தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும்

  பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து தலைவர்போல் செயல்பட்டு வருகிறார் தாலின்.  இருப்பினும் அவர் தலைவராகவே ஆக வேண்டும் என்று அவரது அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலைஞர் கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் அவர்தான் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

  இதற்கான காரணம், இளைஞர் அணி என்பதை, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி முதலான பிற 17 அணிகள்போல் கருதாமல் தனிக்கட்சிபோல் நடத்தியமைதான். அரசர்வீட்டுக் கன்றுக்குட்டியாகத் தாலின் இருந்தமையால் இளைஞர் அணி என்பது கட்சிக்குள் உட்கட்சியாகச் செயல்பட்டுப் பெரும் வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவேதான் அவரும், கிழவர் அணி எனப் பிறர் கேலி செய்தாலும்,  இதன் பொறுப்பை வேறு  யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார். அவரது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டமையால் மூத்த தலைவர்களையும் புறந்தள்ள முடிகிறது. மூத்த தலைவர்களின் இளைய  தலைமுறையினர் இளைஞர் அணியில் இருப்பதால் அவர்களும் அமைதி காக்க வேண்டிய சூழல்.

  தாலின் படிப்படியாகத் திணிக்கப்பட்டவர்; அவரைப்போல் பாடுபட்ட பிற இளைஞர்கள் நிலை என்ன?; நெருக்கடி நிலையில் தாலின் துன்புற்றார் எனில்  நெருக்கடிநிலைச் சிறைக்கொடுமையால் உயிரிழந்த சிட்டிபாபு குடும்ப இளைஞர்களுக்கு ஏன் முதன்மை தரவில்லை; பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது தன் மக்களைத் தலைமைச் செயலகம் வராது தடுத்து விட்டார்; ஆனால், இங்கே நேர்மாறாகத் தலைவரின் பிள்ளை  முடி சூட்டப்படுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை தவறு என்றால் தவறுதான். ஆனால், நடைமுறையில் குற்றமாகச்  சொல்லப்பட முடியாது.

  உலகெங்குமே தலைவர்களின் மனைவியர்கள், உடன்பிறந்தார், பிள்ளைகள் என உறவின் முறையினர் ஆட்சியில் அமர்த்தப்படுகின்றனர். இந்தியாவில் அடிமைத்தனத்தினால் இது மிகுதி்யாக உள்ளது. சவகர்லால் நேரு இதனைத் தொடக்கி வைத்தார். தான் கலந்து கொள்ளும் கட்சிக்கூட்டங்களிலும் அரசுக் கூட்டங்களிலும் அயல்நாட்டுத்தலைவர்கள் சந்திப்புகளிலும்தன் மகள் இந்திராவையும் பங்கேற்க வைத்தார். மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்பொழுது 1960இல் அ.இ.கா.கட்சியின் தலைவராக்கினார். அவரது பரம்பரை இன்றும் ஆட்சியில் அல்லது அரசியலில் கோலோச்சுகின்றனர். வட மாநிலங்களில் தகுதியை வளர்த்துக்கொள்ளாச் சூழலிலும் பரம்பரை அடிப்படையில் அரசியல் மரபுரிமையராகப் பலர் மாறியுள்ளனர். அவ்வாறிருக்க, தி.முக.வில் மட்டும் இவ்வாறு நடைபெறுவதைக் குற்றமாகக் கூறுவதில் பொருளில்லை. தி.மு.க.தலைவரின் ஒவ்வொரு பிள்ளையும் சம அளவில் உரிமையைக் கோருவதுதான் சிக்கலே தவிர, ஒப்பீட்டுஅடிப்படையில் இதனைக் குற்றமாகக் கூற இயலவில்லை.

  தி.மு.க.வின் அடுத்த தலைவர்களாக வளர்ந்தவர்களை விரட்டியடித்துவிட்டுத் தாலின் படிப்படியாகத் திணிக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் படிப்படியாகத் தன் பணியறிவையும் பட்டறிவையும் வளர்த்துக்  கொள்ளும் வாய்ப்பு பெற்றார்அதனைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லலாமே!

  படிப்படியாகத் தன் திறமையை வளர்த்துக் கொண்ட தாலின் தலைமைப்பதவிக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தலைவர் கலைஞர் இருக்கும்பொழுதே அவர் வரவேண்டுமான என அழகிரி முதலானவர்கள் கேட்பதும் முறையானதுதான்.

