தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்
தானமும் தவமும் தமிழே!
சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம்.
தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே!
அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின் இடம், ஆற்றல் சமநிலை, ஆற்றல் என விளக்கியுள்ளது. இவை தமிழ்ச் சொல்லான தானத்தின் பொருள்களாகும்.
தமிழ்ச்சொற்களுடன் முன்னெழுத்தாக ‘ஃஸ்’ சேர்த்து சமஸ்கிருதச் சொற்கள் உருவாகியுள்ளன. இதனை மறுதலையாக அஃதாவது சமசுக்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக எண்ணுவது தவறு. சான்றுக்குச் சில பார்ப்போம்.
தனம் > ஸ்தனம்
தாணுநாதன் > ஸ்தாணுநாதன்
தானம் > ஸ்தானம்
தூலம் > ஸ்தூலம்
படிகம் > ஸ்படிகம்
எனவே, தமிழ்ச்சொல் தானத்திலிருந்துதான் ஸ்தான என்னும் சமசுகிருதச்சொல் உருவானது எனலாம்.
“நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்தீதல் தானமாகும்” என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், ” நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது.” என்று பெருஞ்சித்திரனார் விளக்குகிறார்.
தானம், தருமம், கொடை, ஈகை எனப் பழந்தமிழ் மக்கள் கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர். பொதுநோக்கம், கோவில்பணி முதலான நற்செயல்களுக்காகத் தானாக மகிழ்ந்து தருவதைத் தானம் என்றும் கேட்போருக்குக் கொடுப்பதைத் தருமம் என்றும் கல்வி, கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பதைக் கொடை என்றும் எளியோர்க்கும் இரந்தோர்க்கும் அளிப்பதை ஈகை என்றும் சொல்வதே தமிழர் வழக்கு. இவ்வகைப்பாட்டின் மூலமும் தானம் தமிழ் எனப் புரிந்து கொள்ளலாம்.
“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”(தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 50.1)
என்னும் தொல்காப்பியரின் வரையறையின் அடிப்படையில் ‘தா’ என்னும் வேரிலிருந்து உருவான ‘தானம்’ தமிழ்ச்சொல்லே என அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தமிழ், திராவிட மொழிகள் என அழைக்கப்பெறும் தமிழ்க்குடும்ப மொழிகளுக்குத் தாய், ஆரியத்திற்கு மூலம் என்றும் காட்டுவது ‘தா’ என்னும் வேர் மூலம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழ் வேர் மூலமான ‘தா’ என்பதில் இருந்து பிறந்த ‘தானம்’ என்னும் சொல்லும் தமிழாகத்தானே இருக்கும்.
“தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.” என அவரே திருக்குறள் தமிழ் மரபுரை முன்னுரையில் கூறுகிறார்.
மனுநீதி, “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” எனத் தானம் வாங்குவதற்குரிய முதல் தகுதி பிராமணனுக்கே உள்ளதாகக் கூறுகிறது. இதற்குக் காரணமாக அது கூறுவது, உலகில் உள்ள நிலம், சொத்து, உடைமை, உடை ஆகிய யாவும் பிராமணனுக்குரியனவே. எனவே, பிராமணன் தானம் வாங்கினாலும், அது அவனது பொருளே, அவனது உடையே, அவனது சொத்தே, அவன் தயவினால்தான் மற்றவர்கள் அவற்றைத் துய்க்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களோ தம் எலும்பும் பிறர்க்கே என்னும் அன்பு நெறியில் வாழ்ந்து, பாகுபாடின்றி யாவருக்கும் தானம் வழங்குகிறார்கள்.
ஆதலின் தானம் தமிழே என்பதில் ஐயமில்லை.
இனித் ‘தவம்’ குறித்துப் பார்ப்போம்.
தவம், காடு என்னும் பொருளுடைய தவ(dava) என்னும் சொல்லில் இருந்து வந்ததாக அயற்சொல் அகராதி (பக்.236) கூறுகிறது. அஃதாவது காட்டில் மேற்கொள்வதால் அச்சொல்லில் இருந்து தவம் என்னும் சொல் வந்ததாம். தவம் என்னும் தமிழ்ச்சொல்லிற்கே காடு என்னும் பொருள் இருக்கும் பொழுது ஆரியத்தை நோக்கி ஓடுவானேன்?
தவசியர் (1), தவத்தின் (1), தவத்துக்கு (1), தவத்தோற்கே (1). தவம் (10), தவமும் (1) எனத் தவம் பற்றிய சொற்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (திருக்குறள் 19)
எனத் திருவள்ளுவர் தானம், தவம் ஆகிய இரு தமிழ்ச்சொற்களையும் ஒரே குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்.
தவம் என்னும் சொல், வழிபாடு, இல்லறம், கற்பு, வாழ்த்துப்பா (தோத்திரம்), தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு, வெப்பம், காட்டுத் தீ, நோன்பு, நல் வினை, நற் செயல், நற்பயன் (புண்ணியம்) முதலிய பொருள்கள் உடைய தமிழ்ச்சொல்.
தவ வாழ்வு வாழ்பவர்களைத் தவத்தர் என்பதும், தவப்பெண்டிரைத் தவத்தி, தவப்பெண், தவமுதல்வி, தவமுதுமகள், என்றெல்லாம் அழைப்பதும் தவமுதுமகன், தவவீரர் எனத் தவவாழ்வு வாழும் ஆடவரை அழைப்பதும், தவ வாழ்க்கை வாழ்பவர்களைத் தவத்திரு எனக் குறிப்பிட்டு அழைப்பதும் தவப்பள்ளி, தவச்சாலை முதலான குடில்களும் தவவேடம், தவவேள்வி முதலாகிய சொற்களும் ‘தவம் செய்து பெற்ற பிள்ளை’ என்னும் உலகவழக்கும் தவம் என்னும் தமிழ்சொல் மக்கள் வாழ்வில் வேரூன்றி இருப்பதை உணர்த்துகின்றன.
”தானமும் தவமும் தான்செயல் அரிது” என்கிறார் ஒளவையார்.
தவம் என்றால் பற்றை நீக்கி உடலை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுதல். அஃதாவது தவம் என்றால் தன்னை வருத்தி நோன்பு இருத்தல் எனப் பொருள்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (திருக்குறள் 261)
எனத் தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனத் திருவள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் கூறுகிறார். தவம் எனத் தனிஅதிகாரமே அமைத்துள்ளார். சிலர் திருக்குறளில் சமசுகிருதச் சொற் கலப்பு இருப்பதாகக் கூறினாலும் பேரா.சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் திருக்குறள்முழுமையும் தனித்தமிழ்ச் சொற்களே உள்ளதாக நிறுவியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறர் சமசுகிருதச்சொற்கள் எனக் கூறிய பாக்கியம் முதலான சொற்கள் யாவும் தமிழே என உணர்த்தியுள்ளனர்.
அறிஞர்களின் கருத்துகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தவம் தமிழ்ச்சொல்லே என உறுதிபடக் கூறலாம்.
ஆகவே, தானமும் தவமும் தமிழே எனத் தெளிவோம்! தமிழ் வளரத் தானம் புரிவோம்! தமிழ் பரவத் தவப்பணி மேற்கொள்வோம்!
இலக்குவனா் திருவள்ளுவன்
மின்னம்பலம், 11.08.2019
பயனுள்ள கட்டுரை ஐயா! குறிப்பாக தானம், தருமம், கொடை, ஈகை ஆகிய நான்குக்கும் இடையிலான நுட்ப வேறுபாடு ஆயிரம் பொன் பெறும்! மிக்க நன்றி!