திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை
திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை
சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக் கற்கத் தொடங்கும் மாணவர் முதலில் அடைவர்; முடிவில் மலையுச்சிக்குப் போய், மர நிழலில் நின்று, தண்ணென்ற காற்று வீச மெய் குளிர்ந்து, அங்கிருந்தபடியே மண்ணும் விண்ணும் வழங்கும் இன்பக் காட்சியைக் கண்டு மகிழும்போது பெறும் இன்ப உணர்வைப் பெறுவர்.
இவ்வுரை செறிவும், சுருங்கச் சொல்லி உய்த்துணர வைக்கும் இயல்பும் உடையது; ஆற்றல் வாய்ந்த சொற்களை ஆராய்ந்து எடுத்து, ஆழமான பொருளைத் திணித்து, ஆழ்ந்து பலமுறை கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது; தருக்க நூல் முறை வழுவாமல் தடைவிடைகள் பல எழுப்பி, பிற உரையினை மறுத்துத் தன் கருத்தை நிலைநாட்டுகின்றது. இவ்வுரையைக் கற்கும்போது, சிங்க நோக்காக நூலின் முன்னும் பின்னும் நோக்கி, அவற்றை நன்கு நினைவில் கொண்டு கற்க வேண்டிய பகுதிகள் பல இருப்பதை உணரலாம். தூய தமிழ்நடை, பீடு குன்றாமலும் பொருள் தெளிவுடனும் இனிய கருத்தோட்டத்துடனும் நூல் முழுவதும் அமைந்துள்ளது.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள் : பக்கம். 177-178
Leave a Reply