தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்!
பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்?
ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும் யார்மீதும் புகார் கொடுக்கவிலலையே!
இடைத்தரகர் ஒருவர் ஏதேனும்ஒன்றை முடித்துத் தருவதாகக் கூறிப் பணம் பெற்றிருந்து அவ்வாறு முடிக்காமல் ஏமாற்றினால் ஏமாற்றப்பட்டவர் முறையிட்டால் இடைத்தரகரைக் கைது செய்வார்கள். இங்கே யாரும் இடைத்தரகர் குறித்து முறையிடவில்லையே!
பணம் என்றால் பணம்தான் என்றில்லை. பண மதிப்பு உள்ள எதுவாயினும் வாங்க முயல்பவரைத்தான் இதுவரை கைது செய்வர். இப்பொழுது கொடுக்க முயன்றதாகக் கூறிக் கைது செய்துள்ளது ஏன்?
பேரம் நடந்திருந்தது உண்மை என்றால் பணம் கை மாறும் வரை பொறுமையாக இருந்து உரிய ஆணையர் அல்லது ஆணையத்திலுள்ளவர்கள் பணம் பெறும் பொழுது கைது செய்திருக்கலாமே! ஏன், அவ்வாறில்லாமல் முன்னதாகக் கைது செய்தார்கள்?
உ.பி.க்கு ஒரு நடைமுறை, தமிழ்நாட்டிற்கு வேறு நடைமுறை எனத் தேர்தல் ஆணையம் முறை கேடாக நடந்து கொள்ள யார், யார் தூண்டுதல்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
10%இற்கும் குறைவானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய காரணத்திற்காகக் கட்சியையும் சின்னத்தையும் தடை செய்ய யார், தூண்டுதல்? தவறான ஆணை பிறப்பித்த தேர்தல் ஆணையம்மீது நடவடிக்கை இல்லையே! அதற்குக்காரணமான ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை இல்லையே!
50 கோடி உரூபாய், புதிய பணத்தாள்களா? அவற்றை அளித்த வங்கி அதிகாரிகள் மீது, நிதியமைச்சகத்தின் மீது, நிதியமைச்சர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
பணம் கைம்மாறாகப் பெறாமல், எதிர்காலப் பயன்கருதி, பொறுப்பில் உள்ளவர்கள், தவறு புரிந்திருந்தாலும் ஊழல்தானே! அவர்கள் மீது ஏன் கைது நடவடிக்கை இல்லை?
தமிழக ஆட்சியிலும் ஆளுங்கட்சியிலும் பா.ச.க. தலைவர்கள் சொல்வனவே நடக்கின்றன. அவர்கள் ஆழம் பார்ப்பதுபோல் சொல்லிப் பின்னர் அவற்றை நிறைவேற்றுகின்றனரா? அல்லது அச்சுறுத்திப் பணிய வைக்க அவ்வாறு சொல்கிறார்களா? எவ்வாறாயினும் நிலையற்ற ஆட்சிக்கு வழிவகுத்து மக்களாட்சியைக் குலைக்கும் வண்ணம் பேசுவோர் செயல்படுவோர் மீது ஏன் நடவடிக்கை இல்லை? அவர்களையும் கைது செய்து உசாவலாமே!
பொதுவாகக் கையூட்டு பெறுபவர்கள், இன்னார் மூலம் இன்னாரிடம் கொடுங்கள் என்ற சொல்லித்தான் பேரம் பேசி வாங்குவார்கள். அவ்வாறு பேரத்தில் ஈடுபடச்சொன்ன அதிகாரி யார்? அல்லது அதிகாரிகள் யார், யார்?
சுகேசு சந்திரசேகர் முன்பணமாகப் பெற்றதாகக் கூறிய 10கோடி உரூபாய் எந்த வங்கியிலிருந்து எப்பொழுது எடுக்கப்பட்டது? யார், எப்பொழுது பெற்றார்கள்? தொடர்பானவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
நடைமுறைக்கு மாறாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியதன் காரணம், சின்னத்தை மீட்டுத் தருவதாகப் பேரம் பேசலாம் என்றா? அல்லது பேரம் பேசிப் பின்னர் அதை வெளிப்படுத்திக் கைது செய்து அரசியல் வாழ்வை முடிக்கலாம் எனக் கருதியா? அப்படியானால், இரட்டை இலை சின்னத்தை முடக்கியதே சதிச்செயல்தானே! அதற்குக் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை?
