திருக்குறளுக்கு உரை திருக்குறளே1/9

      பின்பலம் இன்றிக் குறளாசான் தன்பலம்

     பின்புலமாய்க் கொள்ளுமென் ஆய்வு

முப்பாலுக்கு உரைகள் பல உள. சில உரைகள் நல்ல விளக்கம் தருகின்றன. பல உரைகள் குழப்பம் தருகின்றன. முப்பாலுக்குத் திருவள்ளுவர் உள்ளத்தை எதிரொலிக்கும் பொருள் காண நற்றுணை ஆவது திருவள்ளுவமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்  மேற்கொள்ளப் படுவது  இந்த ஆய்வு. ஃபிரான்சு நாட்டில் அகாதெமி ஃபிரான்செசு என்ற ஓரமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் அனுமதியின்றி எந்த ஒரு புதுச்சொல்லும் ஃபிரெஞ்சு அகராதியில் நுழைய முடியாது. ஆனால் ஆங்கில அகராதி, எம்மாநிலத்தவரையும் வரவேற்கும் தமிழன் போன்று, எந்த மொழியில் இருந்து வரும் புதுச்சொல்லையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இயல்புடையது.  இந்திய மொழிகள் ஆங்கிலத்திற்கு வழங்கிய சொற்களை அகரநிரல் படுத்தி ஓர் இந்தோ-ஆங்கிலியன் அகராதி கூட உண்டு. அது போல,  வசதி படைத்த எவரும் திருக்குறளுக்கு உரை எழுதலாம் என்ற சூழலில், பல  உரைகள் திருவள்ளுவரை நம்மிடம் இருந்து அயன்மைப் படுத்த முற்படுவது இயல்பு. ஆகவே, வள்ளுவரின் உள்ளக் கிடக்கையை அவர் கூறும் குறட்பாக்களை வைத்தே சிக்கெனப் பிடித்துக் கொண்டால் அதுதான் அந்த ஆய்வின் முடிந்த முடிவு எனத் துணிந்து கூறலாம் நேரத்தின் அருமை கருதி, சொற்சுருக்கத்துடன் ஆய்வாளர்களை இலக்காகக் கொண்டு அமைவது இந்த ஆய்வு.     

       உலகத் திருக்குறள் மையத்தின் 28-ஆம் ஆண்டு தொடக்க விழா, வள்ளுவர் கோட்டத்தில் 15-4-2017 அன்று காலை 9 மணியளவில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில்  திருக்குறள் உரைக் கண்காட்சியுடன் தொடங்கியது.

  மேலே,

      கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

     நாவாயும் ஓடா நிலத்து                                  (குறள்.496)

என்று பிறிது மொழிதல் அணி மூலம் உட்தொனியாகக், ‘கடற்படை தரைக்கும் தரைப்படை கடலுக்கும் ஆகா’ எனக் குறள் யாத்த கடற்படை ஆண்ட குறுநில மன்னர் தெய்வப்புலவர் திருவள்ளுவர்; நிலத்தும் ஓடாக் கல் தேர் மீது கம்பீரமாக வீற்றிருந்து கொண்டு  கீழே பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான திருக்குறள் உரைகளைக் கண்டு, ‘எம் மறைமொழிக்கு இத்தனை உரைகளா? ‘ என்று திகைத்துப் போகிறார்.

      உரைக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரை ஆற்றிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார், “திருவள்ளுவர் சொன்னது தான் பொருள். திருக்குறளுக்கு உரை தேவை இல்லை. குறளுக்குரை குறளே!  சான்றாக,  ‘அறத்தா றிதுவென வேண்டா’  (குறள்.37) என்ற குறளுக்கு,’மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்’ (குறள்.973) என்ற குறள் தகுந்த விளக்கம் தரும்” என்றார்.

     அறிஞர் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் கூட ‘குறளுக்குரை குறளே!’  என்று ஒரு சிறு நூல் எழுதியுள்ளார். ஒரே குறளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குறட்பாக்கள் கூட,  கூடுதலான விளக்கம் தரலாம்.சான்றாக, ‘அறத்தாறு’ எனத் தொடங்கும் குறளுக்கு,

      ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

       கேடும் நினைக்கப் படும்’                                               (குறள்.169)

என்ற குறள் நடைமுறை முரண்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். அதனால் தான் ஓர் அறிஞர், “திருக்குறள் ஒரு சுழல் நோக்கி (kaleidoscope) போன்றது. அக்கருவியைச் சிறிது சிறிதாகச் சுழற்றச் சுழற்ற உடைந்த பல வண்ண வளையல் துண்டுகள் அங்கங்கு நகர்ந்து பலவண்ணக் கோலங்களை வெளிப்படுத்துவது போல,  ஒவ்வொரு கோணத்தில் நோக்க நோக்கத் திருக்குறள் தன் பொருளை வலியுறுத்திச் செல்லும்” என்றார்.

     சில குறட்பாக்களையும் அவற்றிற்குக் குழப்பமின்றிப் பொருள் காணத் திருவள்ளுவர் தரும் தீர்வுக் குறட்பாக்களையும் இணைத்துக் காண்போம்.

  1. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

     கணமேயும் காத்த லரிது                                                        (குறள்.29)

 துறவிகளின் கோபத்தைப் பிறர் கண நேரமும் தாங்க முடியாது எனச் சிலர் கூறுகின்றனர்.

துறவிகளுக்குக் கோபமே வராது; வந்தாலும் கணநேரமும் தங்காது என்பது தெய்வப்புலவர் தரும் தீர்வு:

     இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

     துறந்தார் துறந்தார் துணை           

                                    (குறள்.310)

  1. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

     பெருமை உடைத்திவ் வுலகு                                        (குறள்.336)

‘பெருமை’ என்ற சொல்லுக்கு மிகுதி என்ற பொருளை எழுத உரை ஆசிரியர்கள் தயங்குகின்றனர்:

     துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து.

     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

                                     (குறள்.22)

  1. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

     மிச்சில் மிசைவான் புலம்                                                  (குறள். 85)

விதைக்காமலே விளையும் என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதுவோரும் உளர். வித்தின்றி விளையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் பல குறட்பாக்களில் வலியுறுத்துவார்:

     உரனென்னும்  தோட்டியான்  ஓரைந்தும் காப்பான்

     வரனென்னும்  வைப்பிற்கோர்  வித்து

                                  (குறள்.24)    

     அவாவென்ப எல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும்

     தவாஅப் பிறப்பீனும் வித்து                                                (குறள்.360).                                                    

85 -ஆம் குறட்பாவில் ‘புலம்’ தான் எழுவாய் என்று நிறுவும்  பேராசிரியர் மோகனராசு, திருவள்ளுவர் அறிவியல் மேதை தான் என்று நிலை நாட்டுவார்.

(தொடரும்)

வள்ளுவர் கோட்டத்தில் 15-7-2017 அன்று தமிழக அரசின் மக்கள் செய்தித் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்திய 844-ஆவது ஆய்வரங்குக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.

 பேராசிரியர் பி.என்.(இ)டயசு, ஆங்கிலத்துறை, (பணி நிறைவு) இலயோலா கல்லூரி, சென்னை-34 :முகவரி: 261, ஐயாவு(நாயுடு) குடியிருப்பு, அமைந்த கரை, சென்னை-29. தொ.பே.எண்.23630891.

காண்க: திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9