திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 3/9 – பி.என்.(இ)டயசு
[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 தொடர்ச்சி]
திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – 3/9
- இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி (குறள்.1060)
நாமக்கல்லார், பாவாணர், பேராசிரியர் மோகனராசு மூவர் உரைகளை அலசுவோம்
‘யாரும் தம்மிடம் வந்து பிச்சை கேட்பவனைக் கோபித்து வெருட்டி விடக்கூடாது அப்படிச் செய்தால் என்ன துன்பம் தமக்கு வந்துவிடும் என்பதை உணர்த்த அந்தப் பிச்சைக்காரன் படுகிற துன்பங்களே போதுமான சாட்சியம்.’ ( நாமக்கல் கவிஞர்)
‘இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாதவிடத்து, இரந்தவன் சினங் கொள்ளாதிருத்தல் வேண்டும். முற்பிறப்பில் தானும் தன்னை இரந்தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே போதிய சான்றாம்’ ( பாவாணர்)
‘பிச்சை எடுப்பவன் சீற்றம் கொள்ளாமல் இருத்தல் வேண்டும். அவனிடம் உள்ள வறுமையே இன்னொருவனிடமும் வறுமை இருக்கலாம் என்பதற்குச் சான்று.’ (மோகனராசு)
நாமக்கல்லார் இக்குறளை இரக்கப்பட்டவனுக்கு எச்சரிக்கைக் குறளாகக் கொள்ள, மற்ற இருவரும் இரப்பானுக்கு எச்சரிக்கைக் குறளாகக் கொள்கின்றனர். பாவாணர், முற்பிறப்பில் ஈயாததைக் காரணங்காட்ட, பின்னவர் இரக்கப்பட்டவனையே பிச்சைக்காரன் ஆக்கி விடுகிறார்.
குழம்பிய நிலையில், குறளாசான் தீர்வை எதிர்பார்க்கிறோம். முதற்பாவலர் தரும் தீர்வு:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு (குறள்.94)
முதற்சீரை, ‘இரப்பானை’ எனக்கொள்ளும் நாமக்கல்லாரைத் திருவள்ளுவர் ஆதரிக்கிறாரா? அல்லது ‘இரப்பான்’ என்ற முதற்சீரை எழுவாயாகக் கொண்ட மற்ற இருவரைக் குறளாசான் ஆதரிக்கிறாரா? மீண்டும் படியுங்கள். நாமக்கல் கவிஞர் உரை முடிந்த முடிவாகி விடுகிறது.
1060-ஆம் குறள் பற்றி இராமலிங்கனார் மேலும் கூறுவதாவது: ” ‘இரப்பான் வெகுளாமை வேண்டும்’ என்பதற்கு இரப்பானை இரக்கப்படுகிறவர்கள் வெகுளாமை வேண்டும் என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில், இரப்பவன் ‘கெஞ்சிக் கேட்பவனே’.அவன் கோபங்கொள்வான் என்று சொல்ல நியாயம் இல்லை. இரப்பவன்மேல் இரக்கப்பட்டவர்கள் கோபித்து வெருட்டி இல்லை என்பது தான் நித்தநித்தம் நடப்பது. மேலும் ‘உலகத்தில் இரப்பவர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுக்கத்தான் வேண்டும்’ என்பதை வலியுறுத்த இந்த அதிகாரம் வகுக்கப்பட்டதேயன்றி, ‘பணக்காரர்கள் பிச்சைக்காரர்களுக்கு இல்லையென்று தான் சொல்லுவார்கள். அதற்காகப் பிச்சைக்காரர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது’ என்பதைச் சொல்வதற்கல்ல. அன்றியும் ‘இல்லையென்றால் இரப்பவன் கோபிக்கக்கூடாது’என்று பொருள் கொண்டால் அவன் படுகிற துன்பத்துக்கு அவனையே எடுத்துக்காட்டாக அவனுக்கே சொல்லுவதாகிறது. அது இலக்கியக் குற்றமாகிறது மட்டுமல்லாமல், பிச்சைக்காரன் தான் படும் துன்பத்திலிருந்து தானே ஞானமடையக் கூடிய நிதானம் அவனுக்கு எப்படி வரும்? ஆதலால் தம்மிடம் வந்து பிச்சை கேட்பவனை யாரும் கோபித்து இல்லையென்று சொல்லக்கூடாது. ஏனெனில் அவன் வறுமையுற்றுப் பிச்சை கேட்டு அலைகிற துன்பங்கள் தமக்கும் வந்துவிடலாம்
என்பதை அவனைப் பார்த்தே அறிந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து.”
இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், ‘திரு.வி.க. ஆய்வாளரா? நாமக்கல் கவிஞர் ஆய்வாளரா?’ என்று எள்ளல் தவறு. ஆய்வாளர் பற்றிக் கவிமணி தேசிக.விநாயகம்(பிள்ளை) கூறுவதை மீண்டும் நினைவு கூர்வோம்:
“ஆராய்ச்சித்துறை என்பது சார் மன்னரின் ஆட்சியோ சுல்தானின்
ஆட்சியோ அல்ல. அது ஒரு குடியரசு. அங்கு எளிய ஒரு தொழிலாளி
தனது கடமையைச் செய்வதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும்
உரிமை உண்டு.”
(ஆய்வுக் கட்டுரைகள்: முனைவர்.அ.கா. பெருமாள், பக்கம்: 43-44)
ஒருவர் சார்ந்த துறையும் அத்துடன் அவர் பெயருடன் இணையும் முன் ஒட்டும் பின் ஒட்டுக்களும் அவர் ஆய்வின் முடிவைத் தூக்கி நிறுத்தாது. திருவள்ளுவரின் அகச்சான்றே முடிந்த முடிவைத் தரும்.
திருவள்ளுவர் தான் யார் என்று நிலைநிறுத்தும் அகச்சான்று, ‘படைச்செருக்கு’ அதிகாரத்தின் முதற்குறளாக அமைகிறது. காமத்துப் பாலில் 250 குறட்பாக்களும் கூற்று உத்தியில் அமைந்துள்ளன. தலைவனும் தலைவியும் நாடகத் தனிமொழி மூலமும், நாடக முன்னிலைக் கூற்று உத்தி மூலமும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். அப்படியிருக்க, முதன் முறையாகப், பொருட்பாலில்
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் ( குறள்.771)
என்று நாடக முன்னிலைக் கூற்று உத்தியைத் திருவள்ளுவர் கையாள்வதேன்? அகத்திணை மரபுகளை மீறி, காமத்துப்பால் தலைவன் தான் தான் என்று நிலை நாட்டவே. அகத்திணை மரபுப்படி, அகப்பாடல்களில் இயற்பெயர் வராது. தொல்காப்பியர்,
‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ (தொல்.1000)
என்பார். ஆனால் உலகப் பொது மறை எழுதும் தேவர் திட்டமிட்டே அகத்திணை மரபுகளை மீறுகிறார். தகை அணங்குறுத்தல் என்ற முதல்அதிகாரத்திலேயே தான் ஒரு போர்வீரன் என்பதை போர்சார்ந்த கலைச் சொற்கள் மூலம் நிறுவி விடுகிறார்.
பேராசிரியர் மோகனராசு, ‘திருக்குறளில் திருப்புரைகள்’1 என்ற நூலில், திருப்புரைகளின் பயன்கள் பற்றிக் கூறுகையில்
“ஒவ்வொரு படைப்பாளியின் மொழியிலும் சில கூறுகள் திரும்பத் திரும்பப் பயின்று வரலாம்; சில கூறுகள் படைப்பாளியின் விருப்பக் கூறுகளாக இருக்கலாம்.இவற்றைக் கணக்கிடுவதன் மூலம் படைப்பாளியையும் இனங் காணமுடியும்”
என நீதிவாணன் அவர்கள் கூறுவதும்(நடையியல்,ப.6) இங்குக் கருதத் தக்கதாகும்.
(தொடரும்)
பேராசிரியர் பி.என்.(இ)டயசு, ஆங்கிலத்துறை, (பணி நிறைவு) இலயோலா கல்லூரி, சென்னை-34
முகவரி: 261, அய்யாவு(நாயுடு) குடியிருப்பு, அமைந்த கரை, சென்னை-29. தொ.பே.எண்.23630891.
‘1.திருப்புரைகள் படைப்பாளனை இனங்காண உதவுகின்றன.
[ தொடர்ச்சி காண்க : திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – 4/9 ]
Leave a Reply