சட்ட மன்ற உறுப்பினர்கள, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் எனப் பொறுப்பில் உள்ளவர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் பொழுது ஆளுங்கட்சியைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதேன்? பெரும்பான்மை மக்கள் விரும்பவில்ல என்றால், தேர்தலில் அதைக் காட்டிவிடப் போகிறார்கள். அவ்வாறிருக்க, மக்கள் ஆதரவு என்ற பொய்யான கருதுகை அடிப்படையில் மக்களாட்சிக்கு மாறாக இயங்கும் வண்ணம் அரசு அதிகாரஇயந்திரங்களைப் பயன்படுத்தும் மத்திய ஆட்சியாளர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
அதிமுக அரசு வேண்டா என எண்ணியவர்களும் பாசகவின் மறைமுக ஆட்சித்திணிப்பால், ஆட்சிக்காலம் முழுவதும் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விட்டனர். எனவே, மேலும் குறுக்கு வழிகளில் ஈடுபடாமல், இருக்கின்ற ஆட்சியையும் கட்சி அமைப்பையும் நீடிக்கச் செய்து ஒதுங்கி விடுவது பா.ச.க.விற்கு நல்லது! நாட்டிற்கும்அதுவே நல்லது!
– இலக்குவனார் திருவள்ளுவன்
s.elamurugan says that during 1959-60 I am fortunate enough to hear the voice of c.iakkuvanar at thiagarajar arts college Madurai. Karumuttu thiagarajan chettiar appointed him as professor at tamil department. Kindly read wiki pedia karumuttu thiagarajan chettiar c.r.selvakumar encouraged me to write the article. Karumuttu thiagarajan chettiar built a house for c.ilakkuvanar at Tirunagar.Mamanitharai potruvom is the title of the book about karumuttu thiagarajan chettiar and araneriannal kanda palamudir solai which I have filed at DPL on4.2.2016 awaiting order from DPL. From 15.5.2017 to 19.5.2017 with family staed at mutram of Tanjore and paid tribute eagieson18.5.2017 credit goes to Munaivarma.natarasan and paza nedumaran
பேரா.சி.இலக்குவனார் புதுமனை புகுவிழாவின் பொழுதே “இவ்வீட்டை(த் தியாகராச)ச் செட்டியார் வாங்கித்தந்ததாகக் கூறுவர். இவ்வீடு, திருநகர் கூட்டுறவு வீடுகட்டும் சங்கம்மூலம் கடன்பெற்று வாங்கியது. மாதந்தோறும் தவணை செலுத்தியபின்னரே எனக்கு உரிமையாகும். நான் வீடு வாடகைக்குப் பார்க்க வந்த இடத்தில், மாதவாடகை உரூ 85/இலேயே சொந்த வீடு அமையும் பொழுது எதற்கு வாடகைக்கு என நண்பர்கள் கேட்டு இதை வாங்கச் செய்தனர்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவருடைய தாத்தா பெயர் முத்து. இப்பெயரைத்தான் தன் மூத்த பேரனுக்கு இலக்குவனார் சூட்டியுள்ளார். அந்தப்பெயரையும் கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் பெயரிலுள்ள கரு என்பதையும் சேர்த்து இப்பெயரைச் சூட்டியதையும் குறிப்பிட்டார். எனினும் இன்றளவும் பலரும் அவர் வாங்கித்தந்த வீடு என்றே தவறாகக் கருதுகின்றனர். பேராசிரியர் இலக்குவனாரும், தமிழ்ப்பற்று மிக்க கருமுத்து தியாகராசரும் பல்வேறு கூட்டங்களில் ஒன்றாகப் பங்கேற்றுச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளனர். பேராசிரியர் பணி, தம் கல்லூரிக்குத்தேவை என அவரே பேராசிரியர் இலக்குவனாரை வரவழைத்துத் தமிழ்த்துறைத்தலைவர் பதவியை வழங்கினார். தமிழ்ப்பேராசிரியரை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கருமுத்து தியாகராசர் கூறியதற்குப் பேராசிரியர் இலக்குவனார், ” ஒரே நேரத்தில் தமிழ்ப்பேராசியரான நானும் ஆங்கிலப் பேராசிரியரான வரதாச்சாரியும் கலந்து கொண்டோம். முன்னரே முதல்வர் பதவி வகித்த என்னை விட்டுவிட்டு ஆங்கிலப் பேராசிரியரைத்தான் முதல்வராக ஆக்கியுள்ளீர்கள். தமிழ்ப்பற்றாளர்களே இப்படி நடந்து கொண்டால் பிறர் எங்ஙனம் தமிழ்ப்பேராசிரியர்களை ஊக்கப்படுத்துவார்கள்? ” என்று கேட்டுள்ளார்.
இருப்பினும் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ள அவர் தமிழணர்வை மதித்து அவர் பெயரையும் தம் வீட்டுப் பெயரில் இணைத்துக் கொண்டார்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல
/தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/