  ஒரு குடும்பத்தில் நலிந்த நிலையில் அதன் தலைவர் இருந்தாலும் குடும்பத்தினர் அவருக்குக் கட்டுப்படுவர். அவர் செயல்படா நிலையில் இருந்தாலும் எல்லார்க்கும் மேம்பட்ட குடும்பத்தலைவர் இருக்கிறார் என அமைதி காப்பர். ஆனால்,  அவர் இயற்கை எய்திவிட்டார் என்றால், குடுமிப்பிடிச்சண்டை வந்து விடுகிறது. குடும்பத்திற்கே அப்படிஎன்றால் கட்சிக்கும் அப்படித்தானே!

 சிலர் தாலின் துணைப்பொதுச்செயலர் அல்லது துணைத்தலைவராக அமர்த்தப்பட்டுப் பின்னர்த் தலைவராகலாம்  என்கின்றனர்.  தாலின் முன்னரே துணைப்பொதுச்செயலராக இருந்தவர்தான். பொருளாளர் என்னும் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்து விட்டு அவர் துணைப்பொறுப்பிற்கு மாற்றப்படுவது உயர்வாகாது.

  செயல்தலைவர் என்ற குரலும் வலிமையாகக் கேட்கப்படுகிறது. அப்படியானால், தலைவர் செயல்படாத் தலைவரா என்ற வினா எழுப்பப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 செயற்குழுத் தலைவர் என்பதுதான் அமைப்புகளில் உள்ள பொறுப்பு. இப்பொழுதே தலைவர்போல் செயல்படும்பொழுது செயல்தலைவர் எதற்கு?

 தலைவர் கருணாநிதி நினைவிழப்பிலும் செயல்பட இயலா நிலையிலும் இருப்பின், நெறியாளர் என்று புதிய பொறுப்பை ஏற்படுத்தி அதனை அவருக்கு வழங்கலாம். பேராசிரியர் க.அன்பழகன் தலைவராகப் பொறுப்பேற்கலாம். இச்சூழலில் தாலின்  பொதுச்செயலராக அமர்த்தப்படுவது சரியாக இருக்கும். பொருளாளர் பதவி மூத்த தலைவர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டும்.

  வந்தவழி எதுவாக இருப்பினும் இன்றைக்குத் தி.மு.க.வில் தொடக்க நிலையிலிருந்து மேல்நிலைவரையும் பாங்காய்ச் செயல்பட்டவர்; ஆட்சியிலும் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பல்வேறு துறைஆளுமைகளும் பெற்றவர்;  என்னும் நிலைப்பாட்டில் தாலின் ஒருவர்தான் உள்ளார்.

  மற்றொரு முதன்மையான காரணம் தாலின் கொலைகாரப் பேராய(க் காங்கிரசு)க்கட்சிக்கு எதிராக உள்ளார். சிலர், அழகிரி, கனிமொழி ஆகியோர் காங்.பக்கம் இருப்பதால் இவர் எதிராக உள்ளார் என்கின்றனர்.  காரணம் யாதாயினும் கொலைகாரக் காங்.கின் எதிர்ப்பாளர் என்ற முறையில் தாலினே தலைமைப் பொறுப்பிற்குத் தக்கவராகிறார்.

 பொம்மையாக இருந்து பொறுப்பிற்கு ஆசைப்படாமல் களப்பணிகளிலும் ஈடுபட்டுத் தகுதியையும் வளர்த்துவருவதால், தாலினை உயர்நிலைக்கு முன்நிறுத்துவதில் தவறில்லை.

  ஊடகங்கள் சிலவற்றில் தாலினைத் தலைவராக முன்னி்லைப்படுத்துவதன் நோக்கம் கலைஞரைத் தி.மு.க.வில் இருந்து விலக்க வேண்டும் என்ற நப்பாசையே!  நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து தாலினின் தகைமையை ஏற்கிறோம். ஆனால், பொறுமை காட்ட வேண்டிய செயல்களில் காலம் தாழ்த்துவதோ, காலம்தாழ்த்த வேண்டிய நேர்வுகளில் விரைவுகாட்டுவதோ தீங்கு தரும்.

 ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுக்கலாமே!

தூங்குக தூங்கிச்செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.   (திருவள்ளுவர், திருக்குறள் 672)

– இலக்குவனார் திருவள்ளுவன்