மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி

பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

அதில் தீர்மானித்தபடி, வரும் மாசி 25,2050 / 2019 மார்ச்சு – 9 காரி (சனி) அன்று மாலை 4 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி,திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் அனைத்துக் கட்சியினர் – இயக்கத்தினர் பங்கேற்கும் மனிதச் சங்கிலிப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏழு தமிழர் விடுதலை கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே தமிழ்த்தேசியப்பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

சென்னை – காஞ்சி மாவட்டத் தோழர்கள் சென்னையிலும், புதுச்சேரி – கடலூர் – விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் புதுச்சேரியிலும், நாகை – திருவாரூர் – தஞ்சை – திருச்சி – புதுக் கோட்டை – பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத் தோழர்கள் திருச்சியிலும், மதுரை – தேனிமாவட்டத் தோழர்கள் மதுரையிலும், நெல்லை – தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் நெல்லையிலும், ஈரோடு – கோவை மாவட்டத்தோழர்கள் கோவையிலும், சேலம் – நாமக்கல் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்கள் சேலத்திலும் இந்த மனிதசங்கிலியில் பங்கேற்க வேண்டும். தோழமை அமைப்புகளோடு கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாக ஈடுபட வேண்டும். தமிழ்மக்களை இப்பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்!

 மார்ச்சு 9 – மனித சங்கிலிப் போராட்ட நாளன்று பேரியக்கத் தோழர்களும், தமிழ் மக்களும் அவரவரது சுட்டுரை (Twitter), முகநூல்(Facebook) முதலான சமூக வலைத்தளங்களில் #28YearsEnoughGovernor என்ற குறிச்சொற்றொடர் (Hashtag) பயன்படுத்திப் பதிவுகள் இடவேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், பேச: 7667077075, 9840848594

முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam