதலியனவும் இத் தலச் சிறப்பை விளக்குவனவே.
தில்லைத் திருச்சிற்றம்பலம்
தில்லையில் கூத்தப்பெருமான் குலவும் திருக் கோயிலை ‘அம்பலம்’ என்றும், ‘சிற்றம்பலம்’ என்றும் கற்றுணர்ந்தோர் போற்றுவர். ‘திருச்சிற்றம்பலம்’ என்பது சிவனடியார்க்கு ஒரு சிறந்த மந்திரம். அவர்கள் தேவார திருவாசகத் திருமுறைகளே ஒதத் தொடங்கும் பொழுதும், ஒதி முடிக்கும் பொழுதும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற மறைமொழியை மனமார நினைத்து, நாவார நவிலும் முறை, இன்றும் தமிழகத்தில் உண்டு. இம் மறைமொழி ஓங்காரத்தின், உள்ளுறையாகிய அறிவாற்றலாகிய அருட்பெருவெளியினைக் குறிக்கும். ‘தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய செல்வனாகிய கூத்தப்பெருமான் குரைகழலை ஏத்தும் செல்வமே செல்வம்’ என்று சிந்தை குளிர்ந்து செந்தழிழ்ப் பாவிசைத்தார் திருஞானசம்பந்தர்.
“செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே”
என்பது அவர் அருளிய தேவாரமாகும்.
பாடல்பெற்ற பழம்பதி
தேவாரம் பாடிய மூவர்களால் போற்றிப் பாடப் பெற்ற தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று பாராட்டுவதுண்டு. தில்லையை அம் மூவர்மட்டுமன்றி, மாணிக்கவாசகர் தாம் பாடிய திருவாசகத்தில் இருபத்தைந்து பதிகங்களால் சிறப்பிக்கின்றார். இம் மாணிக்க வாசகர் தில்லைக் கூத்தனைத் தலைவனாகக்கொண்டு திருக்கோவையார் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். திருவிசைப்பாவில் பதினைந்து பதிகங்கள் தில்லையைப் பற்றியனவாகும். திருப்பல்லாண்டில் பன்னிருபாக்கள் இத்தலத்தைப் பற்றியனவாகும். இவையன்றிக் குமரகுருபரர், இராமலிங்க அடிகள் போன்ற அருளா ளர்கள் பாடிய பாடல்கள் அளப்பில. இத் தன்மை யால் தில்லை, பாடல் பெற்ற திருத்தலமாகும்.
தில்லைவாழ் அந்தணர்
‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்று ஒரு பழமொழியுண்டு. தில்லைக் கூத்தனை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் பேறுபெற்ற அடியார்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் முன்னாளில் விளங்கினர். திருச்செந்தூரில் கந்தவேளைச் சந்ததமும் வழிபடும் அந்தணாளர்கள் ஆயிரம்பேர் விளங்கினர். இதனாலேயே ‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்னும் பழமொழி எழுந்தது. இத்தில்லை வாழ் அந்தணருள்ளே தானும் ஒருவன் என்று இறைவன் கூறி இன்புற்றான் என்பர். சுந்தரர் திருத் தொண்டத்தொகை பாட முற்பட்டபோது அடி யெடுத்துக் கொடுத்தருளிய இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று முத லடியை அருளிச்செய்தான். அத்தகைய அந்தணர் மூவாயிரவர் சிறப்புற்று விளங்கிய மூதூர் தில்லைப் பதியாகும்.
காண முத்திதரும் தலம்
முத்தியளிக்கும் சத்தி வாய்ந்த தலங்கள் சிலவற்றைச் சிறப்பாகக் குறிப்பர் அறிஞர். அவற்றுள் அண்ணாமலை, எண்ணிய வளவில் முத்திதரும் அருந்தலமாகும். ஆரூர், பிறக்க முத்திதரும் பெருந்தலமாகும். காசி, இறக்க முத்திதரும் இனிய தலமாகும். தில்லை, காண முத்திதரும் திருத்தலமாகும். இத்தகைய தலத்தில் திருநாளைப்போவார் என்னும் நந்தனர், திருவாசகம் அருளிய மணிவாசகனர், திருநீலகண்ட நாயனர் போன்ற சிறந்த அடியார்களுக்கு இறைவன் முத்திப்பேறளித்தான்.
இத் தலத்தைச் சுற்றிலும் பாடல் பெற்ற சிவத் தலங்களே சூழ்ந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பாகும். இத் தலத்தின் கிழக்கே திருவேட்களமும், தெற்கே திருநெல்வாயில், திருக்கழிப்பாலை, சீர்காழி, புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களும், வடக்கே திருப்பாதிரிப் புலியூரும் அமைந்துள்ளன.
பொன்மேனி பெற்ற மன்னன்
ஆறாம் நூற்றாண்டில் விளங்கிய பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பான் தில்லைக்கூத்தனைத் தரிசிக்க வந்தான். இங்குள்ள சிவகங்கைக் குளத்தில் நீராடித் தனது பெருநோய் நீங்கப்பெற்றான். அவன் மேனியும் பொன்வண்ணமாகப் பொலிவுற்றது. இக் காரணத்தால் அவன் ‘இரணியவர்மன்’ என்று
அழைக்கப்பட்டான். அப் பல்லவ மன்னன் தன் மேனியைப் பொன்வண்ணமாக்கிய தில்லைக்கூத்தன் திருவருளை நினைந்துநினைந்து உள்ளங் கசிந்தான். அப் பெருமான் நடனமாடும் அம்பலத்தைப் பொன்னம்பலமாக்கி மகிழ்ந்தான். அவன் பொன்னம்பலத்தைச் சுற்றிப் பல மண்டபங்களை யமைத்தான்; சுற்று வெளிகளை வகுத்தான். இவனுக்குப் பின்னர்த் தமிழ் காட்டு மூவேந்தர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் பலருடைய திருப்பணிகளால் தில்லைத் திருக்கோவில் பெருங்கோவிலாயிற்று.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Leave a Reply